மாண்புமிகு மன்பவுல் அன்வார்

இலக்கியம் கவிதைகள் (All) முதுவைக் க‌விஞ‌ர் ம‌வ்ல‌வி அல்ஹாஜ் ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஆலிம் பாஜில் ம‌ன்ப‌யீ

 

ஆக்கம் : முதுவைக் கவிஞர் ஹாஜி அ. உமர் ஜாஃபர் பாஜில் மன்பயீ

 

வீராணம் ஏரிக்கரை ஓரத்திலே…

வீற்றிருக்கும் நூற்றைம்பது ஆண்டுகளாய்

பேராளன் அல்லாஹ்வின் பெருங்கொடையாம்

புகழ் மிக்கக் கலைக்கூடம் மன்பவுல் அன்வார் !

 

தீராத தீன்பசி தேடிவந்தோர்

திகட்டாத தேனின் ருசி அருந்தி நின்று

பாரெங்கும் மன்பஈக்கள் பறந்து சென்று

புகழ் பரப்பச் செய்யுமிடம் மன்பவுல் அன்வார்

 

கொடிக்காலில் வெற்றிலையைக் கிள்ளி வந்து

கிடைக்கின்ற கூலியிலே தர்மம் தந்து

கொடை வள்ளல் மிஞ்சுகின்ற நெஞ்சங் கொண்டோர்

கொடுத்து வைத்த பாக்கியமே மன்பவுல் அன்வார் !

 

சேற்றினிலே கால்மிதிக்கும் சங்கையாளர்

செடிகொடிகள் ஒடிந்து போகும் மழையின் போதும்

சோற்றினையே மாணவர்க்கு ஊட்டி மகிழும்

சொர்க்கவாச மாளிகையாம் மன்பவுல் அன்வார் !

 

பெற்றெடுத்த பிள்ளையெல்லாம் இருந்தபோதும்

பெற்றெடுக்காப் பிள்ளையென மாணவரை

உற்றபாச நேசமுடன் உருகிக் காக்கும்

உத்தமர்கள் உற்றயிடம் மன்பவுல் அன்வார் !

 

ஞானிகளும் மேதைகளும் வலிமாரெல்லாம்

ஞானப்பால் பிழிந்தெடுத்து நெஞ்சில் ஊற்றி

தோணிகளாய் ஏணிகளாய் தியாகம் செய்த

தூயவர்கள் துயிலுமிடம் மன்பவுல் அன்வார் !

 

நாற்றிசையும் போற்றி நிற்கும் மன்பவும் அன்வார் !

நபிமார்கள் வாரிசுகளின் மன்பவுல் அன்வார் !

ஊற்றெனவே கல்விதரும் மன்பவுல் அன்வார் !

உலகம் புகழ் லால்பேட்டை மன்பவுல் அன்வார் !

 

மூன்றட்கு மேனி கொண்ட மன்பவுல் அன்வார் !

மதி அமானி ஹஜ்ரத் கண்ட மன்பவுல் அன்வார் !

தீன் மமக்கும் சோலை வனம் மன்பவுல் அன்வார் !

திகழும் கியாமத் நிகழும்வரை மன்பவுல் அன்வார் !

ஆமீன்

 

 

( ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரி

150 ஆம் ஆண்டுப் பெருவிழா சிறப்பு மலரிலிருந்து )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *