அருள்வேதம் அல்குர்ஆன்

இலக்கியம் கவிதைகள் (All)

 

அருள்வேதம் அல்குர்ஆன்

திருவை அப்துர் ரஹ்மான்

 

ஹளரத் ஈஸா (அலை) அவர்கள்

காலம் நடந்தது கருவும் வளர்ந்தது

கோலம் மாறிடும் குமரியாம் மர்யம்

நிலையைக் கண்டே நகைத்தனர் மாந்தர்

அலையும் அவரோ அந்நகர் துறந்தார் !

 

பேசும் பொற்கிளி பவளச் செவ்வாய்

ஈசா நபியும் எழிலாய்ப் பிறந்தார்

வருந்தும் தாயை வனப்புடன் நோக்கி

பொருந்தும் மொழியாய்ப் புன்னகை சிந்தித்

தேறுதல் கூறும் செல்லப்பிள்ளை !

ஆறுதல் கொண்டார் அன்னை மர்யம் !

 

வாலிபம் வந்தது வளர்ந்தது ஞானம்

சீலம் செறிந்திடச் சேர்ந்தது மோனம்

மந்தை மாந்தரின் மடமை நீக்கிச்

சிந்தை சிறந்திடச் சித்தங் கொண்டார் !

 

அல்லாஹ் அவரை அன்புடன் தூதராய்

சொல்லால் செயலால் சிறக்கச் செய்தான்

இறைவன் ஒருவனே இணை துணை யில்லான்

நிறைவாம் போதனை நிதமும் செய்தார் !

இன்ஜீல் வேதம் ஏற்றிடும் தூதர்

தன்னருஞ் சேவையால் தழைத்தே உயர்ந்தார் !

 

இல்லா தொன்றால் எதையும் ஆக்கிடும்

வல்லான் இறைவன் வகுத்ததே சட்டம்

அவனின் ஆற்றலை அரும்பெரும் சக்தியை

புவியின் மாந்தர் புரியவே காட்டினான் !

 

 

நன்றி :

குர்ஆனின் குரல் ஜுன் 2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *