கவிஞர் மு ஹிதாயத்துல்லா, இளையான்குடி
பொன்னகர் மதீனா வுக்கு
போய்ச் சேர்ந்த பிறகும் கூட
அண்ணலார் க்(கு) அங்கேஏனோ
அடிக்கடி குரைஷி குலத்தார்
எண்ணிலா இடர்கள் தந்து
இதயத்தை வதைக்கலானார்
நன்னகர் மதீனா வாழ்ந்த
நாயகம் தளர்ந்தா ரில்லை !
நபித்துவம் பெற்ற அண்ணல்
நாயகம் பதிமூன் றாண்டில்
குபிரிருள் நீங்க மக்காக்
குரைஷியர் திருந்தி வாழ
அபிமானம் கொண் டன்பாக
அரிய போதனையே செய்தார் !
எவருமே திருந்த வில்லை !
இன்னலே விளைவித் தார்கள் !
உத்தமர் நபியெங் கோவின்
உயிருக்கும் தீங்கு வைக்க
எத்தர்கள் முயன்றார் மக்கா
இளைஞர்கள் திரண் டெழுந்தார் !
புத்தியை அவர்கள் எங்கோ
புதைத்துதான் வைத்து விட்டு
கத்தியும் ஏந்தி அன்னார்
களம்புக மிக விரைந்தார் !
செல்வத்தின் செழிப்பில் அன்னார்
தினந்தோறும் கொடுத்து வந்த
தொல்லைக்கு முடிவு கட்ட
சுடர்நபி எண்ணங் கொண்டார் !
பல்லினைப் பிடுங்கி விட்டால்
படமெடுத் தென்ன பாம்பு
கொல்லவா செய்யும்; நம்மைக்
கொத்தியும் பயனே இல்லை !
சிரியாவிலிருந்து மிக்க
செல்வத்தை ஈட்டிக் கொண்டு
குரைஷிய ரெல்லாம் அன்று
கூட்டமாய் தான் திரண்டு
அபூசுப்யான் தலைமை யேற்க
மக்கம்வந்து கொண்டிருந்தார்
நபிகள் நாயகம் இந்த
நல்வாய்ப்பைத் தானறிந்தார்
பொருளாதார முற்றுகையை
முதலில் நாம் போட்டுவிட்டால்
எரிகின்ற பகைமை தீயின்
இடுப்பெல்லாம் ஒடிந்து போகும் !
அருமையாம் திட்டம் இஃதை
அண்ணலார் வகுத்து அன்று
திறம்படச் செயல் படுத்த
சிந்தனை செய்ய லானார் !
தன்னலம் கருதா நாட்டின்
தனிநலம் கருதும் ஒற்றர்
நன்மையே கிட்ட அங்கு
நானா திசைகளுக்கும்
எண்ணிய வண்ணம் அண்ணல்
எழிலுடன் அனுப்பி வைத்தே
பொன்னெழில் தீனைக் காக்கப்
புதுப்படை திரட்ட லானார் !
புலியலியின் பின்னால்
புகழ்வீரர் சிலரை
நபிமணிகள் உளவறிய
நாட்டமுடன் அனுப்பி வைத்தார் !
இதற்கிடையில் மக்கா
குரைஷிப் படைத்தலைவன்
அபூசுப்யான் என்பானும்
உளவறியத் தம்முடைய
ஒற்றர்களை அனுப்பிவைத்தான் !
‘பதுருவன்’ என்னுமிடத்தில்
அவர்கள் கண்டார் ஓர் காட்சி !
கிணற்றோரம் அருகே
ஒட்டகத்தின் சாணம்
கிடப்பதையவர்கள் மெல்லக்
கிளறிப் பார்க்கையிலே
மதினாவில் விளைந்த
சிறுபேரீச்ச விதைகள்
அதிலே யிருக்க
அறிந்து கொண்டார்கள் !
எதிரணியின் ஒற்றர்தாம்
இங்கே வந்திருப்பர் !
என்றே யூகித்து
இதனையறிந்த ஒற்றர்கள்
அபூசுப்யானிடம்
அவசரமாய் தெரிவித்தார் !
இதைக்கேட்ட அபூசுப்யான்
ஏதோ மலைத்தவனாய்
தலைதப்பினால் போதுமென்று
தலைவிரி கோலமாய்
வேறு வழியாக
மக்கநகர் போய்ச்சேர்ந்தான் !
ஒட்டகத்தில் முன்சென்ற
முஸ்லீம் ஒற்றர்கள்
வழியில் இரண்டு
சிறுவரைக் கண்டார்கள் !
குரைஷிப் படைகள்
அருகே முகாமிட்டுள்ள
சிறுவர் வாய்மூலம்
செய்தி அறிந்தார்கள் !
அந்த இருசிறுவரையும்
அவர்கள் அழைத்துக்கொண்டு
வந்தார் நபியிடத்தில்
தாமறிந்த சேதிசொன்னார் !
வள்ளல் நபிபெருமான்
வாஞ்சையாய் சிறுவரிடம்
ஒருசில கேள்விகள்
உவகையாய் கேட்டார்கள் !
குரைஷிப் படைகள்
நாளொன்றுக் கெத்தனை
ஒட்டகம் அறுத்துச்
சாப்பிட்டார் எனகேட்க
ஒன்பது ஒட்டகங்கள்
அறுத்திதினம் உண்டதாக
சிறுவர் மொழிந்தார்கள் !
செம்மல்நபி யிதன்மூலம்
குரைஷிப் படைகள்
தொள்ளாயிரமாவது
கூடியிருப்பா ரென்ற
குறிப்பால் உணர்ந்தார்கள் !
அய்யோ முறையென்று
அலறிப் பயந்துகொண்டு
தப்பித்து வந்த
அபூசுப்யான் நிலையெண்ணி
அபுஜகில் சினத்தால்
அனலாய் கொதித்தெழுந்தான் !
போர்வேண் டாமென்று
புத்தியே பலர்புகட்ட
தாம்விரிக்கும் வலையில்
தாம்வீழ இருப்பதை
அறிய மாட்டாமல்
அபுஜகில் துடித்தெழுந்தான்
பகைவெல்ல வந்தார்
படையோடு திரும்பிச் சென்றால்
நகைப்பாரே மக்கம் வாழ்
நங்கையர் எனச் சொல்லி
தொகை தொகையாய் படையோடு
தோள்தட்டி சினத்துடனே
புகைபோல் பகை கக்கி
புறப்பட்டான் களம் நோக்கி !
பதுரெனும் பள்ளத்தாக்கில்
பாங்கான இடத்தைத் தேர்ந்து
எதிரணி வரவைப் பார்த்து
எதிர்த்திட முனைப்பாய் நின்றார் !
கொதிகலன் போல மக்காக்
குரைஷியர் படையும் கொண்டு
அதிரடி கொடுப்போ மென்று
ஆயிரம் பேர் திரண்டார் !
கீர்த்திமிகு ரமலானில்
ஹிஜ்ரியி ரண்டில்
நேர்த்தியோடு மண்ணுலகில்
நீதி காக்க
போர்க் கொடிதான் எழுந்து
பதுரு யுத்தம்
பார்த்தவர்கள் குலைநடுங்க
நடந்த தன்று
(வேறு)
குரைஷியர் படையிருந்த பள்ளத்தாக்கில்
குளிர்மழையால் அந்த இடம் சகதியாக
இரவெல்லாம் தூங்காது குடித்தே ஆடி
எதிரணியின் வல்லமையை நகைத்த வண்ணம்
இறுமாப்பில் இருந்திட்டார் படைவீரர்கள் !
சரியான ஒருபாடம் புகட்ட வேண்டி
தருணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார் !
இறையவனின் அருட்கொடையாம் மக்காதந்த
ஏந்தல்நபி திறமையினை அறிந்தா ரில்லை !
தன்னுடன் தகுதி வாய்ந்தோர்
முஹாஜிரின் எண்பத்தாறு
பொன்னகர் மதீனா வீரர்
இருநூற்றி யிருபத் தேழு
இன்னும் நல் ஒட்டகங்கள்
எழுபதும் குதிரை மூன்றும்
எண்ணினாற் போல வாளும்
எட்டோடு கவசம் ஆறும்
வில்லோடு அம்பும் கொண்டு
விரைந்தனர் வேகத் தோடு !
இரவெலாம் தொழுகை செய்து
இறையவன் அருளை வேண்டி
கருணைமா நபிகள் வெற்றிக்
கனிந்திடும் போங்க ளென்று
அருமையாய்த் தோழருக்கு
அறிவுரை வழங்கிப் பின்னர்
இறையவன் ஏகன் அல்லாஹ்
உதவியே கிடைக்கு மென்றார் !
விடிந்தது காலை வெய்யோன்
விரல்களால் அங்கே மண்டிப்
படர்ந்த வல்லிருளை யெல்லாம்
பளிச்செனக் கழுவிப் பார்த்தான் !
மடலவிழ் தாமரைப் பூ
மங்கையாள் கண் விழித்துச்
சுடுகதிர் நீர் குளித்துச்
சொக்கிடப் புன்னகைத்தாள் !
படையெலாம் குவிந்த அந்தப்
பதுரெனும் பள்ளத் தாக்கில்
விடியலின் வருகையாலே
விருட்டென எழுந்து மக்கள்
மடமடவென்றே தத்தம்
காரிய மாற்றிப் பின்னர்
படைகளை ஒழுங்கு செய்து
பகைப்புலம் ஒடுக்க நின்றார் !
அன்று பிறை ரமலான் பதினேழில்
ஆரம்பமானது பத்ரு யுத்தம் !
பன்னூறுபேர் திரண்டார் திறமைமிக்கார் !
பகைவெல்ல எழுந்திட்டார் குறைஷி யாங்கே !
முன்னூற்றிப் பதிமூன்று பேர்திரண்டு
முஸ்லீம்கள் முழுமூச்சாய் சண்டையிட்டார் !
விண்ணெல்லாம் அதிர்ந்திடவே வேகமாக
விறுவிறுப்பாய் நடந்தது பத்ரு யுத்தம் !
(வேறு)
வேலோடு வாளும் மோத
வில்லோடு கவண்கல் மோத
காலோடு கையிழந்து
கதறினர் மக்கள் வீழ்ந்து
மண்ணெலாம் குருதியாகி
தண்ணீராய் நிறைந்து ஓட
என்னென்று சொல்வேன் அங்கே
எத்துணை கோரக் காட்சி !
தலையெலாம் எகிறிப் பாய்ந்து
தனியுடல் துடித்துச் சாக
மலையெலாம் சரிதல் போல்
மாந்தர்தம் குடல்கள் வீழ
அலை யலையாகப் பாய்ந்து
அதிரடி கொடுத்த தாலே
நிலைதடுமாறி வீழ்ந்தார்
நெடுமரம் போல சாய்ந்தார் !
முன்னிராப் பெய்த மாரி
குரைஷியர் பக்க மெல்லாம்
மண்ணெல்லாம் சகதியாக
இருந்ததால் படைக ளெல்லாம்
முன்னோக்கி அடியெடுக்க
முடியாமல் தவித்ததோடு
பின்னோக்கிச் செல்லலானார்
குரைஷியர் பாவம் அந்தோ ?
அல்லாஹு அக்பர் என்னும்
அருமையாய் ‘தக்பீர்’ சொல்லி
வல்லமையோடு தீனோர்
வாள்கொண்டு போரே செய்தார் !
அல்லாஹ்வின் அருளும் இவர்க்கு
அழகென வாய்த்த தாலே
தொல்லைகள் செய்த மக்கா
குரைஷியர் துடித்து வீழ்ந்தார் !
மஸ்ஊஸ்தொடு முஆத் தென்னும்
மதீனத்து அன்சாரிகள்
இருவரும் போர்க்களத்தில்
இஸ்லாத்தின் விரோதியான
அபுஜகில் எங்கே யென்று
ஆர்வமாய் தேடிச் சென்றார் !
வழியிலே அப்துர் ரஹ்மான்
இப்னு அவ்வை கண்டுபேசி
பழிதீர்க்க அபுஜகிலைப்
பரிவுடன் காட்டுமாறு
இருவரும் அவரிடத்து
இரக்கமாய் வேண்டி நிற்க
வாய்த்ததோர் நல்ல வாய்ப்பு
வாலிபர் இன்பங் கண்டார் !
ஒட்டகம் மீது ஏறி
அபுஜகில் வந்தான் அங்கு
சாடையாய் இதனை அவர்க்கு
சடுதியில் பெரியோர் காட்ட
ஓடினார் மு ஆத் என்பார்
உடைவாளை உருவிக் கொண்டு
பாவியாம் அபுஜகிலை
வாளினால் வெட்டிச் சாய்த்தார்
ஒட்டகை மீதிலிருந்து
அபுஜகில் நிலத்தில் வீழ்ந்தான் !
ஒழிந்தது பகைமை யெல்லாம்
ஒலித்தது வெற்றிக் கீதம் !
அழிந்தது நெஞ்சைக் கவ்வி
அடர்ந்தவல் லிருட் டெல்லாமே !
எழுந்தது இன்ப நாதம் !
எங்கனும் மகிழ்ச்சி வெள்ளம் !
விழுந்தது தடைக்கல் லெல்லாம்
விழித்தனர் மக்க ளன்பாய் !
சத்தியத் தீனின் மார்க்கம்
தழைத்தது ; இறையோன் அன்பால்
புத்தொளி கண்டதாலே
பூரிப்பு நெஞ்ச மெல்லாம் !
உத்தமர் நபியெங் கோவின்
உயர்ந்தநல் திறத்தா லிங்கு
சத்தியம் வென்ற தம்மா
தர்மந்தான் நிலைத்த தம்மா !