உலகை ஆள்பவனின் உயர் வருமான வரிச் சட்டம்

இலக்கியம் கவிதைகள் (All) திருமலர் மீரான் பிள்ளை

 

பேராசிரியர். திருமலர் மீரான்

 

இரண்டரை சதமான

ஏழைவரி ஜக்காத்

இவ்வுலக ஏழைகள்

ஏற்றம் பெறுவதற்கு

பூலோக நாதனின்

பொருளாதாரப் பிரகடனம் !

 

இறைவன் நமக்கு

இறைத்த செல்வத்தில்

இறைப் பிரதி நிதிகளான

இல்லாத மனிதர்க்கு

இதயம் மகிழ ஈவது

இறைவனுக்கு அளிக்கும்

இனிய கடனாகும் !

 

ஒன்றுக்கு பத்தாக

பத்துக்கு நூறாக

இந்த ஜக்காத்

பல்கிப் பெருகி

நல்குபவர்களையே

நாடிவரும் திண்ணம் !

 

வல்லான் இறையின்

பொருள் ஆதாரத்தின்

பெருநீர்ப் பாசனத்தால்

மேட்டு நிலத்திலிருந்து

ஓட்டுத் தாழ்வாரங்களில்

ஓடும் செல்வ நீரால்

அடிவாரங்கள் தழைக்கும் !

 

வருமானத்தின் மாசு

வடுக்களை நீக்கி

மானங்காக்கும்

வெகுமானத் திட்டம் !

 

நலிந்தவர் நலம் பெற

மெலிந்தவர் வளம்பெற

வலிந்தவர் வழங்கும்

வருமானத் திட்டம் !

 

உறுதொழில் செய்ய

உணவு ஊட்டிட

சொத்தில்லாதவர்க்கு

பாராள்பவன் அளிக்கும்

பொருள் ஊட்டச்சத்து !

 

மனித நேயம் சிறந்து

மானுடம் வளம்பெற

மாபெரியோன் வகுத்த

மறுமலர்ச்சித் திட்டம் !

 

பூவுலகம் எங்கும்

பொருள் வினியோகம்

பொங்கிப் பிரவேசிக்க

பூமி ஆள்பவன் நடத்திய

பெரும் பொருளாதாரப் புரட்சி !

 

அபராதத்திற்குப் பயந்து

அரசானையை ஏற்று

வரும் காலக் கெடுவுக்குள்

வருமான வரியை எல்லாம்

தவறாமல் செலுத்துகிறவர்கள்

இறை ஆணையை ஏற்று

ஏழைக் கட்டாய வரியை

தராமல் இருந்தால்

இறை நபி மொழி

எடுத்துக் கூறும்

தண்டனை நிச்சயம் !

 

நன்றி :

முஸ்லிம் முரசு

செப்டம்பர் 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *