பேராசிரியர். திருமலர். மீரான் பிள்ளை. திருவனந்தபுரம்
திரைப்படங்களில்
தமிழ்ப் பண்பாட்டின்
பால் தரிந்த காட்சிகள் !
மாராப்பு மாறிய
பால்குடி மார்புகள் !
முந்தானை இன்றி
படையெடுக்கும் ஆபாசம் !
வயிற்றுப் பிழைப்புக்கு
பிழை செய்யும் வயிறுகள் !
எதுகை மோனையுடன்
ஆடுகின்ற தொடைகள் !
முக்கால் பாகத்திலும்
அரைகுறை ஆடைகள் !
காண்போரைக் கவரும்
கிளுகிளுப்பு தோற்றங்கள் !
இரட்டை அர்த்தத்தில்
அடிபடும் பாட்டுகள் !
போதாக் குறைக்கு
போதை ஊறுகின்ற
கட்டித் தழுவல்கள் !
முத்தங்கள் முனகல்கள்
சத்தற்ற சத்தங்கள் !
“காமாய்” வாழ்வோரை
காமாந்தகர் ஆக்கும்
காமக் களியாட்டங்கள் !
பால் குடிக்கும் பூனை
நடையாக நடந்து
நெளிவு சுழிகளை
வெளிச்சம் போடுகின்ற
மாடலிங் மாதர்கள் !
பெண்ணோடு தொடர்பற்ற
பொருட்களை விற்க
பெண் உடலைக் காட்டும்
விளம்பு அறம் சிதைந்த
விளம்பரப் பரத்தைகள் !
நன்னெறி கலங்க
தளுக்கி குலுக்கி
திறந்த வெளி காட்டும்
பல்கலைக் கழகங்களாக
தெருவில் நடமாடும்
தாய் அவ தாரங்கள் !
நிர்வாணக் காட்சிகளால்
“வெப்” சைட்டுகளை
வெப்ப செட்டுகளாக்கும்
வெம்பிப் பழுத்துப் போன
பிஞ்சு காய் இளைஞர்கள் !
காலம் காலமாக
கட்டிக் காத்திட
பண்பாட்டு கட்டிடங்கள்
நொடிந்து இடிந்து
பாழடைந்து போயினவே !
நன்றி :
ஏழைதாசன்
பங்குனி ( மார்ச் ) 2013