அன்சுல் மிஸ்ரா

இலக்கியம் கட்டுரைகள்

http://www.katturai.com/?p=5612

அன்சுல் மிஸ்ரா
அதிரடிக்குப் பெயர் போன சகாயம் மதுரை ஆட்சியர் பதவியிலிருந்து கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக கடநத ஆண்டு மாற்றப்பட்டவுடன் மதுரை ஆட்சியராகப் பதவியேற்றவர் அன்சுல் மிஸ்ரா.

சகாயம் கிளப்பிய கிரானைட் ஊழல் குற்றச்சாட்டுகளை அதற்குப் பிறகு பதவிக்கு வரும் யாருமே மறைக்க இயலாது என்கிற நிலைமையில் அன்சுல் மிஸ்ரா மேலிட உத்தரவுகளுக்கு இணங்க சில பல நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்.
e4f75604-1157-40fe-8fe7-4e1c03e79aac_S_secvpf[1]
இப்போது ஓராண்டு முடிந்த நிலையில் அன்சுல் மிஸ்ரா மாற்றப்பட்டிருக்கிறார். அரசு அதிகாரிகள் மாற்றப்படுவது நிர்வாகத்தில் சகஜம் தான்.
சகாயம் மதுரையிலிருந்து மாற்றப்பட்ட போது அதனை எதிர்த்து திருநங்கைகள் உள்ளிட்ட ஏராளமானோர் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். “பணி மாற்றம் என்பது அரசின் வழக்கமான ஒன்று தான்” என்று சொல்லி விட்டு கோ-ஆப்டெக்ஸில் தனது அதிரடிகளைத் தொடர சகாயம் சென்று விட்டார்.
இந்நிலையில் மதுரை ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் முதல் வேலையாக அன்சுல் மிஸ்ரா செய்தது என்ன தெரியுமா?
அதுவரை சகாயம் மதுரைக்குச் செய்து கொண்டிருந்த நல்ல காரியங்கள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தியது தான்! ஆமாம்.. வெளிப்படையாகவே சொல்லி விட்டுச் செய்தார். ’தொடுவானம்’ என்ற திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள அனைவரும் மாவட்ட ஆட்சியருக்கு நேரடியாக இலவசமாக புகார் அனுப்பலாம் என்ற திட்டத்தை திறம்பட செயல்படுத்தினார் சகாயம். கிராமப்புற பஞ்சாயத்து அலுவலகங்களில் ஏற்கனவே அரசு கம்ப்யூட்டர்களையும், இணைய இணைப்பையும் வழங்கியிருக்கிறது. ஆனால் அதை வைத்து சொந்தக் காரியங்களுக்கே பெரும்பாலான பஞ்சாயத்து அலுவலக ஊழியர்கள் பயன்படுத்தி வந்தார்கள். இந்த நிலையில் பஞ்சாயத்து அலுவலக ஊழியர்களுக்கு தமிழ் தட்டச்சுப் பயிற்சி அளித்து, கிராமந்தோறும் மக்கள் இலவசமாக புகார் அனுப்பலாம் என்றும் அதனை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலகர்கள் தீர்க்க வேண்டும் என்பது தொடுவானம் திட்டத்தின் நோக்கம். சோதனை ரீதியாக சுமார் 50 கிராமங்களில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தினால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலனடைந்தனர். கிராமப்புற மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டம் அன்சுல் மிஸ்ரா ஆட்சியராகப் பொறுப்பேற்ற முதல் நாளே நிறுத்தப்பட்டது. “கிராமப்புற மக்களுக்கு கம்ப்யூட்டரெல்லாம் தெரியாது” என்பது காரணமாகச் சொல்லப்பட்டது.
அதே அன்சுல் மிஸ்ரா தான் சில மாதங்களுக்குப் பிறகு ‘ஃபேஸ்புக் மூலம் பொதுமக்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்’ என்ற புதிய திட்டத்தைத் துவங்கி வைத்தார். கம்ப்யூட்டரே தெரியாத கிராமப்புற மக்களுக்கு ஃபேஸ்புக் மட்டும் எப்படி தெரியும் என்பது அன்சுலுக்கே வெளிச்சம்.
கிராமங்களிலோ அல்லது அருகிலுள்ள நகரத்திலோ உள்ள தனியார் இண்டர்நெட் செண்டர்களின் நிர்வாகிகளை அழைத்து ஃபேஸ்புக் மூலம் புகார் கொடுப்பது எப்படி என்று பயிற்சியும் அளித்துள்ளார்கள். புகார் மனு ஒன்றுக்கு பத்து ரூபாயிலிருந்து இருபது ரூபாய் வரை அவர்கள் வசூலித்துள்ளார்கள்.
இன்றைக்கு அன்சுல் மிஸ்ரா பேட்டியளிக்கிறார் : “இந்த ஃபேஸ்புக் மூலம் புகார் அளிக்கும் திட்டம் புதுமையானது. வரும் காலத்தில் எனது இந்தத் திட்டத்தை தான் மத்திய, மாநில அரசுகள் பெரிய அளவில் பின்பற்ற இருக்கின்றன” என்று பெருமை பட!
உண்மையிலேயே மத்திய, மாநில அரசுகள் சார்பில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புகார் அளிக்கும் இணைய தளங்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பாட்டில் தான் உள்ளன.
அடுத்து, மதுரை நகரின் மையப் பகுதியில் ‘உழவன் உணவகம்’ என்ற பெயரில் இயற்கை உணவகம் ஒன்றை அமைத்தார் சகாயம். ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சி. மற்றும்  சுதந்திரப் போராட்டத் தியாகிகள் சிலரின் வாரிசுகள் கடும் வறுமையில் இருப்பதைப் பார்த்து அவர்களை இங்கே உணவகம் அமைக்கச் செய்தார். ஓரிரு மாதங்களிலேயே அவர்கள் மாதமொன்றுக்கும் குறைந்தபட்சம் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கத் தொடங்கினார்கள். மதுரை மக்களிடமும் உழவன் உணவகம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இன்றைக்கு ‘அம்மா உணவகம்’ எப்படி அரசு அதிகாரிகளால் தொடர் கண்காணிப்பில் இருக்கிறதோ அப்படித்தான் அன்று ‘உழவன் உணவகம்’ தொடர் கண்காணிப்பில் இருந்தது. மாவட்ட ஆட்சியரும் அடிக்கடி அங்கே விசிட் செய்து நேரடியாக கண்காணிப்பில் வைத்திருந்ததால் அருமையான செயல்பாட்டில் இருந்தது. சகாயம் மாற்றப்பட்ட மறு வாரமே உழவன் உணவகம் கிடப்பில் போடப்பட்டது.
மதுரையில் உள்ள இலங்கை ஏதிலியர் (அகதிகள்) முகாம் மூன்றிலும் ஏராளமான படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். நிரந்தரமான பணி அவர்களுக்குக் கிடைக்காமல், பெயிண்ட் அடிக்கும் வேலைக்கெல்லாம் சென்று கொண்டிருக்கிறார்கள். அதே போல பெண்கள் வீட்டு வேலைகளுக்கெல்லாம் சென்று சிரமப்பட்டுக் கொண்டிருந்த வேலையில், படித்த இளைஞர்களுக்காக BPO ஒன்றைத் துவக்கினார் சகாயம். சுமார் 40 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதே போல ஆடையகம் ஒன்றைத் துவக்கினார். இதன் மூலம் நிறையப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டு, சட்டைகள் தைத்து கொடுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. மதுரையிலேயே உள்ள சில ஏற்றுமதி நிறுவனங்கள் ஆர்டர்கள் கொடுத்தார்கள்.. நல்ல வரவேற்பைப் பெற்ற திட்டங்கள் இவை. எல்லாமே நேரடியாக சம்பந்தப்படவர்களே வியாபாரம் செய்து  கொள்ளும் முறைகள். வருமானத்தில் அதிகாரிகளின் தலையீடே கிடையாது. வெற்றிகரமாகச் செயல்படுவதற்கான உதவிகள் மட்டுமே அதிகாரிகளிடமிருந்து! தையலகத்திற்காக அரசின் சார்பில் தனி கட்டடம் ஒன்றும் முகாமினுள் கட்டப்பட்டு, அதனை திறக்கவிருந்த சமயத்தில் தான் சகாயம் மாற்றப்பட்டார். இன்று வரை அது திறக்கப்படவேயில்லை. தையல் இயந்திரங்களை வைத்து அருகாமை வீடுகளுக்கு ஒட்டுத் துணிகள் தைத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்தப் பெண்கள்.
sagayam[1]
மேலூர் அருகில் ‘மாதிரி கிராமம்’ ஒன்றை தத்தெடுத்து எல்லா வகையிலும் முன்மாதிரி கிராமமாக ஆக்க முன் நடவடிக்கைகள் எடுத்தார் சகாயம். அந்தக் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் முதல் வேலையாக பட்டா மாறுதல்கள் உள்ளிட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் இரண்டு மாதங்களில் சரி செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக பட்டா மாறுதல் உள்ளிட்ட வேலைகளுக்காக அலைந்து கொண்டிருந்த மக்களுக்கு, சுமார் ஆயிரக்கணக்கான பட்டா மாறுதல்கள் உள்ளிட்டவை உடனடியாக பைசா செலவின்றி செய்து கொடுக்கப்பட்டது. அடுத்த கட்டமாக அந்த கிராமத்தில் ‘ஸ்மார்ட் கார்டு’ ஒன்றினை அனைவருக்கும் கொடுத்து அதன் மூலம் அரசு சம்பந்தப்பட்ட அனைத்து சான்றிதழ்களும் இலவசமாக பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம் என்பது போன்ற திட்டங்கள் செயல்படுத்த ஆரம்பித்த சமயத்தில் தான் மாற்றலுக்கு உள்ளானார் சகாயம். அத்தனையும் கிடப்பில் போடப்பட்டன.
மாற்றுத் திறனாளிகளுக்காக ‘ஊன்றுகோல்’ திட்டம், திருநங்கைகளுக்காக பல்வேறு நலத்திட்டங்கள், கிராமப்புற கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணர கிராமிய கலை நிகழ்ச்சி என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் சகாயம். அனைத்து திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுவிட்டன.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட ‘இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சித் திட்டம்’ தற்போது ‘நாம் நமது பூமி’ என்ற NGO இயக்கத்தால் மதுரையில் தனியே நடத்தப்படுகிறது. சமீபத்தில் கூட க்ரூப் 2 தேர்வில் இங்கு பயிற்சி பெற்ற இரண்டு மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சியடைந்து பணியில் சேர்ந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தி.
இதைப் போல பல பல நற்காரியங்கள். அனைத்துமே அன்சுல் மிஸ்ரா பதவியேற்றவுடன் கிடப்பில் போடப்பட்டன. பாதிப்பு என்னவோ பொது மக்களுக்கு தான்.
ஆனால் அன்சுல் மிஸ்ரா ஒரு ‘மீடியா டார்லிங்’. எப்படியோ மீடியாவின் மூலம் ஒரு நல்ல இமேஜை மட்டுமே பில்டப் செய்து வைத்துள்ளார் என்கிறார்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல ஊழியர்கள்.
அதே போல மின்சார ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கினார் என்பது நிரூபணமானதும் அவரைக் கூப்பிட்டு லஞ்சம் வாங்கிய அனைவரிடத்திலும் திரும்பக் கொண்டு போய் கொடுக்கச் செய்திருக்கிறார். அவர் திரும்பக் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே அனைத்து மீடியாக்களிலும் ‘வித்தியாசமான தண்டனை’ என்ற பெயரில் இந்தச் செய்தி பரப்பப்பட்டது. தனக்குக் கீழே பணி புரியும் ஒரு அரசு ஊழியர் லஞ்சம் வாங்கி நிருபணம் ஆனவுடன் ஒரு கலெக்டராக இவர் செய்திருக்க வேண்டியது என்னவோ அவரை பணி இடை நீக்கம் செய்திருக்க வேண்டியது. சட்டமும் அதைத்தான் சொல்கிறது. ஆனால் என்னவோ பள்ளிக்கூடத்தில் குறும்பு செய்த மாணவனை தண்டிக்கும் சட்டாம்பிள்ளை போல இந்த விஷயத்தில் நடந்து கொண்டது அரசு அலுவலகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இது சரியா என்று சிலர் முதலமைச்சர் அலுவலகம் வரையில் புகார் எடுத்துச் சென்றதும் இப்போது துறை ரீதியான நடவடிக்கையை அந்த அலுவலர் மீது எடுத்திருக்கிறார்கள். ‘லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆனார்’ என்று ஒரு பெட்டிச் செய்தியாக வந்திருக்க வேண்டியதை தனது விளம்பரப் பிரியத்தினால் தலைப்புச் செய்தியாக ஆக்கிவிட்டார் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.
நிர்வாக ரீதியாகவும் அன்சுல் மிஸ்ராவின் மீது கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பல குற்றங்கள் வைக்கிறார்கள். மாநகராட்சி அலுவலக ஊழியர்கள் பலரின் மீது இவர் நடவடிக்கை எடுத்ததே மேயருக்கும் இவருக்கும் எழுந்த ஈகோவினால் தான் என்கிறார்கள். கீழ்நிலை அரசு ஊழியர்கள் தவறிழைத்து மாட்டும் போது அவர்களுக்கும் மேலதிகாரிக்கும் மெமோ கொடுப்பது இவரின் ஸ்டைலாம். இதே ரீதியில் பார்க்கப் போனால் இவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஊழியர்கள் மாட்டும் போது இவருக்கே அல்லவா மெமோ கொடுக்க வேண்டும்? என்று லாஜிக்கலாக கேள்வி கேட்கிறார்கள் விபரமறிந்த மதுரை கலெக்டரேட் ஊழியர்கள்.
பரபரப்பான கிரானைட் ஊழல் வழக்கில் அதிரடியாக பலர் கைது செய்யப்பட்டாலும், தொடர்ந்து வழக்கினை எதிர்பார்த்த அளவிற்கு எடுத்துச் செல்ல இயலவில்லையாம். இதற்கு உள்ளடி வேலைகள் பலவும் காரணம் என்று பேசப்படுகிறது.
‘மாமதுரை போற்றுவோம்’ என்ற பெயரில் மதுரை நகரில் நடத்திய விழாவிலும் எக்கச்சக்க புகார்கள். தனியார் நிறுவனங்கள் பலவற்றிடம் கட்டாய வசூல் நடத்தப்பட்டிருக்கிறது. யார் யார் எவ்வளவு தொகை தர வேண்டும் என்று கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே மீட்டிங் போட்டு பேசப்பட்டதாம். தனியார் விழாவை அரசு விழா போல பிரமாண்டப்படுத்தி வீண் செலவுகள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அவரின் மேல் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் கூட பல தரப்பட்ட புகார்களை தொடர்ந்து ஆதாரப்பூர்வமாக மேலிடத்துக்கு அனுப்பியதே அவருடைய ட்ரான்ஸ்ஃபருக்குக் காரணம் என்கிறார்கள் விபரமறிந்த வட்டாரத்தினர்.
புதிதாக ஆட்சியர் பொறுப்பேற்கவிருக்கும் எல்.சுப்ரமணியன் நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவராம். அவராவது மதுரை மக்களுக்கு உண்மையிலேயே பயன்படும் விஷயங்களைச் செய்வாராக!
கட்டுரையாளர் : தேள்


முனைவர்-… க… சரவணன்.
அலைபேசி: 9787059582
தனி மின்னஞ்சல்: tamizperasiriyar@gmail.com
skype: ksnanthusri
http://www.ksnanthusri.wordpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *