_ திருமலர் மீரான் –
இந்தியாவில் அதிகமாக
மழை பொழியும் இடம்
சிராப் பூஞ்சியா? இல்லை
முதிர்க் கன்னிகள் வாழும்
ஏழை இல்லங்கள் !
அன்று முல்லை படர
தேரையே கொடுத்தான்
அவன் பாரி !
இன்று பூவை படர
ஏக்கர் லாக்கர் குக்கர்
கார் ரெப்ரிஜிரேட்டர் என
ஊரையே கேட்கிறான்
இவனோ விய பாரி !
மயிர் உதிர்ந்ததற்காக
மானம் போனதாக
உயிர் விட்ட மான்கள்
காட்டில் வாழ்ந்தன !
வருமானத்திற்காக
தன் மானம் விற்கும்
மருமான்களோ
வீட்டில் வாழ்கின்றன !
தகை கணவர்களுக்கு
பகை பீடித்ததால்
நகை ஓவியங்கள்
புகையுண்டு போயின !
இன்றைய மருமான்கள்
மகளுகாக அப்பா
வாங்கி நல்கும்
தட்டு முட்டுச் சாமான்கள் !
திருமணத்திற்கு முன்னர்
வளைய வளைய வந்தவர்கள்
வரதட்சணை நோய் வர
வளைக் கரத்தை வளைக்கின்றனர்
திருமண தினத்தில்
மணப்பெண் புன்னகையுடன்
கணவனை நோக்குவாள்
அவனது கண்களோ
பொன்னகையை நோக்கும் !
நவீனக் கணவர்கள்
நல்ல கணக்கர்கள்
கலியாணத் தினத்தன்று
கன்னியின் கழுத்தில்
கிடக்கும் ஆபரணங்களை
கச்சிதமாய் கணக்கெடுப்பர் !
விலைக்கு வாங்கப்பட்டவர்கள்
மீட்டாத காரணத்தால்
வீட்டு வீணைகள்
வீணாய் கிடக்கின்றன !
விறகாய் எரிகின்றன !!