பிரியாவிடை

இலக்கியம் கவிதைகள் (All) திருமலர் மீரான் பிள்ளை

 

திருமலர் மீரான்

 

இறை காதலின்

விரக தாபத்தால்

எங்கள்

இதய மலர்கள்

பச்சை மகரந்தங்கள்

சிந்த

ஆன்மீக நிக்காஹ்

நடத்திய ரமலானே !

 

அன்றொரு நாள்

புனித இரவில்

அர்ஷிலிருந்து

வஹிக் குழந்தைகளை

தெளஹீதின் தென்றலில்

தாலாட்டி

தாஹா நபியிடம்

தந்த

மாதத்தாயே !

 

உனது

வருகைக்குப் பிறகே

படித்துறைகள் காணாத

எங்கள்

செல்லப் பிள்ளைகள்

வேதம் படித்தன !

செல்வப் பிள்ளைகள்

ஜக்காத்தென்னும்

ஞான ஸ்நான

துறைகள் கண்டன !!

 

உனது

பாதங்களின் ஸ்பரிசத்தால்

பாலைவனமாகிப்போன

மனவெளிகளில் கூட

தக்வா என்னும்

பசும்பயிர் விளைந்தது !

உந்தன்

சுவாசக் காற்றில்

எங்கள்

நாடி நரம்புகள்

பாவக்குளிர் காய்ந்தன !

ஐம்புலன்கள்

அருள்மனம்

நுகர்ந்தன !!

 

நெருப்பின்றி எரியும்

வயிற்றடுப்புகளின்

வெம்மையை

இல்லாமையால்

பொங்கும்

நெஞ்சலைகளின்

கொதிப்பினை

உணர வைத்த

ஞானத்தாயே !

 

அன்று

பாவச் சுமையால்

கனத்துக் கிடந்த

எங்கள்

இதயங்களெல்லாம்

உனது

நல்வரவில்

இலேசாயின !

 

இன்று

அவை மீண்டும்

கனக்கத் தொடங்கின

பாவங்களின்

பாரத்தாலல்ல !

பிரிவின்

ஏக்கத்தால் !!

 

நன்றி :

முஸ்லிம் முரசு

ஜுலை 1982

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *