அப்பாஸியக் கலீபா ஸஃப்பாஹ், தம் அமைச்சர், பெருமக்கள் புடைசூழத் தம் பூங்காவில் உல்லாசமாகப் பவனிவந்து கொண்டுள்ளார். அன்று கலீபா மிகவும் மகிழ்ச்சிகரமாகக் காணப்பட்டார். தம்மைச் சூழ வந்துகொண்டிருப்பவர்களுடன் அன்புடன் உரையாடிக் கொண்டு வந்தார்.
அப்பொழுது அவருடன் வந்து கொண்டிருந்தவர்களில் அவரின் மிகப்பெரும் விரோதியின் மகன் இளவரசர் இப்ராஹீமும் இருந்தார். அவருக்குக் கலீபா உயிர்ப்பிச்சை வழங்கி அவரை அன்புடன் ஆதரித்து அவருக்குத் தம் அரண்மனையிலேயே தங்க இருப்பிடம் நல்கிக் கெளரவித்து வந்தார்.
இப்பொழுது கலீபா இப்ராஹீமை நோக்கி “இப்ராஹீம் ! நீர் உம் வாழ்வில் உன்னதமான மனிதர்கள் எவரையேனும் சந்தித்துள்ளீரோ ?” என்று வினவினார்.
அதற்கு இப்ராஹீம் “அமீருல் மூமினீன் அவர்களே ! ஆம்; சந்தித்துள்ளேன்” என்று கூறினார்.
‘யார் அவர்?” என்று வினவினார் கலீபா.
“தாங்கள் தாம். என் தந்தை தங்களின் கொடிய விரோதியாக இருந்த போதினும் என்மீது அந்த விரோதத்தைப் பாராட்டாது என்னை அன்போடு அரவணைத்து எனக்கு ஆதரவு அளித்தீர்கள். அந்த நன்றியை நான் ஒரு போதும் மறப்பதற்கில்லை” என்று பதில் கூறினார் இப்ராஹீம்.
”அதிருக்கட்டும் வேறு எவரையேனும் சந்தித்துள்ளீரோ?” என்று ஆவலோடு வினவினார் கலீபா.
“ஆம் சந்தித்துள்ளேன் என்று பதில் கூறினார் இப்ராஹீம்.
“யார் அவர்?” என்று கேட்பதுபோன்று அங்குக் கூடியிருந்தோர் அனைவரும் இப்ராஹீமை இமை கொட்டாது நோக்கினர்.
கலீபாவும் இப்ராஹீமை நோக்கி “யார் அவர்? விரைவில் கூறும். அவரைப் பற்றி அறிந்து கொள்ள நான் பெரிதும் ஆவலாயுள்ளேன்” என்று சற்று உணர்ச்சியோடு கூறினார்.
இப்ராஹீம் பேச்சைத் தொடர்ந்தார்.
“கலீபா அவர்களே ! நான் தங்களுக்கு அஞ்சி மாறுவேடம் புனைந்து ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்த காலம் அது. என்னை எவ்வாற்றானும் பிடித்துத் தருமாறு தாங்கள் போர் வீரர்களுக்கு ஆணை பிறப்பித்திருப்பதாகவும் அவர்கள் நாடு நகரங்கள், பட்டி தொட்டிகள் ஆகிய அனைத்திலும் புகுந்து என்னைத் தேடி வருவதாகவும் எனக்கு ஒரு நாள் செய்தி கிடைத்தது.
எனக்கு என்ன செய்வதென்றே விளங்கவில்லை. சிற்றூர்களில் இருந்தால் நிச்சயம் அகப்பட்டுக் கொள்ள வேண்டியது தான். பேரூர்களுக்குச் சென்றால் கும்பலோடு கும்பலாக எவர் கண்ணுக்கும் தெரியாது மறைந்து விடலாம் என்று எண்ணிக் கூஃபாவுக்கு ஓடினேன்.
இரவோடு இரவாக ஓடிவந்த களைப்பின் காரணமாக நான் ஓர் இல்லத்தின் முகப்பில் போய் மயக்கமுற்று விழுந்து விட்டேன். நான் எவ்வளவு நேரம் மயக்கமுற்ற நிலையில் இருந்தேனோ அறியேன்.
கண்களைத் திறந்து பார்த்தபொழுது நான் பட்டு மெத்தையில் படுத்திருப்பது தெரியவந்தது. அதனை என்னால் நம்பவே இயலவில்லை. கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தேன். ஆம்; அது பட்டு மெத்தைதான். என் அருகே ஒருவர் வீற்றிருந்து எனக்கு விசிறிக் கொண்டிருந்தார்.
நான் கண் விழித்ததைப் பார்த்ததும் அவர் என்னை நோக்கி, “மகனே! நீ யார்? உனக்கு என்ன நேர்ந்தது?” என்று பரிவோடும் பாசத்தோடும் வினவினார்.
அப்பொழுது நான் அவரை நோக்கி, “உயிருக்கு அஞ்சி இங்கு ஓடி வந்துள்ளேன். எனக்கு உயிர்பிச்சை அளியுங்கள்” என்று கூறினேன்.
அம்மனிதர் அதுகேட்டு வேறு யாதொன்றும் என்னிடம் வினவாது “மகனே ! ஒன்றுக்கும் அஞ்சாதே. அதோ ஓர் அறை காலியாகத்தான் உள்ளது. அதில் நீ எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கித் தலை மறைவாக வாழ்ந்து வரலாம். நீ அங்கிருப்பதை ஒருவரும் அறியமாட்டார்கள்” என்று கூறினார்.
அவ்விதமே நான் அவ்வறையில் தங்கி அவர் எனக்கு அன்புடன் அளித்து வந்த உணவை உண்டு அமைதியாக என் வாணாட்களைக் கழித்து வந்தேன்.
சில நாட்களாக அவர் நான் தங்கியிருந்த அறைக்குச் சரியாக வரவில்லை. வைகறையில் அவர் சிறிது உணவெடுத்துக் கொண்டு வேகமாக வெளியே செல்வதும் இரவில் பெரும் ஏமாற்றத்தோடும் களைப்போடும் இல்லம் திரும்புவதுமே சில நாட்களாக வழக்கமாயிருந்தது.
இதனைக் கண்ணுற்ற நான் அவருக்கு என்ன துன்பம் ஏற்பட்டுள்ளதோ தெரியவில்லையே. அவருடைய இல்லத்தில் அவருடைய உணவை உண்டுகொண்டிருக்கும் நான் அதைப்பற்றி சிறிதளவேனும் விசாரித்து அவரின் துன்பத்தில் பங்கு கொள்ளாது அவரின் துன்பத்தில் அவருக்கு ஆறுதல் கூறாது இருப்பது அழகல்லவே என்று கருதி ஓரிரவு அவரை அணுகி அவருடைய துன்பத்திற்கான காரணம் யாது என்று வினவினேன்.
அதற்கு அவர், “அதை ஏன் கேட்கிறாய் மகனே ! உன்னுடைய துன்பமே உனக்குப் போதும், போதும் என்றிருக்கும் பொழுது ஏன் என்னுடைய துன்பத்தையும் உன் மூளையில் கொண்டுபோய்த் திணிக்கப் போகிறாய்? என்னோடு என் துன்பம் தொலையட்டும். நீ அமைதியாக இரு” என்று கூறினார்.
அதற்கு நான், “தங்களின் இல்லத்தில் தங்கி தங்களின் உணவை உண்டு கொண்டிருக்கும் நான் தங்களின் துன்பத்திலும் பங்கு கொள்வதுதானே முறை. தாங்கள் அதனை என்னிடம் கூறத்தான் வேண்டும்” என்று அழுத்தமாகவும் உள்ளன்போடும் கூறினேன்.
அப்பொழுது அவர் தன் வாயைத் திறந்து ஒரு சில சொற்கள் கூறினார். ”அவ்வளவுதான் என் தலையில் இடி விழுந்தது.”
இவ்வாறு கூறி நிறுத்தினார் இப்ராஹீம். உடனே என்ன? என்ன? என்று ஆங்கிருந்த அனைவரும் ஆவலோடு இப்ராஹீமை வினவினார்கள். கலீபாவோ கற்சிலைபோல் வீற்றிருந்தார்.
இப்ராஹீம் மீண்டும் பேச்சைத் துவக்கினார்.
“அந்த மனிதர் என்னை நோக்கி ‘மகனே ! நீ இளவரசன் இப்ராஹீமைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கலாம். அவன் என் தந்தையைக் கொன்று விட்டான். அதற்குப் பழி வாங்கவே நான் இத்துணைக் காலமாக அலைந்து கொண்டுள்ளேன். எனினும் அவன் என் கைவசம் சிக்கவில்லை.
இப்பொழுது கலீபா ஸஃப்பாஹ்வும் அவனைப் பிடித்துத் தருபவருக்கு நாற்பதாயிரம் திர்ஹங்கள் அன்பளிப்புச் செய்வதாக நாடெங்கெணும் பறை முழக்கியுள்ளார். அவன் இந்நகரிலேயே ஒளிந்து கொண்டிருப்பதாக இப்பொழுது பரவலாகப் பேசப்படுகிறது. எனவே அவனைத் தேடித்தான் ஒவ்வொரு நாளும் சென்று வருகிறேன். எனினும் அவன் அகப்படவில்லை.
அவனை நான் பிடித்துக் கொடுப்பின் எனக்குக் கலீபாவிடமிருந்து நாற்பதாயிரம் திர்ஹங்கள் அன்பளிப்பாகவும் கிடைக்கும். நானும் அவன் மீது பழியைத் தீர்த்துக் கொள்ள வாய்ப்பும் ஏற்படும் என்று கூறினார்.
அப்பொழுது என் மூளை சக்கரவாகமாகச் சுழன்றது. என் தலைவிதியை நான் நொந்து கொண்டேன். புலிக்குப் பயந்து சிங்கத்தின் குகைக்குள் நுழைந்தது போன்று என் நிலைமை ஆகிவிட்டது. இந்நிலையில் என்ன செய்வதென்றே எனக்கு விளங்கவில்லை.
“நீ இவரின் உப்பைத் தின்றுள்ளாய். நீ இவருடன் பொய்மையுடன் நடந்து கொள்ளக்கூடாது” என்று என் உள் மனம் அறிவுரை பகர்ந்தது. “உண்மையுடன் நடந்து கொண்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்” என்று என் வெளி மனம் எனக்கு எச்சரிக்கை செய்தது. இரண்டுக்கும் இடையில் கிடந்து நான் சில கணம் தத்தளித்துத் தடுமாறி கொண்டிருந்தேன்.
அதன்பின் என்னையே நான் ஒருவாறு தேற்றிக்கொண்டு என்ன ஆனாலும் சரி; உண்மையை ஒளிவு மறைவின்றிக் கூறிவிடுவதே உண்ட சோற்றுக்கு இரண்டகம் செய்யாதிருப்பதாகும் என்று எண்ணி அவரை நோக்கி “பெரியீர் ! நீங்கள் தேடித் திரியும் அந்த இளவரசன் நான் தான். என் பெயர் இப்ராஹீம். நான் தான் உங்களின் தந்தையைக் கொன்றவன்” என்று கூறினேன்.
அது கேட்ட அவர் ஒரு வெடிச் சிரிப்புச் சிரித்து விட்டு “என்ன ! உனக்கு இந்த இளமைப் பருவத்திலேயே வாழ்க்கை அலுத்துப் போய் விட்டதா? உன் மனைவி, மக்களுடன் கோபித்துக் கொண்டு வந்துள்ளாயா?” என்று சற்று வேடிக்கையாக வினவினார்.
அப்பொழுது நான், “இதனை வேடிக்கையாகக் கூறவில்லை. உண்மையைத் தான் ஒளியாது கூறுகின்றேன். என் பேச்சை நம்புங்கள், நான் தான் இளவரசன் இப்ராஹீம். நான் இந்நகரின் ஆளுநராக இருந்த பொழுது இன்ன காரணங்களுக்காக உங்களின் தந்தையைக் கொன்றேன்” என்று கூறினேன்.
அதைக் கேட்டதும் அவரின் முகம் பேயறைந்தவன் முகம் போல் ஆனது. சரேலென அவர் உள்ளே பாய்ந்தார். சரி தான்; இன்றோடு நம் வாணாள் முடிவுற்றது. இதுவும் நல்லது தான். அனாவசியமாக அஞ்சி, அஞ்சி வாழ்வதைவிட ஒரேயடியாகச் செத்து மடிவது நல்லதுதான். அதுவும் அன்னமிட்ட கையினாலேயே சாகடிக்கப் பெறுவதும் நல்லதுதான் என்று எண்ணினேன்.
உள்ளே நுழைந்தவர் விரைவில் திரும்பினார். அவர் என்னை நோக்கித் துன்பம் தோய்ந்த குரலில் “நீர் இனிமேல் என் கண் முன்னே இருப்பது நல்லதல்ல ஏனெனில் நான் ஒரு வேளை உணர்ச்சி வயப்பட்டு என்னை அறியாமல் உமக்குக் தீங்கு விளைவித்து விடலாம் என்று அஞ்சுகிறேன்.
ஆதலின் இந்த உணவுப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு இக்கணமே இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்று எவ்வாறேனும் உம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும். இதற்குமேல் நான் உமக்கு உதவ இயலாததற்குப் பெரிதும் வருந்துகிறேன்” என்று நா தழதழக்கக் கூறி என் கையில் உணவுப் பொட்டலம் ஒன்றைத் திணித்தார்.
அடுத்த கணம் அவரின் பாதவடிகளில் வீழ்ந்து என் கண்ணீரைக் காணிக்கை வைத்துவிட்டு நான் அவ்விடத்தை விட்டும் அகன்றேன். என் தலை மறையும் வரை அவர் என்னையே இமைகொட்டாது பார்த்துக் கொண்டு நின்றார். நானும் தலை தப்பி ஓடினேன்”.
இவ்வாறு தம் கதையைக் கூறிமுடித்தார் இப்ராஹீம். அங்கிருந்தோர் அனைவரும் வியப்புக் கடலில் மூழ்கினர்.
( வரலாற்றில் சில பொன்னேடுகள் எனும் நூலிலிருந்து )
எழுதியவர் : பாத்திமா ஷாஜஹான்
வெளியீடு : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
முதற்பதிப்பு : 2001