ஒளுவின்றி குர் ஆனை தொடலாமா?

இலக்கியம் இஸ்லாமியக் கட்டுரைகள் கீழை ஜஹாங்கீர் அரூஸி

 

Scan (1)
                         கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.
எனதருமை முஸ்லிம் சமுதாயமே!
 
எனது கேள்விக்கான பதிலை எதிர்பார்க்கும் வகையில் இந்த எழுத்தாக்க விவாதத்தை துவக்கியுள்ளேன்,
 
உங்களது கருத்தையும் பதிவு செய்யுங்கள் இறைவன் நாடினால் நம் எல்லோருக்கும் ஒரு தெளிவான அறிவு கிடைக்கட்டும்.
 
நீண்ட காலமாக நமக்குள் இருந்து வரும் திருக்குர் ஆன் தொடர்பான பிரச்சினைகளில் இது மிகவும் முக்கியமானது.
 
அதாவது நமது கரங்களில் தவழும் இறைவேத நூலை ஒளுவில்லாமல்,குளிப்பு கடமையான நிலையிலும்,பெண்கள் தங்களது மாதவிடாய் காலத்திலும் எவ்வித சுத்தமும் இல்லாமல் கூட திருக்குர் ஆனை தொடலாமென்றும்,ஓதலாமென்றும், 
 
நவீன காலத்து வேத விற்பனர்கள் கருத்துரை பரப்பிக்கொண்டிருக்கும் சூழலில் எமது விவாதம் துவங்கியுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..
 
சுத்தமில்லாமல் குர் ஆனை தொடக்கூடாது,ஓதக்கூடாது என்றால் மாற்றுச்சமுதாய மக்கள் எப்படி இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளமுடியும்?
 
அவர்களிடம் குர் ஆனை கொடுத்து படிக்க சொன்னால் தானே அதை படித்து அவர்கள் நேர்வழியின் பக்கம் வரமுடியும் என்பது தான் குர் ஆனை ஒளுவில்லாமல் தொடலாம்,ஓதலாம் என்பவர்களின் வாதமாகும்.
 
திருக்குர் ஆன் விசயத்தில் முதலில் முஸ்லிம்களுக்குள் ஒரு தெளிவான நிலைபாடு இருந்தால் தான் மற்ற சமுதாய மக்களுக்கு மத்தியில் மார்க்கத்தை தெளிவாக சொல்ல முடியும்.
 
திருக்குர் ஆனை சுத்தமில்லாமல் தொடக்கூடாது,ஓதக்கூடாது எனச்சொல்லும் மார்க்க பேணிக்கையாளர்கள் கீழ்க்கண்ட வசனத்தை ஆதாரமாக தருகின்றனர்.
 
பரிசுத்தமானவர்களைத் தவிர (மற்றெவரும்)இதனைத்தொடமாட்டார்கள்.(அத்தியாயம்-56,வசனம்-79)
 
பரிசுத்தமானவர்கள் மட்டுமே தொடக்கூடியதுதான் திருக்குர் ஆனாகும் என அல்லாஹ்வே சொல்லிவிட்ட பிறகு சுத்தமில்லாமல் தொடலாம் என்பது இறைவசனத்திற்கு மாற்றமானது என விளக்கமும் கொடுக்கிறார்கள்.
 
சுத்தமில்லாமல் திருக்குர் ஆனை தொடக்கூடாது என்பதற்கு எப்படி இறைமறை வசன ஆதாரம் தரப்பட்டிருக்கிறதோ?
 
அதேப்போல சுத்தமில்லாமல் தொடலாம்,ஓதலாம் என சொல்பவர்களும் அதற்கான இறைவசன ஆதாரத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் நடுநிலையாளர்களின் கோரிக்கை!
 
விவாதம் தொடரும் இன்ஷா அல்லாஹ்….
ஒளுவின்றி குர்ஆனை தொடலாமா? ( விவாதம்-2)

 
                         கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.
பரிசுத்தமானவர்களைத் தவிர (மற்றெவரும்)இதனைத்தொடமாட்டார்கள்.(அத்தியாயம்-56,வசனம்-79)
சுத்தமில்லாமல் திருக்குர் ஆனை தொடக்கூடாது என்பதற்கு எப்படி இறைமறை வசன ஆதாரம் தரப்பட்டிருக்கிறதோ?
 
அதேப்போல சுத்தமில்லாமல் தொடலாம்,ஓதலாம் என சொல்பவர்களும் அதற்கான இறைவசன ஆதாரத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் நடுநிலையாளர்களின் கோரிக்கை!
 
நமது கட்டுரையை படித்து விட்டு BHARATH GRAPICS என்ற மின்னஞ்சல் வாசகர்,
 
 திருக்குர்ஆன் உலக மக்களுக்கு இறங்கியதா?அல்லது முஸ்லிம்களுக்கு இறங்கியதா?
 
77,78 இறைவசனம் என்ன சொல்கிறது?என்று வினா தொடுத்தவர் குறிப்பிட்ட வசனத்தின் அத்தியாயத்தை குறிப்பிடவில்லை.
 
நாமும் 77,78 வசனங்கள் உள்ளடக்கிய அத்தியாயங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தோம்,
 
BHARATH GRAPICS வாசகர் குறிப்பிட்டுள்ளபடி அர்த்தம் பொதிந்த வசனங்கள் இல்லை,
 
மாறாக அத்தியாயம் 27ன் 77வது  வசனத்தில் ‘இன்னும் நிச்சயமாக இ(ந்தக்குர்ஆனான)து,விசுவாசங்கொண்டோர்களுக்கு நேர்வழியாகவும்,அருளாகவும் இருக்கின்றது.’என்றுதான் குர் ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
திருக்குர் ஆனின் இரண்டாவது அத்தியாயமான சூரத்துல் பகராவில்,’ இது வேதமாகும்,இதில் எத்தகைய சந்தேகமுமில்லை.பயபக்தியுடையோருக்கு (இது)நேர் வழி காட்டியாகும்.(வசனம்- 2)
அவர்கள் எத்தகையோரென்றால்;மறைவானவற்றை நம்பிக்கை கொள்வார்கள்.தொழுகையையும் நிறைவேற்றுவார்கள்;நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நம் கடளையின் படி)செலவும் செய்வார்கள்.(வசனம்- 3)
நாம் குறிப்பிட்டுள்ள வசனங்கள் அனைத்துமே அல்லாஹ்வை முதலில் நம்பிக்கை கொண்டு,பின்னர் அவனது வேத நூலை பின்பற்ற வேண்டுமென்றுதான் விளங்குகிறது.
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட இறையச்சம் உள்ளவர்களுக்கு மட்டுமே திருக்குர் ஆன் நேர் வழி காட்டும் என்ற சூரத்துல் பகராவின் இரண்டாவது வசனத்திற்கு,
மாற்றுச்சமுதாய மக்களுக்கும் திருக்குர் ஆனை கொடுக்கலாம் என்ற கொள்கையுடையவர்கள் என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்கள்?
மாரிமுத்து என்ற வாசகர், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு சென்ற எனக்கு குர் ஆனின் தமிழ்பிரதி ஒன்றை தந்தார்கள்.
இதை படித்துப்பாருங்கள்;இஸ்லாம் மார்க்கத்தைப்பற்றி தெரிந்து கொள்வீர்கள் என்றனர்.
குர் ஆனை திறந்து பார்த்தேன் அதில் ஒரு பக்கம் தமிழும்,மறுபக்கம் அரபியிலும் இருந்தது.
எனக்கு அரபி வாசிக்கத்தெரியாது,தமிழ் வார்த்தைகளை படித்தேன்,ஆனாலும் எனக்குள் ஒரு சந்தேகம்?
அரபு எழுத்தில் உள்ளதற்கான அர்த்தங்கள் தான் இது என்பதை எப்படி நம்புவது?எனக்கேட்டிருந்தார்.
இவரது கேள்விக்கு மாற்றுச்சமுதாய மக்களுக்கும் குர் ஆனை கொடுக்கலாம் என வாதிடுவோர் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்.
விவாதம் தொடரும் இன்ஷா அல்லாஹ்….
உங்களின் மேலான கருத்துக்களை sjahangeerh328@gmail.comஎன்ற மின்னஞசலுக்கு அனுப்பவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *