(பீ எம் கமால், கடையநல்லூர்)
இதோ ! நான் வருகிறேன் !
அருள் வசந்தத்தை
சுமந்து கொண்டு
உங்கள் மன வயலில்
விதைப்பதற்காக
இதோ நான் வருகின்றேன் !
என்னை வரவேற்கக்
காத்திருப்போர்களே !
உங்கள் வாய்களிலிருந்து
வசவுகளைத் துப்பிவிடுங்கள் !
நாவுகளிலிருந்து
பொய்களைத் துப்பிவிடுங்கள் !
என்
பிறைக்கீற்றுக் கரங்களில்
பூரணச் சந்திரனை
பொத்தி எடுத்து வருகினேன் !
அதனுள்ளே
ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த
ஓரிரவை
உங்களிடம்
கொண்டு வருகின்றேன் !
கண்ணீரால் உங்களின்
கறைகளைக் கழுவ
கற்றுக் கொடுக்க
வருகின்றேன் !
பசித்துணியால் உங்கள்
பாவங்களைத் துடைக்க
பத்தியம் கொண்டு
வருகின்றேன் !
சாத்தானை விலங்கிட்டுச்
சந்தியில் நிறுத்த
சாவி கொண்டு
வருகின்றேன் !
அவனோடு கூட்டுச் சேர்ந்து
என்னை
அவமதிக்காதீர்கள் !
என்னைப் பார்க்க
விண்ணை நோக்கும்
உங்கள்
கண்ணைப் பறிக்க அவன்
எத்தனிப்பான் !
அவனுக்கு இடம் கொடுத்து
இடறிவிடாதீர்கள் !
ஆலிமின் வேடமிட்டு
அவன் வந்து பல்லிளிப்பான் !
மாயப் பல்லிளிப்பில்
மயங்கி விடாதீர்கள் !
பள்ளிவாசல் கஞ்சிப்
பாத்திரத்தில் அவன் வருவான் !
கள்ளிப் பால்தந்து
காராம்பசுப் பாலென்பான் !
பாவ நெருப்பணைக்கப்
பட்டினிநீர் கொண்டுவருகிறேன் !
உங்கள் ஆன்மாவுக்கு என்
அமுத நீர் ஊட்டுங்கள் !
ஒவ்வொரு ஆண்டும்நான்
உற்றுப் பார்க்கிறேன் !
பூமரத்தோடு நான்
புறப்பட்டு வரும்போது
உங்களில் சிலர்
நான் வரும் வீதியில்
சாமரத்தோடு
சாத்தானை வரவேற்று
சட்டம் பேசவைக்கும்
சதியினை என்சொல்ல ?
உங்களில் சிலருக்கு
துட்டுக்குத் தீனை
துணிந்து விலைபேசி
கட்டுக் கட்டாய்ப் பணம்
கறந்து சேர்ப்பதற்கு
என்மாதம் பொன்மாதம் !
எச்சரிக்கை யாய்இருப்பீர் !
உங்கள்
மனப் பெட்டியோடு கொஞ்சம்
பணப் பெட்டியையும்
திறந்து வையுங்கள் !
அப்போதுதான்
சுவனத்தின் வாசல்
சுததிரமாய்த் திறக்கும் !
தொழுகை விரிப்புக்களை
அழுகை நீரால்
அலசுங்கள் !
அப்போதுதான் நீங்கள்
சுவனப் பன்னீரால்
கழுவப் படுவீர்கள் !
நீங்கள் சிந்தும்
ஒவ்வொரு கண்ணீர்த்துளியும்
ஒருகோடிச் சுவனத்தின்
ஒப்பற்ற விதைகள் !