முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் “ரிங் ரோடு’ அமைக்கும் பணி ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்காலிக ஒரு வழிபாதையால், போக்குவரத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறுகலான மாட்டுவண்டி பாதையில், முதுகுளத்தூரில் இருந்து கடலாடிக்கு போக்குவரத்து நடந்து வருகிறது. இதில் லாரி, பஸ்கள் சென்றால், எதிரே வரும் டூவீலர்கள் ஒதுங்க கூட வழியில்லை. இந்த சிக்கல், 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே நீடிக்கிறது.
மேலும், முதுகுளத்தூர் பஜார் ரோடுகள் குறுகியதாக இருப்பதால், நகருக்குள் வாகனங்கள் வந்து சாயல்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரிக்கு செல்வதில் பெரும்பாடாக இருக்கிறது. இதற்காக 2012 ல், சட்டசபை கூட்ட தொடரில், நிலம் கையகபடுத்தும் பணிக்காக 6 கோடியே 20 லட்ச ரூபாயும், “ரிங்ரோடு’ அமைக்கும் பணிக்காக, 9 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யபட்டது.
ஆனால் இதுவரை “ரிங்ரோடு’ அமைக்கும் பணிக்காக நிலம் கையகபடுத்துதல், டெண்டர் பணிகள் கிடப்பில் உள்ளது. இதனால் முதுகுளத்தூர் வழியாக திருச்செந்தூர், கன்னியாகுமரிக்கு அருப்புக்கோட்டை வழியாக 50 கி.மீ., தூரம் சுற்றி பயணிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், “”நிலம் கையகபடுத்தும் பணியில் ஏற்பட்டுள்ள தொய்வால், “ரிங்ரோடு’ அமைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது”, என்றார்.