தமிழகத்தில் இஸ்லாம்

இலக்கியம் கட்டுரைகள்

  பலாச்சுளையைச் சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலை நீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள்.

  அதுபோன்றே மதக் கருத்துகளையும் உணரவேண்டும்.

சிலர் பலாப்பழத்தின் முன் தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம்.

சிலர் பிசிறுகளை ஒட்டிக்கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது.

மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம்.

ஆனால், உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றதுதான் இஸ்லாம்.

இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது.

ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காண முடியும்.

பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம்; அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தைப் பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால், சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.

இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடி பேர் கூட இருக்கவில்லை.

அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே 10 கோடி மக்களாகப் பெருகினார்கள்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.

தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டியெழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.

 

-அறிஞர் அண்ணா

காஞ்சிபுரம் மீலாது விழாவில்

 

தொகுத்தவர் : ஜே.எம். சாலி

அண்ணாவின் மீலாது விழா சொற்பொழிவுகள் நூலிலிருந்து

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *