அது காயல்பட்டணம் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தமிழர் – அறபு மக்கள் அன்புக்குப் பங்களிப்புச் செய்த இடம். (கீழக்கரையை போல்) அப்போது உலக மகாயுத்த காலம் (1939 – 45) காயல்பட்டணத்துக்குக் கிணறுகள் முழுமையிலும் உப்பு நீர். குடிநீருக்குப் பெரும் தவிப்பு விலை கொடுத்து வாங்கும் அவலம்.
அப்புறம் ஆறு ஆண்டுகளின் பின் யுத்த முடிவில் ஊர் மக்களே ஒரு முடிவுக்கு வந்து ஆறரை லட்சம் திட்டத்தில் தண்ணீர்த் திட்டம் அமைத்தனர். இதற்கெனவே ‘ஐக்கிய முன்னேற்ற சங்கம்’ ஒன்று அப்பாப் பள்ளித் தெரு கனம் அ.க. முகம்மது அப்துல் காதிர் மர்ஹூம் அவர்கள் இல்லத்தில் கூட்டப்பட்டு அவரையே தலைவராகவும் ஆக்கினர்.
இந்த அற்புதமான ‘ஆனா கானா’ அப்போது கொழும்பு இரண்டாம் குறுக்குத் தெருவில் ஒரு காசுக்கடை முதலாளியாகக் கொடி கட்டிப் பறந்தார்.
‘காசுக்கடை’ என்பதற்கே ஒரு தனிக் கட்டுரை எழுதவேண்டும். வைரமும். வைடூரியங்களும், தங்கமும், வெள்ளியும் புரளும் வர்த்தக நிறுவனத்திற்கே அப்படிப்பெயர்.
அப்படிப்பட்ட ஒன்றின் உரிமையாளர் தண்ணீர்த் திட்டத்திற்குத் தலைவரானதும் 29.4.45 ம் ஆண்டு கொழும்பு நகரிலேயே ஆறரை இலட்ச நிதிக்கு அடிகோலப்பட்டது. அப்பொழுதே ஐம்பத்தொரு ஆயிரம் அள்ளி வழங்கினார். ‘ஆனா கானா’ முதலாளி அக்காலத்தில் அத்தனை பெரும்தொகை வழங்கியதை இன்றைக்கு நினைத்தால் யாருக்கும் புல்லரிக்கும். (இப்போது பல லட்சம் மதிப்பாகலாம்)
இதனை எழுதிக் கொண்டிருக்கும் உங்கள் எழுத்தாளரின் 11 வது வயதில் அந்த வள்ளல் பெருந்தகையின் அறிமுகம் எனக்குக் காயல் பட்டணத்திலேயே கிடைத்தது என்றால் அதிசயமே.
என் காலஞ் சென்ற தந்தையார் தன்னிறப்பை முன்கூட்டியே உணர்ந்தோ என்னவோ ‘காசுக்கடை’ முதலாளியைக் கொண்டு காசு சம்பாதித்துக் கொள்’ என்று மறைந்தார்கள்.
சில ஆண்டுகளின் பின்னர் அவர் நிறுவனத்தில் நானும் ஒரு ஊழியனாகினேன். ஆனால் என் கரத்திலோ எழுதுகோல் என்னை ஒரு வர்த்தகனாக்குவதில் அவர் தோற்றுப் போய் என் எழுத்தார்வத்தை ஊக்கினார். ‘தினகர’னுடன் அப்போது தான் நிறைந்த தொடர்பேற்பட்டது. வானொலித் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும் வசதிகள் செய்து கொடுத்தார். ஒரு வர்த்தக ஊழியனுக்குக் கனவிலும் நடக்காத சங்கதிகள் எந்தச் சமயத்திலாவது ‘என்னைப் பற்றியும் இரண்டு வார்த்தைகள் எழுது’ என்று கட்டளையிட்டிருக்க மாட்டார். அவர் வாரி வழங்கிய ஐம்பத்தொரு ஆயிரம் கூட 46 ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் அன்பர் ஷாமு சிஹாப்தீன் மூலம் கிடைத்த ஒரு சிறப்பு மலரிலேயே காணக் கூடியதாகவே இருந்தது.
அத்தனை தன்னடக்கமான வள்ளல் ‘ஆனா கானா’ முதலாளி தண்ணீருக்கு காட்டிய முன்னுதாரணத்தையும் அவருக்குப் பின் நின்று உதவிக்கரம் நீட்டியவர்களின் தாயாளத்தையும் இன்றைய நிலையில் யாராவது கர்நாடக மக்களுக்கு உணர்த்தினால் அங்கிருந்தும் பல ‘ஆனாக் கானாக்’ கள் தலை உயர்த்திக் காவிரியை தமிழக மக்களுக்கு வழிமறிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கிறேன்.
-ஆகஸ்ட் 11. 1991
( மானா மக்கீன் எழுதிய லைட் ரீடிங் எனும் நூலிலிருந்து )