பதிவுத் தபால், பார்சல், மணியார்டர் வாங்குவதற்கு புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் வி. குமாரகிருஷ்ணன் சனிக்கிழமை கூறியதாவது:
கையொப்பமிட்டு வாங்கக்கூடிய பதிவுத் தபால், மணியார்டர், பார்சல் ஆகியவற்றை சம்பந்தபட்ட முகவரிக்கு தபால்காரர் கொண்டு வரும்போது, சூழ்நிலைகள் காரணமாக முகவரிதாரர் இருப்பதில்லை. இதனால் இவை திரும்பவும், தபால் நிலையத்திற்கு கொண்டு வரப்படும். ஓரிரு நாள்களில் இவற்றை முகவரிதாரர் வாங்கிக் கொள்ளாவிட்டால் இவற்றை அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பப்படும்.
இதனால் பயனாளிகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக புதிய நடைமுறை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது முகவரிதாரருக்குப் பதிலாக அவர் விருப்பப்படும் குடும்பத்தினரோ, உறவினரோ அல்லது நண்பரோ ஒருவரிடம் பதிவுத் தபால், மணியார்டர், பார்சல் ஆகியவற்றை தருவதற்கு அங்கீகார ஒப்புதல் கடிதம் பெறப்படுகிறது.
அங்கீகார ஒப்புதல் கடிதப் படிவத்தை அந்தந்தப் பகுதி தபால்காரரிடம் பெற்று படிவத்தைப் பூர்த்தி செய்து கையொப்பமிட்டுத் தர வேண்டும். இந்த ஒப்புதல் கடிதம் 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்,
இது குறித்து விளக்கம் பெற, தபால்காரிடம் அவரவர் போன் மற்றும் செல்போன் எண்களைக் கொடுத்து வைக்கலாம் என்றார்.
பேட்டியின்போது மாவட்ட அஞ்சல் துறை விற்பனைப் பிரிவு அலுவலர் பி. சீத்தாராமன் உடன் இருந்தார்.