பாளையங்கோட்டையில் பக்கீர்கள் நடத்திய சுதந்திர போர்

இலக்கியம் கட்டுரைகள்

 

அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன்

  முழங்காலுக்குக் கீழே தொங்கும் வெள்ளை ஜிப்பா, வேட்டிக்குப் பதிலாக கைலி எனப்படும் சாரம். முக்கோண வடிவில் மடித்து இரண்டு தோளிலுமாக தொங்கும் துண்டு. தலையிலே பெரிய பச்சை தலைப்பாகை. கழுத்தில் நெல்லிக்காய் அளவிலான மணிகள் கோர்த்த மாலை, தாடி கையில் டேப் என்னும் இசைக்கருவி. தோளிலே அரிசி வாங்குவதற்கான ஒரு ஜோல்னா பை, டேப்பைக் காதுக்கு நேராக உயர்த்தி அடித்துக் கொண்டு தெருவில் பாட்டுப் பாடிக்கொண்டு வரும் இஸ்லாமியப் பாணர்களை இன்றும் பார்க்கலாம். அவர்களே பக்கீர்கள் (ஏழைகள்) என்று அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் துறவிகளைப் போல் காட்சியளிப்பவர்கள்.

வட இந்தியாவில்தான் முதன் முதலாக பக்கீர் இயக்கங்கள் ஆரம்பமாயிற்று. சில ஆண்டுகளில் தென்னாட்டின் பல பாகங்களுக்கும் இது பரவியது. மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் கொள்கைகளை எடுத்துச் சொல்லியும், ஆங்கிலேய ஆட்சியின் அபாயத்தை மறைமுகமாக மக்களிடம் விளக்கியும் விடுதலை உணர்வைத் தூண்டி விழிப்புணர்ச்சி கொள்ளச் செய்வது இவர்களின் தலையாய பணியாக இருந்தது.

மங்களூர், வேலூர், கோலார், நந்திதுர்க், திருச்சி, சென்னை, காஞ்சிபுரம், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் பக்கீர்கள் தங்களது முகாம்களை அமைத்திருந்தனர். பகல் நேரங்களில் யாசகர்கள் போல் சென்று படைவீரர்களை அணுகி புரட்சி இயக்கங்களின் செய்திகளை சொல்லிச் செல்வார்கள். திருச்சியில் மாதலிஷா, தஞ்சை அம்மாபேட்டை பகுதியில் நூர் அலிஷா, மதுரையில் முகைதீன் ஷா முதலிய பக்கீர் இயக்கத் தலைவர்கள் பரங்கியர்க்குச் சிம்மசொப்பனமாக இருந்துள்ளார்கள்.

வேலூர் புரட்சிக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் பாளையங்கோட்டை பள்ளிவாசலில் பட்டுத்துணியிலான, பச்சை நிறப் பின்னணியுடன் திண்ணமாக நீல நிறத்துடனும் அதில் மஞ்சள் நிறப் பொட்டுக்கள் அமைந்த கொடிகளையும் பக்கீர்கள் பறக்கவிட்டனர். 1806 நவம்பர் 18 பாளையங்கோட்டை ராணுவ குடியிருப்புப் பகுதியில் மிகுந்த தோரணையுடன் பக்கீர்கள் பிச்சை எடுத்துத் திரிந்ததைப் பார்த்தபோது தமக்கு அது மிகுந்த எரிச்சலை ஊட்டியது என்று மேஜர் வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

வேலூரிலிருந்து பாளையங்கோட்டைக்கு வந்த பக்கீர்கள் மற்ற சூழ்ச்சியாளர்களைக் கலந்து ரகசியக் கூட்டம் நடத்தி இன்னும் 10 நாட்களுக்குள் பாளையங்கோட்டையில் உள்ள ஐரோப்பிய அதிகாரிகளைக் கொல்ல திட்டம் தீட்டினர். திப்பு சுல்தானின் படையில் பணியாற்றிய வீரர்களும், நவாபின் ஆட்களும், பிரெஞ்சுக்காரர்களும் பாளையங்கோட்டைக்கு உதவிக்கு வந்தனர். மதுரை, திருச்சி, செங்கல்பட்டிலிருந்து ரகசியத் தபால்கள் பாளையங்கோட்டையில் தலைமைப் பொறுப்பேற்றிருந்த சுபேதார் ஹைதர் சாகிப்பிற்கு வந்து சேர்ந்தது. ரகசியக் கடிதத்தில் ஒன்று வெள்ளையரிடம் அகப்பட்டது. கோட்டையில் வெள்ளையரைக் கொல்வதற்குச் சதி நடைபெறுகிறது என்பதனை கும்பெனியார் அறிந்து கொண்டனர். சம்பள எழுத்தர் ராமசாமியும் சிப்பாய் எட்டி வீரசிங்கும் பட்லர் அய்யம் பெருமாள் தகவல் தந்ததால் வெள்ளையர் விழித்துக் கொண்டனர்.

1806 நவம்பர் 19 காலையில் மேஜர் வெல்ஸ் பாளையங்கோட்டையில், கோட்டையிலிருந்து அனைத்து வீரர்களையும் ஒருங்கே நிறுத்தினார். தனது கரங்களில் துப்பாக்கியை ஏந்தியவாறு சுதேசி விரர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பறித்தார். சுபேதார் ஷேக் நட்டூர் சுட முயற்சித்தது பலனற்றுப் போயிற்று. படையில் மலபார்க்காரர்கள், கிறிஸ்துவர்கள், ராஜபுத்திரர்கள், இந்துக்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டனர்.

கடவுளின் கிருபையால் தாங்கள் உயிர் தப்பியதாக வெள்ளையர்களே குறிப்பெழுதி வைத்துள்ளனர். பக்கீர்கள் நடத்திய புரட்சி இயக்க சாகசத்தால் கிளர்த்தெழுந்த இஸ்லாமியச் சிப்பாய்கள் அனைவரும் கோட்டையிலிருந்து ஒன்றாக வெளியே அனுப்பப்பட்டனர். விசாரணை முடியும்வரை காவலில் வைக்கப்பட்டனர். கடுந்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். கொல்லப்பட்டனர்.

தங்களது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த கர்னல் டைஸ், லெப்டினென்ட் கர்னல் கிராண்ட் கேப்டன் மெர்சியர், மேஜர் வெல்க் ஆகியோர் சுதந்திரப் பேரெழுச்சி அலையை, கொல்லத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் மதுரையிலிருந்தும் திருச்சியிலிருந்தும் படைகளை வரவழைத்து அடக்கினர்.

பிரிட்டிஷ் இந்தியாவில் வெள்ளையர் ஆட்சிக்கு கலகத்தை ஏற்படுத்திய சாகச நிகழ்ச்சியாக 1806 –ல் பாளையங்கோட்டையில் பக்கீர்கள் நடத்திய புரட்சி அமைந்தது. 1947 ஆகஸ்டு 15-ல் இந்திய திருநாடு விடுதலை பெறுவதற்கு எத்தனையோ துவக்க கால கிளர்ச்சிகள் வரலாற்றில் விரிவாக வெளிவராத சம்பவங்கள். அவைகளில் ஒன்று பாளையங்கோட்டையில் பக்கீர்கள் நடத்திட சுதந்திரப் போர். இந்த நாட்டின் விடுதலைக்காக இஸ்லாமியர்கள் ரத்தம் சிந்திய வீரப்போர், என்றென்றும் எண்ணிப் பார்க்கப்பட வேண்டியது.

 

நன்றி :

முகவை முரசு

டிசம்பர் 31 – ஜனவரி 06, 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *