1910 ல் ஆரம்பிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த 2010 ஜூன் 1 ம் தேதியுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி மாவட்ட நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொன்மைச் சிறப்பும், சரித்திர மேன்மையும் கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் 1910ஜூன் 1ல் உருவாக்கப்பட்டது. முன்பு மதுரை மாவட்டத்திற்குள் ராமநாதபுரம் கோட்டம் இருந்தது. மதுரை மாவட்டத்தின் நிர்வாக பணிச்சுமையை குறைக்கும் விதமாக ராமநாதபுரம் கோட்டத்தை அதிலிருந்து நீக்கி, அதனை கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க சர் வில்லியம் மேயர் முடுவெடுத்தார்.
பட்டுக்கோட்டை வட்டத்தின் தென்பகுதியை தஞ்சை மாவட்டத்திலிருந்து பிரித்தும், நெல்லை மாவட்டத்திலிருந்து சாத்தூர், திருவில்லிபுத்தூர் வட்டங்களை பிரித்தும் ராமநாதபுரம் கோட்டத்துடன் இணைந்து இப்புதிய மாவட்டம் உருவாக்க முடிவானது. ஐந்தாயிரத்து 389 சதுரமைல் பரப்புடன், இருபதுலட்சம் மக்கள் தொகையில் 9 வட்டம் 4 கோட்டங்களுடன் மிகப்பரந்து நிர்வாகச் சுமையில் தவித்து வந்த நெல்லை மாவட்டத்திலிருந்து சாத்தூர், திருவில்லிபுத்தூர் வட்டங்களை பிரித்தெடுத்து ராமநாதபுரத்துடன் சேர்த்தது வரவேற்பு பெற்றது.
புதிய ராமநாதபுரம் மாவட்டமானது மதுரை மாவட்டத்தின் ராமநாதபுரம் கோட்டமும், நெல்லை மாவட்டத்தின் (நெல்லை மாவட்டத்திலேயே தொடர்ந்து இருந்து வரும் சாத்தூர் வட்டத்தின் ஒரு பகுதி நீங்கலாக) சாத்தூர் கோட்டமும், தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டம் அறந்தாங்கிப் பகுதியும் அடங்கியதாக இருக்கும் என வரையறுக்கப்பட்டது. கலெக்டர், மாவட்ட செசன்ஸ் நீதிபதி ஆகியோரை இம்மாவட்டத்திற்கு நியமிக்கவும் முடிவானது. இந்நிலையில் ரயில்போக்குவரத்து மேம்பாட்டுப்பணிகளை கருத்தில் கொண்டு புதிய ராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கும் திட்டம் 1909 ல் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. எனினும் ராமநாதபுரம் கோட்டத்தை பிரித்து ராமநாதபுரம், தேவகோட்டை என இரு கோட்டங்களாக பிரித்திட அரசு ஒப்புதல் அளித்தது.
இதன்பிறகு இங்கிலாந்தில் இருந்த இந்திய அமைச்சர் 1910 மார்ச்சில் புதிய ராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்தார். இம்மாவட்டம் தனியாக இயங்கிட உயர் நீதிமன்றமும் விரும்பியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிடையே ரயில்போக்குவரத்து இல்லாத குறையை கருத்தில் கொண்டு கலெக்டரும், மாவட்ட நீதிபதியும் மதுரை மாநகரிலேயே தங்கள் அலுவலகங்களை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
புதிய ராமநாதபுரம் மாவட்டம் அமைப்பது குறித்து ஏற்கனவே முடிவானதில் தஞ்சை மாவட்டத்து அறந்தாங்கி பகுதியை நீக்கி விட்டு ஏனைய பகுதிகளை மட்டும் கொண்டு புதிய ராமநாதபுரம் மாவட்டத்தை அமைக்க அரசு ஆணை பிறப்பித்தது.
புதிய மாவட்ட பணிக்காக ஜே.எப். பிரியண்ட் என்ற ஆங்கில ஐசிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு, 1910ம் ஆண்டு ஜூன் முதல் நாளில் ராமநாதபுரம் மாவட்டம் உருவானது. இதன்படி ராமநாதபுரம் கோட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, அருப்புக்கோட்டை பகுதிகளும், தேவகோட்டை கோட்டத்தில் திருப்பத்தூர், திருவாடானை, சிவகங்கை மற்றும் திருப்புவனம் பகுதிகளும் கொண்டு இப்புதிய மாவட்டம் இயங்கத் துவங்கின. பின்னர் மாவட்ட தலைநகரிலேயே கலெக்டர், நீதிபதிக்கான அலுவலகங்களும் ஏற்படுத்தப்பட்டன. தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 1984 ஜூலை 17ல் சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களும் பிரிக்கப்பட்டன. பல்வேறு சுற்றுலாப்பகுதிகள், ஆன்மீக இடங்களைக் கொண்டும், அரசியல்வாதிகள், கலைஞர்கள் என புகழ்மிக்க பலரை வழங்கியுள்ள ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2010 ஜூன் முதல் தேதியுடன் நூறு வயதாகிறது.
தமிழக வரலாற்று ஆய்வாளர் கோ. மாரிசேர்வை கூறுகையில் ‘ராமநாதபுரம் மாவட்டம் அமைந்து நூறாண்டுகள் முடிகிறது. பெருமை மிக்க இம்மாவட்டத்திற்கான நூற்றாண்டு விழா 2010 ஜூன் 1ல் அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும். மாவட்டத்தின் பழமை வரலாற்றுத்தகவல்கள் மேன்மைகளை அந்நாளில் மாவட்டம் முழுவதும் கண்காட்சிகளாக நடத்துவதுடன், மத்திய அரசு உதவியில் தபால்தலை வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
நன்றி : தினகரன்