அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன்
ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாயை அன்னியச் செலவாணியாக ஈட்டித்தருகிறது பாஸ்மதி அரிசி. இதில் அதிக மகசூல் தரும் பூஸா பாஸ்மதி மட்டும் ஆயிரம் கோடியைத் தருவது பலரும் அறிந்த செய்தி. ஆனால், இந்த ரகத்தை உருவாக்குவதற்காக இருபதாண்டு காலம் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தமிழர் ஒருவர் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அவர் நெல் ஆராய்ச்சியில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியாகத் திகழும் இ.ஏ.சித்தீக் (74) சூஃபி பெண் கவிஞர் கச்சிப்பிள்ளையம்மாளின் மகன் வயிற்று வாரிசு. இவரது இருபதாண்டு கால அயராத உழைப்பால் உருவான பூஸா பாஸ்மதி ரகம்தான் ஏற்றுமதியில் கொடி கட்டிப் பறக்கிறது. அதன் தரத்துக்கும் விளைச்சலுக்கும் ஈடாக இன்று வரை வேறு பாஸ்மதி ரகம் வெளிவரவில்லை.
இரண்டு, மூன்று மடங்கு அதிக விளைச்சல் தரும் இந்த பாஸ்மதி ரகம், இந்திய ஆராய்ச்சி வரலாற்றில் பெரும் திருப்புமுனை ஆகும். பாஸ்மதி ரகத்துக்கு காப்புரிமைச் சோதனை வந்தபோது, இந்தியாவின் பாரம்பரிய உரிமையை நிலைநாட்டி நமது விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்ததிலும் இவரது பங்கு அதிகம். கலப்பின அரிசி ரகங்கள் வருவதற்கும் இவரே மூல விதை. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் மாணவராக, அவரது வழிகாட்டுதலில் டாக்டர் பட்டம் பெற்று பிறகு அவரது சக விஞ்ஞானியாக உயர்ந்தவர். தில்லியில் இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தில் துணை இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றி ஐந்தாண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். பணிக்காலத்தில் சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் பல உயர்ந்த விருதுகளையும் பதக்கங்களையும் பெற்றுள்ள சித்தீக், இன்றும் தனது குருவாக மதிப்பது எம்.எஸ். சுவாமிநாதனை. குருவுக்கும் சீடர் மீது அபார மதிப்பு, நம்பிக்கை. இருவரும் சேர்ந்து வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏராளம்.
சித்தீக்கின் மனைவி பாத்துமுத்து, இஸ்லாமியப் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். இத்தம்பதிக்கு 3 மகன்கள். மூவரும் மருத்துவம், வேளாண்மை, பொறியியல் துறைகளில் பிரகாசிக்கின்றனர். ஓய்வு பெற்ற பிறகும் மூத்த விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிப் பணி தொடர்ந்து நாட்டுக்குத் தேவை என்பதால் தேசியப் பேராசிரியர் பதவியை உருவாக்கி கெளரவித்து வருகிறது இந்திய விவசாய ஆய்வு நிறுவனம் (ஐ.சி.ஆர்.) ஒரு தலைசிறந்த விஞ்ஞானிக்கு அளிக்கப்படும் தனிப்பட்ட கெளரவம் சித்தீக்கைத் தேடி வந்தது. நாட்டிலேயே இதுபோன்ற கெளரவத்தைப் பெற்றவர்கள் ஏழெட்டுப் பேர்தான் இருப்பார்கள். துணை வேந்தர்களுக்குச் சமமான ஊதியம் மற்றும் வசதிகளுடன் இவர் தனது ஆராய்ச்சியைத் தொடர ஒன்றரைக் கோடியை மானியமாகத் தந்து மத்திய அரசு கெளரவித்துள்ளது.
இப்போது தங்க அரிசி (கோல்டன் ரைஸ்) பற்றிய ஆராய்ச்சிக் குழுவில் உறுப்பினராக உள்ள சித்தீக், பிலிப்பைன்ஸில் உள்ள உலக நெல் ஆராய்ச்சிக் கழகத்தின் அறங்காவல் குழுவுக்கு ஆசியப் பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். ஆழ்ந்த பட்டறிவும் தேர்ந்த ஆய்வுத்திறனும் கொண்ட இந்த விஞ்ஞானியின் தலைமையில், உயிரித் தொழில்நுட்பம் பற்றிய ஆய்வு இருக்கையை உருவாக்கிச் சிறப்பித்துள்ளது ஆந்திர வேளாண் பல்கலைக்கழகம்.
உயிரினங்களின் டி.என்.ஏ ஜீன்கள் ஆராய்ச்சியில், நாட்டிலேயே மிகப் பெரிய நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள தேசிய டி.என்.ஏ கைரேகை மற்றும் பரிசோதனை மையம். முதல் முறையாக சித்தீக்குக்கு ஓர் ஆய்வு கூடத்தை ஏற்படுத்தியது. இவரது இளமைப் பருவம் சோகம் நிறைந்தது. தந்தை இப்ராஹீம் அலி பர்மாவில் வணிகம் செய்து வந்தவர். இரண்டாவது உலகப்போர் காரணமாக அங்கிருந்து பணம் வராமல் தவியாய் தவித்த பல குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று. வறுமையான சூழலிலும், செம்மையான கல்வி பெற வேண்டும் என்ற வைராக்கியத்தை இவரது மனதில் ஆழ ஊண்றியவர் இவரது தாய் பாத்திமா.
சித்தீக்குக்கு 14 வயதாக இருந்த போது அவரது தாயார் இறந்து விட்டார். தாய், தந்தை ஆதரவில்லாத சூழ்நிலையில் பள்ளிக் கல்வியை முடித்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு தாயார் பாத்திமா பெயரால் இளையான்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தலா ரூ. 1 லட்சமும், புதூர் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 50 ஆயிரமும் வைப்பு நிதி செலுத்தி அறக்கட்டளை தொடங்கினார்.
குறுவைக்கும் காருக்கும் அதிக மகசூல் தரும் கண்ணகியைப் பயிரிடுங்கள் என்பது, ஒரு காலத்தில் தமிழகத்தின் மூலை முடுக்களிலெல்லாம் எதிரொலித்த வாசகம். இந்த கண்ணகியைத் தந்தவரும் சித்தீக்தான். இதுபோன்ற சித்தீக்குகள் ஏராளம். அபுபக்கர் சித்தீக் என்பது இவரது முழுப்பெயர். இந்திய திருநாட்டில் சாதனையாளர்களாக பல சித்தீக்குகள் திகழ்ந்து வந்தாலும் சிறுபான்மையினர்களின் சாதனைகளை, தியாகங்களை வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டுவது சமூகத்தில் குறைவாகவே உள்ளது.
நன்றி :
முகவை முரசு
ஜனவரி 28 – பிப்ரவரி 3, 2011