K.A.ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,MPhil.,
எலி பாடுமா? என்னங்க கிலி உண்டாக்குறீங்க ! அது எப்படிங்க எலி பாடும்? என்று கேட்குறீங்களா? கட்டுரையை தொடர்ந்து படிங்க.
பறவையைப் போன்று பாடும் எலியை ஜப்பான் ஒஸாகா பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர் மரபுப் பொறியியல் தொழில் நுட்பம் (Genetic Engineering) மூலம் உருவாக்கியுள்ளனர். எலிகள் குறித்து நடத்திய ஆய்வின் போது எதிர்பாராத விதமாக இந்தப் பாடும் எலி பிறந்ததாக ஆராய்ச்சிக்குழு தலைவர் டாக்டர். அரிகுனி உச்சிமுரா கூறுகிறார். அது மட்டுமல்ல. இந்தப்பாடும் எலிகளைக் கொண்டு மேலும் சோதனைகள் நடத்தி மனிதனைப் போல் பேசும் மிக்கி மவுஸ் எலிகளையும் உருவாக்க முடியும் என்று நம்பிக்கையுடன் டாக்டர் உச்சிமுரா கூறுகிறார்.
ஆஹா ! கிளம்பிட்டாங்கய்யா ! இப்பவே கண்ணைக் கட்டுதேன்னு நடிகர் வடிவேலு பாணியில் நாம் சொன்னாலும் ஆராய்ச்சி தொடர்வது உறுதி. ஒஸாகா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் குழு “எவால்வ்டு மவுஸ் ப்ராஜக்ட்” என்ற ஆய்வில் புதிய உடலமைப்பு கொண்ட எலிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இதற்காக எலியின் மரபுப் பண்புகளைச் சுமந்திருக்கும் டி.என்.ஏவை நகலெடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் ஒரு தவறு ஏற்பட்டது. டி.என்.ஏ தவறுதலாக நகலெடுக்கப்பட்டது. இதனை ஆராய்ச்சிக் குழுவினரும் கவனிக்கத் தவறி விட்டனர்.
அதன் பின்னர் சோதனையில் பிறந்த எலிகளை ஒவ்வொன்றாக சோதனையிட்ட போது அவற்றில் ஒரு எலி பறவையைப் போன்று ஒலியெழுப்பி பாடுவதைக் கண்டு குழுவினர் வியப்படைந்தனர். உடலமைப்பில் மாறுபாடு கொண்ட எலிகளே பிறக்கும் என்று எதிர்பார்த்த டாக்டர் உச்சி முராவும், அவரது குழுவினரும் பாடும் எலி பிறந்தது கண்டு மகிழ்ச்சியில் உறைந்து போய் நின்றனர். இந்தப் பாடும் எலி சாதாரண எலிகளை விடக் குட்டையான கால்களைக் கொண்டதாகவும், டாக்ஸண்ட் எனப்படும் குட்டையான கால்களுடைய நாயின் வாலைப் போன்றதொரு வாலை கொண்டதாகவும் காணப்படுகிறது.
மேற்கு ஜப்பானிலுள்ள ஒஸாகா பல்கலைக்கழகத்தின் ஃப்ராண்டியர் பயோ சயின்ஸ் ஆய்வகத்தில் பேராசிரியர் டகிஷியாகி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாடும் எலிகளை உருவாக்கியுள்ளார். இந்த எலிகளைக் கொண்டு மனிதனைப் போல் பேசும் எலிகளை உருவாக்க தொடர் ஆய்வுகள் அங்கு நடைபெற்று கொண்டிருக்கின்றன. பாடும் பறவைகளை வைத்துப் பல நாடுகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டிருக்கையில் இவர்கள் பாடும் எலிகளைப் பேச வைக்க முயற்சி செய்கின்றனர்.
பறவைகளை விட எலிகள் மூலம் ஆய்வு நடத்துவது எளிதானது. ஏனெனில் எலிகள் மனிதனைப் போன்று பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. மூளை அமைப்பிலும் கிட்டத்தட்ட மனித மூளை அமைப்பை ஒத்திருக்கின்றன. மேலும் உயிர் வாழ்வியல் அடிப்படையிலும் மனிதனைப் போன்றே எலிகள் வாழ்கின்றன. டாக்டர் உச்சிமுரா இந்தப் பாடும் எலியை பல்வேறு சூழ்நிலை மாற்றங்களுக்கு உட்படுத்தியபோது அதன் பாடும் ஒலி மாறுபடுவதைக் கண்டறிந்தார்.
குறிப்பாக பெண் எலிகளுக்கிடையே இந்த எலி அதிக ஒலியெழுப்பி பாடியதைக் கண்டு அவர் வியப்படைந்தார். சாதாரண எலிகளை விட இதனிடமிருந்து அதிக அல்ட்ரா ஒலியலைகள் வெளிப்படுவதையும் அவர் கண்டுபிடித்துள்ளார். “எலிகளைப் பேச வைக்கும் எங்கள் கடின முயற்சிக்கு ‘முட்டாள் தனம்’ என்று மக்கள் கூறினாலும் நிச்சயம் ஒரு நாள் நாங்கள் ஜெயிப்போம். பேசும் மிக்கி மவுஸ் எலிகளை ஒருநாள் உற்பத்தி செய்வோம்” என்று டாக்டர் உச்சிமுரா கண்களில் கனவுகள் மின்னக் கூறுகிறார்.
இனி வருங்காலங்களில் எலி நம் வீட்டிற்குள் நுழையும் முன்னர் “எக்ஸ்கியூஸ்மீ, மே ஐ கம் இன்?” என்று கேட்டுக் கொண்டு நுழையலாம். சாலையில் ஓடும் எலி சைக்கிள் ஓட்டுபவரைப் பார்த்து “பார்த்துப் போடா கஸ்மாலம் வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?” என்று திட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கலி காலம் முத்தி எலியை பாட வச்சிருச்சு.
நன்றி :
முகவை முரசு
டிசம்பர் 31 – ஜனவரி 06, 2011