முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பகுதியில், போதிய மழையின்றி, 2,000 ஏக்கர் பருத்தி விவசாயம் பாதிக்கபட்டு, விவசாயிகள் கடனில் மூழ்கியுள்ளனர்.
பருவமழை பொய்ப்பால் நெல், மிளகாய் சாகுபடியில் இழப்பை சந்தித்த விவசாயிகள், அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பெய்த சிறுமழையை நம்பி முதுகுளத்தூர், ஆணைசேரி, கீழத்தூவல், காக்கூர், புளியங்குடி, பொன்னக்கனேரி, தாழியரேந்தல், உலையூர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2,000 ஏக்கருக்கும் அதிகமாக பருத்தி சாகுபடி செய்தனர்.
தொடர்ந்து மழையின்றி மகசூல் கிடைக்கும் பருவத்தில் பருத்தி காய்கள் கருகி வருகின்றன. கடன் வாங்கி ஏற்கனவே நெல், மிளகாய் விவசாயத்தில், இழப்பை சந்தித்த விவசாயிகள், மேலும் கடனில் மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து காக்கூர் விவசாயி பொன்னுச்சாமி கூறுகையில், “”பருத்தியை, ஆழ்குழாய் கிணறுகளில் கிடைக்கும் தண்ணீரை பாய்ச்சி, காப்பாற்றலாம் என்றால், விவசாயத்திற்காக 8 மணி நேரம் வழங்கபட்ட மின்சாரம், 3 மணி நேரமாக குறைக்கபட்டுள்ளது. இதுவும் முழுமையாக கிடைக்காததால், பருத்தி பாழாய் போனது. பருத்திக்கும் அரசு, நிவாரணம் வழங்க வேண்டும்,” என்றார்.