இந்த மூன்று பட்ஜெட்டில் உங்களுடையது எது…?

இலக்கியம் கட்டுரைகள்

 

ஆடிட்டர் பெரோஸ்கான்

 

அக்டோபர் 2006 க்கான வரவு செலவுத் திட்டம் (Budget)

* வரவுக்கு மீறிய செலவு

* வரவும் செலவும் சரி சமம்

* வரவில் செலவு போக மீத சேமிப்பு

இம்மூன்றில் உங்களுடைய பட்ஜெட் “வரவுக்கு மீறிய செலவு” என்ற முதல் அமைப்பில் இருந்தால், அபாயமணி அடித்து விட்டது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உடனடியாகப் போர்க்கால நடவடிக்கையாக உங்களுடைய செலவினங்களை அதிரடியாகக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், வருமானத்தைக் கூட்டுவது உங்கள் கையில் இல்லை. முயற்சி மட்டுமே உங்களால் செய்ய முடியும். ஆனால், செலவினங்களைக் கட்டுப்படுத்துவது உங்கள் சாய்ஸ்.

வரவும் செலவும் சரி சமம் என்ற அளவில் உங்கள் பட்ஜெட் அமையுமானால், நீங்கள் எச்சரிக்கை உணர்வோடு தேவையற்ற செலவினங்களைக் குறைக்கவும், சேமிக்கவும் முயல வேண்டும். அப்போது தான் உங்கள் வாழ்வில் ஏற்படும் எதிர்பாராத திடீர் செலவினங்களைச் சமாளிக்க முடியும்.

“வரவில் செலவு போக சேமிப்பு” எனும் வகையில் உங்கள் பட்ஜெட் அமைந்தால், நீங்கள் குடும்பப் பொருளாதார நிலையை வெற்றிகரமாக சமாளித்து விடுவீர்கள் என்பது நிச்சயம். உங்கள் குடும்பம் மட்டுமல்ல. நீங்கள் நடத்தும் வியாபாரம், நிறுவனம் ஆகியவற்றுக்கும் பொருந்தும்

நம் அன்றாட வாழ்வு ஆனந்தமாக அமைவதற்கும் அமைதியற்றதாக மாறுவதற்கும் பணம் ஒரு முக்கியக் காரணம் என்றால் அது மிகையாகாது. ஆனால், பணத்தின் மீதான பேராசை நிச்சயமாக மனிதனை நிம்மதியிழக்கச் செய்து விடும் என்பதும் எதார்த்தமானது. எனவே, மார்க்கம் அனுமதித்த வழியில் உழைத்துப் படிப்படியாக நாம் முன்னேற முயற்சி செய்ய வேண்டும். இதுவே நமக்கு நன்மை பயக்கும்.

இங்கே இரண்டு நபிமொழிகளை நினைவு கூர்வது பொருத்தமாக அமையுமென்று நினைக்கிறேன்.

“உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்பவரே உங்களில் செல்வந்தர் ஆவார்.”

“நாளை மறுமையில் கீழ்க்காணும் கேள்விகளுக்கு இறைவனிடம் பதில் சொல்லாத வரை யாரும் இருந்த இடத்தை விட்டு நகர முடியாது.

1) உன் வாழ்நாளை எவ்வாறு கழித்தாய்…?

2) உன் இளமையை எவ்விதம் கழித்தாய்…?

3) உன் அறிவை எவ்வாறு செலவிட்டாய்…?

4) செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தாய்..?

5) அதை எவ்வழியில் செலவழித்தாய் …?

ஒருபுறம் உழைத்து உண்ணுவதை வலியுறுத்துகின்ற அதே இஸ்லாம் தான் மறுபுறம் அனுமதிக்கப்பட்ட முறையில் பொருளீட்டும் படியும் அதை ஆகுமான வழியில் செலவழிக்கும் படியும், வீண் விரயம் செய்யக்கூடாது எனவும் கட்டளையிடுகிறது.

குறிப்பாக தீமை பயக்கக்கூடிய அல்லது அனுமதிக்கப்படாத வியாபாரங்களில் வேலைகளில் ஈடுபடக்கூடாது.

நாம் செய்யும் வியாபாரத்தில் தீமை. எடுத்துக்காட்டு : மது, லாட்டரி, பட்டாசு, ஆபாச பத்திரிகைகள், ஆபாச குறுந்தகடுகள், விபச்சாரம், விபச்சாரத்தை தூண்டும் சாதனங்கள், ஹராமான (தடை செய்யப்பட்ட) உணவு வகைகள், மற்றும் உடல் நலன் மன நலனுக்கு தீங்கு பயக்கும் அனைத்துப் பொருட்களும் சேவைகளும்.

செய்யும் முறைகளில் தீமை. எடுத்துக்காட்டு : பொய், ஏமாற்று, கலப்படம், பதுக்கல், லஞ்சம், பிறர் நலனில் அக்கறை இல்லாமல் பேராசையைத் தூண்டும் வியாபாரம், நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிரான வியாபாரம் இப்படி அனைத்து தீய முறைகளும்.

(உங்களது வரவுக்குள் செலவைக் கட்டுப்படுத்த உங்களுக்கு உதவ வேண்டும் என்பதே இக்கட்டுரையின் தலையாய நோக்கம். பொருளீட்டுதல் சம்பந்தமாக இறைவன் நாடினால், “வியாபார நீதி நெறிமுறைகளும், பொருளீட்டும் சரியான வழிமுறைகளும் எனும் தலைப்பில் விரைவில் எழுதுவேன்.)

மேற்கண்ட விளக்கங்களைப் படித்தவர்கள் செலவைக் கட்டுப்படுத்துவது நம் கையில்தான் உள்ளது என்பதைத் தெளிவாக உணர்ந்திருப்பார்கள். எனினும் இதை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு உங்களது தனிப்பட்ட ஆர்வமும், குடும்ப உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பும் ரொம்ப ரொம்ப அவசியமானதாகும்.

இத்தகைய வழிகாட்டுதல்களை சமூக நற்பணி மன்றங்கள் தொண்டு ஊழியர்களைக் கொண்டு அந்தந்த பகுதி சார்ந்த மக்களின் நடைமுறை உதாரணங்களை எடுத்துரைத்து ஒரு பயிற்றுவிப்பாக (Course) சமூக மக்களுக்கு நடத்தி இதற்கு ஓர் உயிரோட்டம் தந்தால், மேலும் இதைப் பரவலாக்கினால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும். இதுவும் ஒரு வகையில் தாவா (இஸ்லாத்தை அழகிய முறையில் சமர்ப்பித்தல்) தானே? இது தொடர்பான விரிவான விவரங்களுக்கு எனது மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.

இறுதியாக அல்குர்ஆன் வலியுறுத்திச் சொல்லும் செய்தி “இன்னும் மனிதன் முயன்றதைத் தவிர வேறொன்றும் அவனுக்குக் கிடையாது.” (திருக்குர்ஆன் 53:39)

“நீ ஒன்றை ஆசைப்படுவதற்கு முன் உன்னை அதற்குத் தகுதியாக்கிக் கொள்.”

எவ்வளவு எதார்த்தமான வரிகள்.

நாம் இவ்வுலகில் உடல் நலத்துடனும் மன நலத்துடனும், நம் குடும்பம், உறவினர், நண்பர்கள், அண்டை வீட்டார், இன்ன பிற மக்களோடு கண்ணியத்தோடும் சுயமரியாதையோடும் வாழ விரும்புகிறோம் இல்லையா…?

இத்தகைய வாழ்க்கைக்கு எந்தவித முயற்சியும் செய்யாமல் நாம் இறைவனையோ, அல்லது பிறரையோ குறை கூறிக் கொண்டலைவது எந்த வகையிலும் நியாமல்லவே. “நமது உயர்விற்கும் தாழ்விற்கும் நாமே காரணம்.” இதுதான் எதார்த்தம். இதைப் புரிந்து நாம் நடக்க முயல்வோம்.

இந்தக் கட்டுரை குடும்பப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு நான் எழுதினாலும், எந்த ஓர் அமைப்பும் (உதாரணமாக தொண்டு ஊழிய நிறுவனங்கள், பள்ளி, மதரசா நிர்வாகங்கள் முதலியவை) இந்தக் கட்டுரை மூலம் இறைவன் நாடினால் பயன் பெற முடியும்.

தொடர்புக்கு : fk@ferozkhancpa.com

 

சமரசம்  16-31 டிசம்பர் 2006

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *