ஆடிட்டர் பெரோஸ்கான்
உதாரணம் ஒன்று :
ஒருவருக்கு மாத வருமானம் ரூபாய் ஐயாயிரம் என வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் ஒரு மாதத்தில் எட்டாயிரம் செலவு செய்கிறார். அதாவது தனது வருமானத்தைத் தாண்டி மூவாயிரம் ரூபாய் அதிகமாக செலவு செய்கிறார்.
இதைத்தான் தமிழில் வரவு எட்டணா செலவு பத்தணா என்று கூறுவார்கள்.
சரி அப்படி செய்த செலவுகளாவது பயனுள்ளதாகவும் அவசியத்தின் அடிப்படையிலும் உள்ளதா என்றால் அதுவுமில்லை. திருமணம், வளைகாப்பு, விருத்தசேதனம், பெண் பூப்படைதல், குடியேறுதல், ஹஜ் வழியனுப்புதல் என்று பிறருக்குக் காட்டுவதற்காக அவசியமில்லாத செலவுகள் ஒருபுறம்.
நமது கலாச்சாரத்திலோ, நமது மார்க்கத்திலோ, நமது முன்னோர்களிடத்திலோ கூட இல்லாத பிறந்த நாள், இறந்த நாள், திருமண நாள், காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் இன்னும் இது போல் எத்தனையோ தினங்கள். இவற்றுக்குச் செய்யும் வீண் செலவு இன்னொரு புறம்.
இவற்றைக் கணக்கிட்டால் 365 தினங்கள் ஒரு வருடத்தில் போதாது. இத்தகைய தினங்களால் அரசியல்வாதிகள், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், பணக்காரர்கள் பாடு கொண்டாட்டம். உழைத்து வாழும் நடுத்தர மக்கள், ஏழை எளியவர் பாடு திண்டாட்டம். (இது குறித்து நடைமுறையில் பலர் படும் சிரமத்தை உள்ளடக்கி “பிறந்த நாள் கொண்டாடலாமா?” எனும் தலைப்பில் நான் எழுதும் கட்டுரையை படித்தால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.)
இந்த நிலையில் தன்னுடைய இந்த அதிகப்படியான செலவுக்கு அவர் எங்கு செல்வார்; என்ன செய்வார்…?
1) முதலில் தம்முடைய உறவினர், நண்பர்கள் மூலம் வட்டியில்லாக் கடன் வாங்குவார்.
2) பின் தம்மிடமுள்ள பொருளை அடமானம் வைத்தோ, அல்லது வட்டிக்கோ கடன் வாங்குவார்.
3) அடுத்து அதுவும் முடியாத போது யாரிடமாவது கையேந்தவோ அல்லது எவர் பொருளையாவது களவாடவோ செய்வார். வியாபாரி பொய், கபடம் முதலியவற்றில் ஈடுபடுவார்.
4) ஆசிரியராக இருந்தால் கள்ளமார்க் போட்டு அதன் மூலம் காசு வாங்குவார். ஆபிசராக இருந்தால் லஞ்சம் வாங்குவார். அல்லது தான் பணி செய்யும் இடத்தில் கையாடல் செய்வார்.
இப்படி ஏதாவது ஒரு குற்றத்தைச் செய்துதான் இவர் தனது பற்றாக்குறையை சரி செய்ய முடியும். இவருடைய இறுதி நிலை என்னவாக இருக்கும்? அவமானம் தாங்காமல் தன்னுடைய குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் சூழல் தான் ஏற்படும். இந்த இழிநிலை நமக்குத் தேவையா என்பதை சகோதரர் சகோதரிகளே சற்று நீங்கள் சிந்தியுங்கள்.
உதாரணம் இரண்டு :
இன்னொருவருக்கு மேற்கண்ட படியே மாத வருமானம் ஐயாயிரம் தான். ஆனால் அவர் வரவுக்கு அதிகப்படியாக செலவு செய்யாவிட்டாலும் வருமானம் முழுவதையும் (ஐயாயிரத்தையும் சேமிப்பு எதுவுமின்றி) செலவு செய்து விடுகிறார்.
நிலைமை இப்படியிருக்க, இப்படிப்பட்ட மனிதர்களுக்கு மருத்துவம் போன்ற திடீர் செலவுகள் வந்துவிட்டால் அதற்கான செலவுகளுக்கு கடன் வாங்கவோ, கையேந்தவோ தான் செய்ய வேண்டும்.
கடன் வாங்குவது பெரிதல்ல. வாங்கிய பின் அதைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் திணற வேண்டிய நிலை ஏற்படுமே, அதை நாம் சிந்திக்க வேண்டும். “கடன் தொல்லையிலிருந்து இறைவா என்னைக் காப்பாற்று” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனையை இங்கு நாம் நினைவு கூர்வது அவசியம்.
ஆக, சேமிப்பு எதுவும் இல்லாத ‘வரவும் செலவும் நேர்’ என்ற இந்த இரண்டாவது நபரின் நிலை மிகவும் மோசம் என்று இல்லாவிட்டாலும் சேமிப்பு எதுவுமில்லாத வகையில் இவரும் பரிதாபத்துக்கு உரியவரே.
உதாரணம் மூன்று :
மூன்றாவது நபருக்கும் மாத வருமானம் அதே ஐயாயிரம் தான். ஆனால், இவர் தம்முடைய செலவினங்களை ரூபாய் இரண்டாயிரத்து அறநூற்று ஐம்பதுக்குள் சிக்கனம் செய்து முடித்துக் கொள்கிறார். அதாவது தன்னுடைய வருமானத்தில் ரூபாய் இரண்டாயிரத்து முன்னூற்றி ஐம்பதை சேமிப்பு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
இவரைத்தான் நாம் ‘குடும்பப் பொருளாதாரத்தை வெற்றிகரமாக சமாளிப்பவர்’ என்று குறிப்பிட முடியும். இவரைப் பொறுத்த அளவில் பொருளாதாரச் சிக்கலில் மாட்டி விழி பிதுங்கும் நிலை எப்போதும் அவருடைய வாழ்வில் ஏற்படாது. அவர் தம்முடைய குடும்பத்தோடு பூரணமான உடல், மன நலத்துடன் திகழ்வார்.
இந்த சந்தோஷ நிலை இவருக்கு மட்டும் எப்படி முடிந்தது…? எல்லாம் பொருளாதார நிர்வாகப் புரிதல் தான் காரணம் இல்லையா…?
இந்த இடத்தில் சரித்திர கால நிகழ்வொன்றையும் நிகழ்கால அனுபவமொன்றையும் குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதன் மூலம் விரயம் செய்யாமல் வரவுக்கு தகுந்த செலவைச் செய்து நிம்மதியாக வாழ்வது எப்படி என்பதை ஓரளவு நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
மாமன்னர் ஹாருன் ரஷீது அவர்களுடைய நீதி வழுவா ஆட்சியைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு முறை அவருடைய தளபதி ஒரு வேளை உணவுக்கு மட்டும் சுமார் ஆயிரம் திர்ஹம்கள் செலவு செய்கிறார் என்ற செய்தி அவரிடம் கூறப்பட்டது. உண்மை நிலையை அவருக்கு உணர்த்தி படிப்பினை தரும் எண்ணத்துடன் மன்னர் ஹாருன் ஒரு காரியம் செய்தார்கள்.
ஒரு நாளைக் குறிப்பிட்டு தன்னுடைய வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அத்தளபதிக்கு அழைப்பு விடுத்தார் மன்னர். தளபதியும் குறிப்பிட்ட அந்த நாளில் மன்னர் இல்லத்துக்கு வந்து உணவு பரிமாறும் இடத்தில் அமர்ந்தார்.
சிறிது நேரம் அவரோடு அளவளாவி விட்டு உணவைப் பரிமாறு என்று தன்னுடைய பணியாளருக்கு கட்டளையிட்டார் மன்னர். மன்னர் அளிக்கும் விருந்தாயிற்றே; மகத்தான விருந்தாக இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்த தளபதி. அதற்காகவே தன் வயிற்றைக் காயப் போட்டு விட்டு வந்திருந்தார் அவர்.
ஆனால்… அவருடைய எதிர்பார்ப்புக்கு மாற்றமாக அங்கே இரண்டு கோப்பைகளில் வெறும் கஞ்சி மட்டும் பரிமாறப்பட்டது. வேறு வழியின்றி அதை உண்டு முடித்தார் தளபதி. மன்னரோடு சேர்ந்து உணவுண்ட பின், தளபதியை நோக்கி, ‘என்ன தளபதியாரே ! நீங்கள் உண்ட உணவு உங்கள் வயிற்றை நிரப்பியதா… அதன் மூலம் உங்களுடைய பசி அடங்கியதா… என்று கேட்டார் மன்னர். பசி அடங்கியதாக பதிலளித்தார் தளபதி.
ஒரு வேளை உணவுக்காக நீங்கள் ஓராயிரம் திர்ஹம்கள் செலவு செய்வதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் இப்போது உங்கள் பசியைப் போக்க நான் ஏற்பாடு செய்த உணவின் மொத்த மதிப்பே வெறும் ஒரு திர்ஹம் தான். அதன் மூலம் உமது பசி அடங்கியுள்ளது. பின்பு எதற்கு இந்த ஆயிரம் திர்ஹம்கள் ? வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்கள் என்று குர்ஆன் குறிப்பிடுவது உங்களுக்குத் தெரியாதா… என்ன …? என்று சொல்லி தளபதிக்கு உண்மையை மன்னர் உணர்த்த, தவறை உணர்ந்து கொண்ட தளபதி வருத்தம் தெரிவித்ததோடு இனி அவ்வாறு விரயம் செய்ய மாட்டேன் என்று மன்னரிடம் ஒப்புதல் வாக்குமூலம் தந்து விட்டுச் சென்றார்.
அடுத்ததாக இன்றைய நிகழ்கால அனுபவத்தைப் பார்ப்போம். இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வேலை செய்ய வந்த ஒரு சகோதரர். “சிங்கப்பூரில் செலவு அதிகமாகுமே உண்மையா? ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் எவ்வளவு செலவாகும்..” என்று என்னிடம் வினவினார்.
உடனே கணக்குப் போட்டு இவ்வளவு ஆகும் என்று நான் சொல்லாமல், நீங்கள் எவ்வாறு செலவு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் நான் இதற்குப் பதில் சொல்ல முடியும் என்று கூறினேன். மதிய உணவுக்கு அவரை ஒரு ரெஸ்டாரெண்டுக்கு அழைத்துச் சென்றேன். சுமார் இரண்டு சிங்கப்பூர் வெள்ளிப் பெறுமான அளவு அவர் உணவுண்டார். உணவுண்டபின் அவரிடம் உங்களுடைய பகல் உணவு இரண்டு வெள்ளிக்குள் முடிந்து விட்டது. அதே சமயம் பகல் உணவுக்கு மட்டும் ஐம்பது வெள்ளிகள் செலவழிப்பவர்களும் சிங்கப்பூரில் உள்ளனர். எனவே, ஒருவர் எவ்வாறு செலவழிக்கிறார் என்பதைப் பொறுத்தே இங்கு செலவை நிர்ணயித்துச் சொல்ல முடியும். பொதுவாக சிங்கப்பூரில் செலவு அதிகம் என்பது தவறான கருத்தாகும் என்று நான் அவருக்கு விளக்கினேன்.
மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளிலிருந்தே பொருளாதார நிர்வாக சூட்சுமத்தை ஓரளவு நீங்கள் விளங்கியிருப்பீர்கள் என்றாலும், விளக்கத்திற்காக இன்னும் சில செய்திகள் இதோ.
என்னுடைய நண்பர்களில் பலர் அறுபது வெள்ளிகளுக்கு (சுமார் 1500 ரூபாய்) சட்டை வாங்கி அணிகின்றனர். ஆனால் நான் வெறும் ஆறு வெள்ளிக்கு தான் (சுமார் 150 ருபாய்) சட்டை வாங்கி அணிகின்றேன். அதன் மூலம் நான் எந்த வகையிலும் தாழ்ந்து போகவில்லை. நான் நானாகத்தான் இருக்கிறேன்.
அதேபோன்று என் அளவுக்கு வருமானமுள்ள பல சுமார் ஐநூறு முதல் ஆயிரம் வெள்ளி அளவுக்கு வாட்ச் வாங்கி அணிந்துள்ளனர். ஆனால் நான் வாங்கி அணிந்துள்ள கைக் கடிகாரத்தின் மதிப்பு வெறும் இருப்பத்தைந்து வெள்ளி தான் அதனால் என்னுடைய தரம் ஒன்றும் தாழ்ந்து போய்விடவில்லை. மட்டுமல்ல அந்தக் கடிகாரமும் நேரத்தைச் சரியாகத்தான் காட்டிக் கொண்டிருக்கிறது.
ஆக, ஒரு பொருளை நாம் வாங்கும்போது அதன் தேவை, உபயோகம் தான் கவனத்துக்கு வர வேண்டுமே அல்லாது பிறர் பார்த்து மெச்ச வேண்டுமென்ற பகட்டு எண்ணம் துளியும் இருக்கக்கூடாது. இந்த அணுகுமுறை உங்களிடம் இருந்தால் வெற்றிகரமான பொருளாதார நிர்வாகியாக நீங்கள் திகழலாம்.
பொருட்களை வாங்கும் போது நாம் கவனிக்க வேண்டிய
முக்கிய அம்சங்கள்.
1.ஒரு பொருளை வாங்க நீங்கள் முற்படும் போது உடனே மனதை நோக்கி நீங்கள் கேட்க வேண்டிய முதல் கேள்வி, இந்தப் பொருள் நமக்கு அவசியமானதா… என்பது தான். அவசியம் இல்லை என்று நீங்கள் கருதினால், உடனே அதனை முற்றாக தவிர்த்து ஒதுக்கி விடுங்கள்.
2. அவசியம் தான் என்று உங்கள் மனது கருதினால்… உடனடியாக அதை விலை கொடுத்து வாங்கி விடாமல், நமக்கு உடனடியாக அந்தப் பொருள் தேவையா… என்று அடுத்து ஒரு கேள்வியை எழுப்புங்கள். இப்போதைக்கு அது ஒன்றும் அவசியமில்லை எனும் பட்சத்தில் அதை வாங்குவதைக் கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்.
3. உடனடியாக அதை வாங்கித் தான் ஆக வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால்… இப்போதும் உடனடியாக அவசரப்பட்டு பர்ஸைத் திறந்து விட வேண்டாம். இந்தப் பொருள் இப்போது எனக்குத் தேவை தான்… ஆனால்… அதற்கு நான் எவ்வளவு செலவு செய்ய வேண்டும்… என்றும் உங்களுக்குள் ஆலோசனை செய்து ஒரு முடிவு எடுங்கள்.
வாங்கும் பொருள் ஆக உயர்ந்த தரத்திலும் (High Quality) இருக்க வேண்டாம். ஆக தாழ்ந்த தரத்திலும் (Low Quality) இருக்க வேண்டாம். இரண்டுக்கும் இடைப்பட்ட அதாவது உங்களுக்கு எந்த அளவு தரம் (Adequate Quality) தேவை என்பதை முடிவு செய்து அதற்குரிய நியாயமான விலையைக் கொடுத்து வாங்குங்கள். இதுதான் நடுநிலையான முடிவு. செலவு செய்வது சம்பந்தமாக மிக எளிமையான உவமானத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:
“ (உலலோபியைப்போல்) உம் கையை கழுத்தில் கட்டிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் ஏதுமில்லாது) துக்கப்பட்டவராகவும் ஆகிவிடுவீர்.”(17:29)
ஆக ஊதாரியாகவும் இருக்கக்கூடாது; கஞ்சனாகவும் இருக்கக்கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையே சிறந்தது என்பதை மேற்கூறிய வசனங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.
செலவு குறித்து வள்ளுவர் கூற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் :
1. வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. செலவு (வருவாய்க்கு மேல்) அதிகமாகி விடக்கூடாது.
2. சர்க்கஸ், நாடகம், சினிமா போன்ற காட்சிகளுக்குச் செல்லும் போது ஒருவழிப்பாதையில் டிக்கட் எடுத்து மக்கள் செல்வார்கள். ஆனால் காட்சி முடிந்து வெளியே செல்லும் போது பல வழிகளில் மக்கள் வெளியேறுவார்கள். அதுபோல் செல்வம் நம்மிடம் வரும்போது ஒருவழியில் தான் வரும். ஆனால் அது நம்மிடமிருந்து செல்லும் போது பல வழிகளில் சென்றுவிடும்.
எனவே இவ்வரிய கருத்துக்களை மனதில் நிறுத்தி செலவிடும் நேரத்தில் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டால் உங்கள் குடும்ப பொருளாதாரத்தை வெற்றுகரமாக சமாளிக்கலாம்.
ஒரு விஷயம் ரொம்ப முக்கியம். எந்த நிலையிலும் வட்டிக்கோ அல்லது வட்டியோடு இணைந்த தவணை முறையிலோ பொருள்கள் வாங்குவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி : சமரசம் 16-30 நவம்பர் 2008