வேண்டாம் நமக்கு பதவி மோகம்!

இலக்கியம் கட்டுரைகள் கீழை ஜஹாங்கீர் அரூஸி

 

                     கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்

மறுமையின் அந்த வீடாகிறது- பூமியில் அகம்பாவத்தையும்,குழப்பத்தையும் நாடாதவர்களுக்கே அதை நாம்(சொந்தமாக)ஆக்கிவிடுவோம்.இன்னும் (நல்ல)முடிவு பயபக்தியுடையவர்களுக்குத்தான்!(அல்குர் ஆன் 28-83)
என்னருமை சமுதாயமே!மேலே கூறப்பட்டுள்ள இறைவசனம், யார் ஒரு விசயத்தில் பொறுப்பேற்றுக்கொண்டு அதில் இறையச்சம் இல்லாமல் அகம்பாவத்திலும் அறியாமையிலும் அந்த பொறுப்புக்கு தகுதி இல்லாமல் ஆகிவிடுகிறாரோ?அவருக்கு மறுமை நாள் மிகப்பெரிய சோதனையாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
ஹஜ்ரத் அபூதர்(ரலி)கூறுகிறார்கள்:நான் யாரஸூலல்லாஹ்!தாங்கள் என்னை (ஏதாவதொரு பகுதிக்கு)ஆட்சிப்பதவியில் நியமனம் செய்யக்கூடாதா? என்று கேட்டேன்.
அதற்கு நபியவர்கள் தங்கள் கரத்தால் என் தோள்பட்டையில் அடித்துவிட்டு ஓ அபூதர்ரே! நிச்சயமாக ஆட்சிப்பதவி என்பது ஓர் அமானிதம் (நம்பிக்கைக்குரிய பொறுப்பு) ஆகும்.
உலகில் அதற்கு அதிக மதிப்பு இருந்தபோதிலும் கியாமத் நாளில்அது இழிவும்,கைசேதமும் ஆகும்; யார் பொறுப்பினை சுமந்து அதன் கடமையை சரிவர நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்குத்தவிர.(முஸ்லிம்)
என்னருமை மக்களே,மேலே கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளஆட்சிப்பதவி என்பது ஜனாதிபதி,பிரதமர்,கவர்னர்,அமைச்சர்,எம்பி,எம்.எல்.ஏ என்பது மட்டுமல்ல,அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளுக்கும் பொருந்தும்!
இன்றைய காலத்து ஜமாத்து பொறுப்பாளர்களின் நிலை என்ன?தொழாதவர்கள்,மார்க்கம் தெரியாதவர்கள்,பொறுமை இல்லாதவர்கள்,இறையச்சம் இல்லாதவர்கள்,மார்க்கச்சட்டம் தெரியாதவர்கள் எல்லாம் ஜமாத்துகளின் தலைவர்,செயலாளர்,பொருளாளர்,உறுப்பினர்களாக ஆகிவிடுகிறார்கள்.
இதைவிட பெரியக்கொடுமை பணம் இருந்தால் போதும் வட்டி தொழில் செய்பவர்கள்,குடிகாரர்கள் கூட ஜமாத் பொறுப்புக்கு வந்துவிடுகின்றனர்.
இதுபோன்றவர்களுக்காக நமதருமை நாயகம்(ஸல்)அவர்கள் கூறியுள்ள ஹதீஸை பாருங்கள்,அண்ணல் நபி (ஸல்)அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்:தோழர்களே!வருங்காலத்தில் நீங்கள் தலைமைப்பதவியை ஆசைப்படுவீர்கள்! ஆனால் அது கியாமத் நாளின் கைசேதமாகும்.(புகாரி)
தலைமைப்பதவியில் இருந்தபோது தானும்,தன் நிர்வாகமும் செய்த எல்லாக்காரியங்களுக்கும் கியாமத் நாளில் அல்லாஹ்வின் சமூகத்தில் பதில் சொல்லவேண்டியது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமாகிவிடும்.அந்தக்கஷ்டமான சூழ்நிலையில் நாம் ஏன் இந்தப்பதவியை வகித்தோம்?என மனிதன் கைசேதப்படுவான்,கவலைப்படுவான்.ஆகவே பதவியை ஆசைப்படாதீர்கள் என்பதை தான் மேலே சொல்லப்பட்டுள்ள ஹதீஸ் நமக்கு எச்சரிக்கிறது.
என்னருமை சமுதாயமே!இனிவரும் காலங்களிலாவது அல்லாஹ்வின் வீடுகளை நிர்வகிக்கும் பொறுப்புகளை ஐந்து நேரத்தொழுகைகளை சரிவர நிறைவேற்றக்கூடியவர்கள்,இறையச்சமுடையவர்களிடம் ஒப்படைக்கும் சூழலை உருவாக்குவோம்,நாளை மறுமையின் வீட்டை நமதாக்குவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *