தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்

இலக்கியம் கட்டுரைகள்

ஒரு தந்தை தனது இளம் வயது மகளின் அறையை கடந்து செல்லும் போது அது சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார்.

எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போது தான் தலையணையின் மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார்.

அது என்னெவென்று எடுத்துப் பார்த்தார். அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது. பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது:

அன்புள்ள அப்பா,

மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப் போகிறேன்.

உங்களுடனும், அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் போகிறேன்.

டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது. நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், நகைகள் அணிந்திருந்தாலும் அவன் நல்லவன்.

அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை. டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசமிருந்தாலும் (42 இப்போதெல்லாம் ஒரு வயதல்ல), அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது.

டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும், எனக்கென்று எனது வாழ்க்கையில் தனி இடம் கொடுத்திருக்கிறேன். என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறான்.

டிமோத்திக்கு காட்டுக்கருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது. அங்கு நாங்கள் தங்கியிருப்போம். அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான். அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துவோம். கஞ்சாவை நானும் புகைத்துப் பார்த்தேன் ரொம்ப சுகமாயிருக்கிறது.

மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால் அப்போது தான் டிமோத்தி எய்ட்சிலிருந்து குணமடைவான்.

அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும். எனக்கு பதினைந்து வயதாகிறது. என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக் குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன்.

உங்கள் அன்பு மகள்,
ஏஞ்சலோ.

அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது. கடிதத்தின் கீழே “பின் பக்கம் பார்க்க” என்று எழுதியிருந்தது. துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்த போது,

பின்குறிப்பு; அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை.

நம் வாழ்க்கையில் எவ்வளவு மோசமான விடயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது நான் ஒரு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றுமே கிடையாது. எனது தேர்வு அட்டை எனது மேஜை மேல் இருக்கிறது. எடுத்து கையெழுத்து போடுங்கள். நான் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன். உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள்.

தற்போது தந்தையின் மனநிலை என்னவாக இருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *