2039 ல் அறிவியல் உலகம்

இலக்கியம் கட்டுரைகள் கே.ஏ.ஹிதாயத்துல்லா M.A.B.Ed.M.Phil.

அறிவியல் அதிசயங்கள்

K.A. ஹிதாயத்துல்லா M.A.,BEd., M,Phil.,

                2039 ல் அறிவியல் உலகம்

 

சமீபத்தில் ஓர் ஆங்கில அறிவியல் பத்திரிக்கையில் வெளியான அறிவியல் கட்டுரையில் 2039 –ல் எம்மாதிரியான அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரப்போகின்றன என்பதை முன்னரே அறிவித்துள்ளனர். தற்போது ஆய்வில் இருக்கும் அக்கருவிகளின் பட்டியல் இதோ !

எக்ஸ்ரே பார்வை தரும் கருவி, ஆளையே மறையச் செய்யும் மாய அங்கி, நோய்தீர்க்கும் கையடக்க கருவி, சுவரில் ஒட்டிக் கொள்ளும் கையுறைகள் மற்றும் காலணிகள், மனித சக்தியால் மின்னூட்டம் பெறும் செல்போன், சார்சர், விண்ணில் பறக்க வைக்கும் ஜெட்பேக், பறக்கும் ஆகாயத்தட்டு, மொழி மாற்றும் கருவி என நீளமானதொரு பட்டியலை அக்கட்டுரையில் அறிவியலார் வெளியிட்டுள்ளனர்.

அடேயப்பா ! இதெல்லாம் சாத்தியமா? என்ற நம்முடைய வினாவிற்கு “2039 ல் இவையெல்லாம் சத்தியமாய் சாத்தியமே !” என்கின்றனர். கட்டுரையின் அறிஞர்கள் இவர்கள் நிர்ணயம் செய்துள்ள 2039 ஆம் ஆண்டிற்குள்ளாகவே இக்கருவிகளெல்லாம் மக்களின் அன்றாட நடைமுறைக்கு வந்து விடும் எனவும் இவர்கள் உறுதியோடு கூறுகின்றனர்.

“அல்ட்ரா சவுண்ட்” எனப்படும் ஒலி அலைகளைப் பயன்படுத்தி உடலில் உள்ளுறுப்புகளையும், வீட்டின் சுவர்களை ஊடுறுவி வீட்டினுள் உள்ளவற்றையும் வெறுங்கண்களாலேயே நேரடியாகப் பார்க்க உதவும் கருவியைத் தயார் செய்ய தற்போது விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர். இதன்மூலம் இனி எலும்பு முறிவுகளைக் கண்டுபிடிக்க எக்ஸ்ரே நிலையங்களைத் தேடி ஓடவேண்டியதில்லை. நம் கண்களாலேயே எந்த இடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்க முடியும்.

மாயாவி கதைகளைப் பற்றி பாட்டி கதை சொல்லக் கேட்டிருக்கிறோம். கிராபிக்ஸ் மாயாவிகளை ஆங்கில படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் அணிந்து கொண்டவுடன் நம்மைப் பிறர் கண்களுக்கு அறவே தெரியாமல் மறைத்து விடும் மாய அங்கியைத் தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தற்போது விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர். 2039 க்குள் இந்த மாய அங்கி கடைகளில் விற்பனைக்கு வருமென்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மழைக்கு அங்கி வாங்கும் நாம் இனி ஆளுக்கொரு மாய அங்கி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியது தான்.

ஸ்பைடர்மேன் சுவரைப் பற்றிப் பிடித்து பரபரவென ஏறி இறங்கும் காட்சியை வாய்பிளந்து பார்த்து ரசித்த நாம் 2039 ல் அதுபோல் சுவரில் ஏறப்போகிறோம் என்றால் ஆச்சரியமாகத் தான் உள்ளது. சுவரில் ஒட்டிக்கொள்ளும் ஜெக்கோ காலணி மற்றும் கையுறைகள் தயாரிப்பதில் அறிவியலார் தீவிரமாக உள்ளனர். இனி மொட்டைமாடி ஏற மாடிப்படியோ, ஏணிப்படியோ வேண்டாம் இந்தக் கையுறை, காலணிகளை அணிந்து கொண்டு எத்தனை அடி உயர சுவராக இருந்தாலும் தம் கட்டி ஏறி விடலாம்.

மேலும் எதிரே நிற்பவர் பேசுவது எம்மொழியாக இருந்தாலும் அதை நம் செம்மொழியாக நொடியில் மாற்றி விடும் திறன் படைத்த கையடக்க “மொழி மாற்றும் கருவியை” 2039 ல் சந்தைக்குக் கொண்டு வர தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அன்றாட செய்திகளில் அடிக்கடி இடம் பிடிப்பது வாகன விபத்து, விபத்தில் அடிபட்டோரின் வெளிக்காயங்கள் கண்களுக்குப் புலப்படும். ஆனால் உள்ளுறுப்புகளில் ஏற்படும் இரத்தக் கசிவை கண்டறிவது சிரமமான காரியம். தற்போது ஆராய்ச்சியில் இருக்கும் “கையடக்க குணமளிக்கும் கருவி” மூலம் உள்ளுறுப்புக் காயங்களை உடனே கண்டறிந்து அப்போதே அதைக் குணப்படுத்தவும் முடியும். 2039 ல் நம்மூரின் 108 ஆம்புலன்ஸின் பிரதான கருவியாக இது செயல்படலாம்.

“போக்குவரத்து நெரிசல்” நகரங்களில் தற்போதைய முக்கிய பிரச்சனை. அதுவும் ஆள்பவர்கள் சாலை வழி வந்து விட்டால் கேட்கவே வேண்டாம். சிக்னலிலேயே காலை டிபன், மதியச்சப்பாடு, சாப்பிட்டு விட்டு துண்டை உதறி விரித்து படுத்துறங்க வேண்டியது தான். அந்தளவிற்கு டிராஃபிக் ஜாமால் மக்கள் பொறுமை இழந்துள்ளனர். இதற்கான விடிவுகாலம் 2039 ல் வரப்போகிறது. “ஜெட்பேக்” எனும் சிலிண்டரை முதுகில் மாட்டிக் கொண்டு அதிலுள்ள சிறிய பொத்தானை இயக்கி உயரே பறந்து எந்த டிராஃபிக் ஜாமும் இல்லாமல் விரும்பிய இடத்திற்கு ஆகாயத்தில் காத்தாடப் பறந்து செல்லலாம்.

2039 ல் நாம் உயிர் வாழ்கின்றோமோ இல்லையோ? நிச்சயம் நம் சந்ததிகள் இதனைக் காணப் போகின்றனர். பயன்படுத்தி மகிழப் போகின்றனர் என்று இக்கட்டுரையின் நிறைவாக அறிவியலார் பெருமிதத்துடன் கூறுகின்றனர். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அம்மா அசையாத ஆட்டுக்கல்லில் குளவியைச் சுற்றி மாவரைத்தார்கள். இன்றோ குளவி அப்படியே நிற்கிறது. ஆட்டுக்கல் சுற்றுகிறது. கிரைண்டர் வந்து விட்டது. மண்ணெண்ணெய் விளக்கும் மாடக்குழியுமாக இருந்த நம் முன்னோர் தற்கால வண்ண விளக்குகளையும், மாட மாளிகைகளையும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். இவையெல்லாம் அறிவியல் நமக்குத் தந்த அதிசயங்கள். மேற்கூறிய அதிசயக்கண்டுபிடிப்புகள் நனவாக நாமும் 2039 வரை பொறுத்திருக்கலாமே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *