சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக நாகூர் தர்கா மரபுடைமை நிலையம் இருந்து வருகிறது.
சிங்கப்பூர் 19 ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வர்த்தகக் குடியேற்றப் பகுதியாக உருவான காலத்தில் தெலுக் ஆயர் ஸ்திரிட்டீல் நாகூர் தர்கா கட்டப்பட்டது. மகான் சையது ஷாஹூல் ஹமீது அவர்களின் நினைவுச்சின்னமாக இந்த தர்கா, அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள நாகூரிலுள்ள தர்காவின் பாணியில் எழுப்பப்பட்டது.
இந்திய முஸ்லிம் சமூகத்தினர் அன்றைய குடியேற்றப்பகுதியின் நடுநாயகமான இடத்தில் நாகூர் தர்காவைக் கட்டினர். பூர்வீகக் குடியேறிகளின் மரபுடைமையை பிரதிபலிக்கும் அரிய கட்டுமான வடிவமைப்புத் திறனுக்கு எடுத்துக்காட்டாக இது திகழ்கிறது.
தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்ட நாகூர் தர்காவைப் புதுப்பிக்கும் பணி சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. மறு மேம்பாட்டு பணி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து மரபுடைமை நிலையமாகத் திறப்பு விழா காணும் தர்கா, சிங்கப்பூர் இந்திய முஸ்லீம்களின் சமூகவியல் காட்சியகமாக விளங்கும். பாரம்பரிய கலாசாரத்தையும், வாழ்க்கை முறைகளையும் எடுத்துரைக்கும் நினைவு பொருள்களும், சின்னங்களும், ஆவணங்களுக்கும், திரட்டி வைக்கப்படுவது மரபுடைமை நிலையத்திற்குச் சிறப்பு சேர்க்கும்.
நினைவுப்பொருட்கள், பழைய புகைப்படங்கள், வண்ணப்படங்கள், நூற்பதிப்புகள், நாட்குறிப்புகள், கடிதங்கள், கையேடுகள், சான்றிதழ்கள் முதலியனவற்றை பொது மக்களிடமிருந்து இந்நிலையத்திற்குத் திரட்டப்பட்டுள்ளன.
தெலுக் ஆயர் ஸ்திரிட் நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையமாக இயங்கவிருப்பது நமது சமூகத்தின் சரித்திர கலாசாரச் சிறப்புக்குரியது என்று முஸ்லிம் சமூகப்பிரமுகர்கள் மகிழ்ச்சியும் மனநிறைவும் தெரிவித்தனர். இந்த தேசிய நினைவுச் சின்னக்கட்டிடம் புதுப்பொலிவுடன், பல காட்சியரங்குகளுடன், பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்படுகிறது. சிங்கப்பூரின் சரித்திரத்திற்கும் சமூக வரலாற்றுக்கும் சிறப்புகளைச் சேர்க்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
ஜே.எம். சாலி