எழுத்தாளர் முஸ்தபா கமால்
வறுமையின் விளிம்பில் எழுத்தாளர் குடும்பம்
பார்வை இழந்தப் பிறகும் 6 வரலாற்று நூல்கள் எழுதியது உள்பட மொத்தம் 17 நூல்கள் எழுதியும், 12 விருதுகளும் பெற்ற எழுத்தாளர் ஒருவரின் குடும்பம் இன்று வறுமையின் விளிம்பில் நிற்கிறது.
ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசல் தெருவில் வசித்தவர் முஸ்தபா கமால் (79). இவர் வருங்கால சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் பல வரலாற்று நூல்கள் எழுதுவதற்காகத் தியாகம் செய்தவர்.
இவர் கடந்த 31.5.2007 –ல் காலமானார்.
பல இலக்கிய வரலாற்றுக் கருத்தரங்குகளை நடத்திய இவர், ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர். மதுரையின் 4 ஆம் தமிழ்சங்கம் உட்பட 12 இலக்கிய வரலாற்று அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை விதித்தவர்.
பல வரலாற்றுக் காப்பகங்களில் பல்வேறு நூல்களை வாசித்து, வாசித்து கிளைக்கோமா என்ற கண் நோயால் பாதிக்கப்பட்டு, கண் பார்வை இழந்தவர்.
இவரது கடைசி 5 ஆண்டுகளில் இரு கண்களிலும் பார்வை இழந்த பிறகும் 6 வரலாற்று நூல்களை பிறரின் உதவியுடன் எழுதியவர். இவர் சொல்லச் சொல்ல ஒருவர் எழுத, அதை மற்றொருவர் சரிபார்த்த பிறகு புத்தகமாக ஆக்கியவர்.
சேது நாட்டைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிற 20- க்கும் மேற்பட்ட வரலாற்று நூல் ஆய்வாளர்கள் இவரிடம் துருவி, துருவி கேட்டுப் பெற்ற செய்திகள் ஏராளம்.
அமெரிக்காவின் தக்சான் பல்கலைக்கழகம் இவருக்கு வரலாற்றுத்துறையில் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்து இருக்கிறது.
வருவாய்த் துறையில் வட்டாட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வருவாய்த் துறையில் பணியிலிருந்தே போதே வரலாற்றுத்துறையில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழக அரசு உள்பட பல்வேறு அமைப்புகள் இவருக்கு வழங்கப்பட்ட விருதுகளும் அதன் புகைப்படங்களும் வீட்டில் குப்பைகள் போல் குவிந்து கிடக்கின்றன.
கடந்த 15.1.1991 –ல் முதல்வர் கருணாநிதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த திருவள்ளுவர் கலை விழாவில் இவரைப் பாராட்டி விருதும், ரொக்கப்பரிசும் வழங்கி கெளரவித்திருக்கிறார்.
எழுதிய நூல்கள்
ராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் (1984), முஸ்லிம்களும், தமிழகமும் (1990), மன்னர் பாஸ்கர சேதுபதி (1992), சீர்மிகு சிவகங்கைச் சீமை (1997), சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் (1998), திறமையின் திரு உருவம் ராஜாதினகர் (1999), செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (2000), மறவர்சீமை மாவீரன் நெப்போலியன் (2001), சேதுபதி மன்னர் கல்வெட்டுகள் (2002), மன்னர்களின் வரலாறு (2003), ராமர் செய்த கோயில் ராமேசுவரம் (2004) நபிகள் நாயகம் வழியில் (2005).
தமிழக அரசின் பரிசும், பாராட்டும் பெற்ற நூல்கள்
விடுதலைப் போரில் சேதுபது மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி (1989), மாவீரர் மருது பாண்டியர்கள் (1989), சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994) சேதுபதியின் காதலி (1996).
எழுதி முடித்து பதிப்பிக்க முடியாத நிலையில் தயாராக உள்ள நூல்கள்.
கிழவன் சேதுபதியின் வரலாறு, சேது நாட்டில் உள்ள ஊர்களும், அதன் பெயர் விளக்கமும், பெரியபட்டிணத்தின் வரலாறு, இஸ்லாமியர்களின் வரலாறு, இஸ்லாமியர்களின் கலாசார பண்பாடுகள், திருக்குரானின் தெளிவுரை, வள்ளல் பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பி.எஸ். அப்துல் ரகுமானின் கதை.
அரசும், பல்வேறு அமைப்புகளும் வழங்கிய விருதுகள்:
தமிழ்ப்பணிச்செம்மல் விருது, இமாம் சதக்கத்துல்லா விருது, சேது நாட்டு வரலாற்று செம்மல் விருது, பாஸ்கர சேதுபதி விருது, ராஜா தினகர் விருது, சேவா ரத்னா விருது, தமிம் மாமணி விருது, தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க விருது, வள்ளல் சீதக்காதி விருது.
பசும்பொன் தேவர் விருது, இத்திரிஸ் மரைக்காயரின் சீறாப்புராண விருது, தமிழ்ச் செம்மல் விருது.
இவரது மனைவி நூர்ஜஹான் (62) இவர்களுக்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். 3 மகன்களில் கடைசி மகன் சேக் முஜம்மிலும், மகள் சர்மிளாவும் தாயாருடன் வசித்து வருகின்றனர்.
மகன்கள் இருவர் திருமணமாகி விட்டதால், தனித்தனியாக வசிக்கின்றனர். வருவாய்த் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றதால் குடும்ப ஓய்வூதியம் 4,000 ரூபாயில் மட்டுமே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவரது சீடரும் ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான பேராசிரியர் மை. அப்துல் சலாம் கூறியதாவது.
இவர் எழுதிய அனைத்து நூல்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன. வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் தேவைக்காகவும், வருங்கால சமுதாயத்தினர் மன்னர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் அவர்கள் செய்த தியாகங்களையும் தெரிந்து கொள்வதற்காகவாவது அனைத்து நூல்களும் மறுபதிப்பு செய்யப்பட வேண்டும்.
அரசு நூலகங்களில் இவரது புத்தகங்களை எடுத்து செல்வோர் அதனை திருப்பித் தருவதில்லை. இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்.
ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை நாள்களில் கூட புதிய துணி உடுத்தவும் அடுத்த வேளை சாப்பாட்டுக்கும் வழி இல்லாமல் இருந்து வருகிறது இக்குடும்பம்.
ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யும், எம்.எல்.ஏ.வும் இக்குடும்பத்துக்கு முதல்வரிடம் எடுத்துக்கூறி உதவி செய்ய வேண்டும் என அண்மையில் ராமநாதபுரத்தில் நடந்த தமிழ்ச்சங்க விழாவில் எழுத்தாளர் முஸ்தபா கமாலின் மகள் சர்மிளா கோரிக்கை மனு கொடுத்தார்.
குடும்ப ஓய்வூதியம் ரூ 4,000 த்தில் மட்டுமே இருவரின் வாழ்க்கையும் நடந்து வருகிறது. 10-ம் வகுப்பு வரை படித்துள்ள கடைசி மகனுக்கு அரசு வேலை வழங்கவும், புத்தகங்களை மறுபதிப்பு செய்து நாட்டுடைமையாக்க வேண்டும் எனவும் பேராசிரியர் மை. அப்துல் சலாம் தெரிவித்தார். எந்த நூல் ஆசிரியருக்கும் என்றாவது ஒரு நாள் மரணம் வரத்தான் செய்யும் ஆனால் அவர்கள் எழுதிய நூல்களுக்கு மரணம் வந்துவிடாமல் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
நன்றி :
தினமணி
10 அக்டோபர் 2008