( கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் )
நினைவு யாவும் உங்கள்மீது
யா ரசூலல்லாஹ்
நீங்களின்றி நாங்களேது
யா ரசூலல்லாஹ்
அணைந்திடாத உலகஜோதி யாய்த் தோன்றி
அகில மெங்கும் ஒளிதெளித்த
யா ரசூலல்லாஹ்
-நினைவு
மதீனா நகர்க் கொருநாள் நான்வருவேன்
மன்னவர் பூவடி கண்ணால் தொடுவேன்
நதியென அருட்கடலில் நான் விழுவேன்
நபியே கதியென்றங்கு நான் அழுவேன்
எந்தன் மீது உங்கள் பார்வை பட்டநேரமே
பிந்திடாமல் பிரிய வேண்டும் இந்த ரூஹுமே !
-நினைவு
காணும் வரையில் கண்கள் தூங்காது !
காதலில் எந்த நெஞ்சம் ஏங்காது !
வானில்லாமல் நிலம் வாழாது
வாடல் தொடர உள்ளம் தாங்காது !
ஒளியைத் தேடும் விட்டிலாக நானும் மாறுவேன்
உம்மத்தென்ற பெருமையோடு வந்து சேருவேன் !
-நினைவு
உலகில் வாழவந்த உயிர்கள் யாவும்
உம்மி ரசூலே உங்கள் புகழ்பாடும் !
அருளாய் வந்திலங்கும் மறைமூலம்
அல்லாஹு போற்றும் மனித அனுகூலம் !
இரண்டு வாழ்வின் பொருளைச் சொன்ன இதயதீபமே
இறுதித் தூதராகவந்த இறையின் ஞானமே !
-நினைவு
( காதில் விழுந்த கானங்கள் என்ற நூலிலிருந்து )