தமிழில் அறிவியல் படித்தால் ..!

இலக்கியம் கட்டுரைகள்

 

க. சுதாகர்

 

“பள்ளி இறுதி ஆண்டு வரை தமிழில் படித்த அறிவியல் மிக ஆழமாகப் பதிந்திருக்கிறது. அறிவியலை தமிழில் படிப்பது என்பது மிகச்சிறந்த புரிதலுக்கு வழிவகுக்கும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமன்று, நேரடியான பட்டறிவுமாகும்.” என்று இணையத்தில் நடராஜன் என்னும் அன்பர் எழுதியதை ஏற்று உறுதிப்படுத்தி வந்த கட்டுரை இது.

அன்பின் நடராஜன் ! சரியாகச் சொன்னீர்கள். தமிழில் படிப்பதில் புரிதல் எளிதாகியிருந்தது. நான் தமிழ்ப் பள்ளியில் பயின்றவன். பத்தாம் வகுப்பு என நினைக்கிறேன். எனது வகுப்பாசிரியர் அன்று வரவில்லை. ஆங்கில பள்ளிப் பையன்களுடன் வகுப்பில் சேர்ந்து உட்கார வைத்திருந்தார்கள். ஆசிரியர் பட்சி நாஜன், அப்பையன்களுக்கு ( பொதுவாக ஆங்கில ஊடக வகுப்புகள் A பிரிவுகளாகத்தான் எங்கள் பள்ளியில் இருக்கும் ) ஆங்கிலத்தில் Law of Conservation of energy பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்குத் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.

அந்த கோட்பாடு இவ்வளவு தான். Energy can neither be created nor be destroyed. If one form of energy is completely consumed without waste, it would appear in another form” எனக்கு இத்தனை புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்தவனை, வகுப்பு முடிந்ததும் பட்சிராஜன் சார் கூப்பிட்டனுப்பினார். “என்னலே புரிஞ்சுதா?” என்றார் “இல்லை சார்” என்றேன்.

“ஆங்கிலத்துல ரெண்டு வார்த்தை புரியலை.. நீயெல்லாம் எப்படி தேர்ச்சி பெறப் போறியோ?”

அத்தனை வாத்தியார்கள் முன்னால் அவர் உரக்கச் சொன்னதில் அழுகை வந்துவிட்டது. கண்ணீர் தழும்ப நின்றிருந்த என்னை, தேவசகாயம் சார் அழைத்தார். அவர் C பிரிவுக்குத் தமிழில் அறிவியல் எடுப்பவர். நான் H பிரிவு வகுப்பு.

“இதப் படில. என்ன எழுதியிருக்கு?” என்றார். அவர் கையில் தமிழில் உள்ள அறிவியல் புத்தகம். மனதுக்குள் படிக்க நினைத்தேன். அவமானத்தில் கவனம் செல்லவில்லை. “உரக்கப் படிலே” தேவசகாயம் சார் குரல் உயர்ந்தது.

“ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ஒரு வகையாற்றல் சேதமின்றி மறையுமாயின், பிரிதொரு வகையில் வெளித்தோன்றும்” (இப்பவும் ஒவ்வொரு வார்த்தையும் அக்கோட்பாட்டில் நினைவிருக்கிறது).

“இப்ப புரியுதால?” என்றார் தலையை ஆட்டினேன். தேவசகாயம் சார் இரண்டு நிமிடத்தில் இன்னும் விளக்கினார். “போ!” என்றார்.

இன்றும் சொல்கிறேன். தமிழில் படித்தால் அடிப்படைக் கோட்பாடுகள் இன்னும் இலகுவாகப் புரியும். தமிழில் புத்தகங்கள் இல்லாததும், பின்னர் வெளியுலகில் தொடர்புகொள்ள ஆங்கிலத்தில் அதனை வெளிப்படுத்தும் திறனும் இல்லாது போகும் தயக்கமுமே தமிழில் அறிவியல் வளராததற்குக் காரணம். இன்னும் ஒன்றும் குடி முழுகிப்போகிவிடவில்லை !

 

 

நன்றி

உங்கள் குரல், மலேசியா

சனவரி 2006

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *