“நான் பேஷ் இமாமாக பணிபுரியும் பெரிய பள்ளிவாசல் மஹல்லா நிர்வாகம் தீன் மற்றும் துனியாவின் கல்விக்காக அரும்பாடுபட்டு வருவதை பெரும்பேறாகக் கருதுகிறேன். இந்த மஹல்லாவிலிருந்து இமாமத் செய்வதை புனிதமாகக் கருதுகிறேன்” என்று இருகரம் ஏந்தி அல்லாஹ்வை மனதில் எண்ணி நம்மிடம் பெருமைப்படுகிறார். முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலின் இமாம் அல்ஹாஜ் மெளலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் அவர்கள்.
முதுகுளத்தூரில் பெரிய பள்ளிவாசல் திடல் பள்ளிவாசல் மற்றும் முஸ்தபாநகர் பள்ளிவாசல் என மூன்று பள்ளிவாசல்கள். மூன்று மஹல்லாக்கள். மூன்று ஜமாத். மூன்று நிர்வாகம் என இருந்தாலும் கூட பெரியபள்ளியின் இமாமான இவர் மற்ற இரண்டு மஹல்லாக்களின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். இராமநாதபுரம் ஷரீயத் கெளன்சிலின் மெம்பராகவும் தொடர்ந்து இருந்து வரும் இவர், தனது மஹல்லா நிர்வாகத்தின் திறமைமிக்க சேவையினை புகழ்ந்து பாராட்டுகிறார். இவர் பெருமையாக சொன்ன செய்திகள் ஏன் மற்ற ஊர் மஹல்லாவாசிகளும் இதேப்போன்ற நற்காரியங்களை தங்களது ஊரிலும் செய்திடக்கூடாது எனும் எண்ண அலைகளை நமக்குள்ளே எழுப்பின. மெளலவி அஹ்மது பஷீர்சேட் சொல்கிறார்.
“நமது மஹல்லா நிர்வாகத்தில் இயங்கிவரும் கல்விக்கூடம் கடந்த 1928 ல் தொடங்கப்பட்டு படிப்படியாக தரம் உயர்ந்து இன்றைக்கு மேல்நிலைப்பள்ளி எனும் நிலைக்கு வந்து பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி எனும் புகழ்மிக்க பெயரோடு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. மொத்தம் 2500 பேரில் 900 பேர் இஸ்லாமிய மாணவர்கள். இங்கு சுற்றியுள்ள பள்ளிக்கூடங்கள் மூன்றை விட எங்களது மஹல்லா நிர்வாகம் எடுத்து நடத்தும் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் தான் மாணவர் எண்ணிக்கை அதிகம்”. என்று கூறும் மெளலவி அஹ்மது பஷீர் அவர்களிடம் தேர்ச்சி விகிதம் பற்றி கேட்ட போது :- “கடந்த ஆண்டில் 10 ஆம் வகுப்பில் 93% மாணவர்களும், 12 ஆம் வகுப்பில் 95% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாஷா அல்லாஹ்…” என்றார்.
ஒரு இஸ்லாமிய சமுதாயத்தினர் பள்ளிக்கூடம் பற்றி இவர் சொல்லச் சொல்ல ஏன் மற்ற ஊர் மஹல்லா நிர்வாகிகள் இந்த நல்ல முன்னுதாரணத்தை பின்பற்றக்கூடாது எனும் எண்ணம் நமக்குள் தோன்றியது. சமுதாயக்கல்விக்காக நீங்களும், உங்களது மஹல்லாவும் ஏதாவது செய்துள்ளீர்களா? என நாம் கேட்க மெளலவி அஹ்மது பஷீர் சொன்னார். “நமது ஜமாஅத்தைச் சேர்ந்தது துபாய் வாழ் நன்கொடையாளர்கள் 100 பேரிடமும் நன்கொடை பெற்று 9,10 –வது வகுப்புகளுக்கு சிறப்பு கல்விக்கான டியூசன் சென்டர் நடத்துவதுடன் தீனியாத் கல்வியையும் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு இலவசமாகவே நடத்துகிறோம். வருடம் இருமுறை பெண்களுக்கான விஷேச பயான் சொற்பொழிவு நடத்துகிறோம். மேலும் பெண்களுக்கென தொழுகைக்காக ஒரு மஜ்லிஸ் கட்டுமானப்பணி நடந்து கொண்டிருக்கிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில் இப்பணி முடிவடையும்.”
நல்லாசிரியர் டாக்டர் அல்ஹாஜ் எஸ். அப்துல் காதர் அவர்களோடு இணைந்து அவரது நல்ல ஆலோசனைகளோடும் பல்வேறு நற்காரியங்களை சமுதாயத்திற்கு செய்து வருகிறார். 35 ஆண்டு காலமாக இந்த பகுதியில் இமாமத் செய்துவரும் மெளலவி அஹ்மது பஷீர்.
ஒரு மஹல்லா நிர்வாகத்தின் கீழ் இருந்து கொண்டு தன்னாலும், தனது மஹல்லாவினாலும் இவ்வளவு நல்ல காரியங்களை சமுதாயத்திற்கு செய்திட முடியும் எனும் நம்பிக்கையோடு தனது தாதா, தனது தந்தையைத் தொடர்ந்து தாம் இந்த இமாமத் பணியை மேற்கொள்ள அல்லாஹ் பேரருள் புரிந்தமைக்காக அல்லாஹ்விடம் கையேந்தும் இவர் இந்தப் பகுதியில் இன்றுவரை தனது இந்த இறைப்பணியால் கிடைத்த பெருமையையும், அந்தஸ்தையும் எண்ணி உள்ளுக்குள் மகிழ்கிறார். ஆனால் நான்காவது தலைமுறையாக இதே இறைப்பணியை தனது மகனிடம் ஒப்படைக்க இயலாமல் போனதை எண்ணி உள்ளுக்குள் வேதனையும் அடைகிறார்.
“கல்வியின் தொடர்ச்சியை நான்காவது தலைமுறையில் காண முடியாது. செல்வத்தின் தொடர்ச்சியை மூன்றாவது தலைமுறையில் காணமுடியாது… அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காகவே இந்த சுழற்சியை வைத்துள்ளான்” எனக்கூறிய மெளலவி அஹ்மது பஷீர் அவர்களின் கருத்தை நாமும் ஏற்றுக்கொண்டு நான்காவதாக அவருக்குப் பின் அவரது தலைமுறை இமாமத் பணியை தொடர முடியாத அவரது மனவலிக்கு மருந்திட்டு விட்டு திரும்பினோம்.
இவரும் இவரது மஹல்லா நிர்வாகிகளும் முதுகுளத்தூரில் செய்து வருவது மகத்தான பணி. இப்பணியை இதர ஊர்களிலும் பின்பற்றினால் சமுதாயம் முன்னேறும் எனும் உறுதியோடு விடை பெற்றபோது மெளலவி அஹ்மது பஷீர் அவர்களின் அடர்ந்த வெள்ளை தாடியுடன் கூடிய “ரவனக்” கான முகம் மட்டும் நமது மனதில் நிலைத்து நின்றுவிட்டது.
நன்றி : சமவுரிமை – ஆகஸ்ட் 2011