காங்கிரஸ் பேரியக்கத்தின் அகில இந்திய பிரதிநிதியும் மதுரை மாநகர் போற்றும் மருத்துவ நிபுணருமான டாக்டர் அமீர் ஜஹான், இதே மதுரையில் டாக்டர்களாக பணியாற்றும் டாக்டர். ஷேக் முஹம்மது மைதீன், டாக்டர் சக்திமோகன் முதுகுளத்தூர் டாக்டர் குலாம் தஸ்தகீர், பதிவுத்துறையில் மாவட்ட பதிவாளராக பணிபுரியும் திரு.சி. இராஜசேகரன் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று இன்றைக்கு பயிற்சி ஆட்சியாளராக பணியாற்றிவரும் மணிகண்டன்.. இவர்கள் மட்டுமல்லாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தரமான வாழ்க்கை நெறியோடு வாழ்ந்துவரும் பலரும் தங்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு பெரும் காரணமாயிருந்தவர் யார்? எனக்கேட்டால் அனைவரும் ஒருவர் பக்கமே மரியாதையோடு கைநீட்டுவார்கள்.
அவர்…?
இவர்களையெல்லாம் உருவாக்கிய நல்லாசிரியர் முதுகுளத்தூரைச் சேர்ந்த அல்ஹாஜ் எஸ். அப்துல் காதர்… !
கடந்த 1958ல் முதுகுளத்தூர் பள்ளிவாசல் நடுநிலைப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றிய அப்துல் காதர் தனது திறமையால் அதே பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனார். தொடர் கல்விச்சேவையால் 1974-75 ஆம் ஆண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது பெற்ற இவர் ஆசிரியர் பணியின்போதே தனது கல்வியையும் உயர்த்திக்கொண்டு தனது பள்ளியையும் உயர்த்தினார் என்பது மிகையாகாது.
ஆம் ! 1978 ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்த இந்த நடுநிலைப்பள்ளி 1987 ல் இவரது பெருமுயற்சியால் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து இதே பள்ளிக்கு தலைமை ஆசிரியராகவும் சிறப்பாக பணியாற்றினார் என்பதற்கான அடையாள வைரமணிகளாய் மின்னிடுவோர் பட்டியலைத்தான் இவர் உருவாக்கிய முன்னாள் மாணவர்களாய் ஆரம்பத்தில் சில பிரபலங்களின் பெயர்களைத் தந்தோம்.
1991 ல் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராய் பணி நிறைவு பெறுவதற்கு முன்பு 1990ல் இவரது சேவையை பாராட்டி குடியரசுத்தலைவரின் பொற்கரங்களால் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் பணியில் இருந்தபோதே இஸ்லாமிய சமுதாய சேவையில் ஈடுபட்ட இவர் இன்று வரை தொடர்ந்து அதை செய்து வருகிறார். 1963 ஆம் ஆண்டு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களை அழைத்து மீலாது விழாவினை மிகச்சிறப்பாக நடத்திய இவரது சேவையை இந்த பகுதி மக்கள் இன்றும் நினைவு கூர்கிறார்கள்.
பணி ஓய்வுக்குப்பின்பும் தனது சமுதாயப்பணியினை தொடரும் அல்ஹாஜ் டாக்டர் எஸ். அப்துல் காதர் அவர்களுக்கு உற்ற துணையாய் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மெளலவி ஹாஜி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் அவர்கள் அமைய டாக்டர் அல்ஹாஜ் என்.அப்துல் ரஹ்மான் (யு.எஸ்.ஏ) அவர்களை புரவலராகக் கொண்டு நைனா முஹம்மது காதர் அம்மாள் அறக்கட்டளையை நிறுவி பல்வேறு சமுதாயப் பணிகளை தற்சமயம் செய்து வருகிறார். அந்த வரிசையில்
பல இஸ்லாமிய அனாதைச் சிறார்களை பராமரிக்கும் ரஹ்மானியா எத்தீம்கானா 1993-ல் ஆரம்பிக்கப்பட்டது. 1994 ல் மூன்று ஆண்டு ஆலிமா கோர்ஸுக்கான ரஹ்மானியா நிஸ்வான் மதரஸா ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது. இதிலேயே உள்ளூர் பிள்ளைகளுக்கு குர் ஆன் ஓதுதல் பயிற்சியும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து 1995ல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மிகக்குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கும் ரஹ்மானியா தொழிற்பயிற்சி நிலையம் துவங்கப்பட்டு ஒயர்மேன், பிட்டர் மற்றும் எலக்ட்ரீஷியன் பயிற்சிகள் தரப்படுகின்றன.
1996ல் பெண் நூலகரை நியமித்து ரஹ்மானியா பெண்கள் இலவச நூல்நிலையம் உருவாக்கி இதில் எல்லா மதத்து பெண்டிரும் வந்து இஸ்லாமிய நூல்கள் மட்டுமின்றி பொதுவான உலக நடைமுறை நூல்கள், இதழ்கள் முதலியவற்றையும் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
சமுதாயத் தொண்டோடு நின்றுவிடாமல் பொது நலத்தொண்டு எனும் வகையில் அரசால் நடத்தப்பட்டு வரும் அறிவொளி இயக்கத்தின் வல்லுனராக பணியாற்றி கல்லாமையை இல்லாமை ஆக்கிய இவர், முதுகுளத்தூர் ஓய்வூதியர்கள் சங்கத் தலைவராகவும் இருந்து தள்ளாடும் வயதிலும் தள்ளாடுவோருக்கு இன்றளவும் அருஞ்சேவையாற்றி வருகிறார்.
இவரது ஆசிரியப்பணி, சமுதாயப்பணி, பொதுத்தொண்டுகள் ஆகியவற்றை பாராட்டி இலங்கையில் உள்ள அகில உலக திறந்த வெளிப்பல்கலைக்கழகம் கடந்த 1996 ஆம் ஆண்டு இவருக்கு கெளரவ முனைவர் பட்டம் (டி.லிட்) வழங்கி இவரை பெருமைப்படுத்தியுள்ளது. தாய் தந்தையரை பல ஆண்டுகளுக்கு முன்பே இழந்துவிட்ட ஹாஜி எஸ்.அப்துல் காதர் தனது 45 ஆம் வயதிலேயே மனைவியையும் இழந்துவிட்டதுதான் இவரது வாழ்வின் பெரும் சோகம். இருப்பினும் மறுமணம் எதையும் நாடாமல் மனதை சமுதாய மற்றும் பொது நலனில் ஈடுபடுத்திக் கொண்ட இவரது சேவை போற்றுதற்குரியது. இதை நாம் சொல்வதைவிட இவர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவுடன் சமுதாயத்தினர், இவரது முன்னாள் மாணவர்கள், இவரது சேவையை உணர்ந்தவர்கள், இவரது பணியின்போது வேறு துறைகளில் பணியாற்றிய சம காலத்தவர்கள் என பலர் அனுப்பிய வாழ்த்துக்கடிதங்களில் போலீஸ்சப்-இன்ஸ்பெக்டராகிய ஆ.கணேசன் என்பவர் அனுப்பிய வாழ்த்துக்கடிதத்திலிருந்து சில வரிகளைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் எனக்கருதுகிறோம்…
அந்த வரிகள்:
“உங்களது சேவை நிறைந்த உருவத்தை எல்லையில்லா வானத்தில் தீட்டிட நினைக்கும் எனக்கு உங்களது அரும்பெரும் சேவையை எப்படி இந்தச் சிறிய கடிதத்தில் அடக்கிடமுடியும்?”
ஆம்; அல்ஹாஜ் டாக்டர் எஸ்.அப்துல் காதர் அவர்களின் பணி ஓர் எல்லைக்குள் அடக்கிட முடியாதது. வளர்க அவர் பணி. வாழ்க அவர் நீடுழி. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் நல்லருள் புரிவானாக…!
நன்றி :
சமவுரிமை – ஆகஸ்ட் 2011