தமிழ் இந்தியாவின் தலைமைமொழி என்றும் இலண்டன் பல்கலைக் கழகத்தில் அதனைப் பாட மொழியாக்க வேண்டும் என்றும் இந்தியாவின் தேசத் தந்தையாகப் போற்றப்படும் காந்தியடிகள், 1906 ஆம் ஆண்டிலேயே குரல் கொடுத்திருக்கிறார். (ஆனால் தமிழ்நாட்டிலேயே தமிழ் இன்னும் பாடமொழியாக்கப்படவில்லை என்பதும், மாறாக மழலையர் பள்ளியிலிருந்தே தமிழ்நாட்டில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்பதும் இன்றுள்ள அவலநிலை)
தமிழை விருப்பப் பாடமொழியாக இடம் பெறச் செய்யவேண்டும் என்று காந்தியடிகள், 1906 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக் கழகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். அம்மடலைத் தென்னாப்பிரிக்காவிலிருந்து அப்போது அவர் நடத்தி வந்த ‘இந்தியன் ஒப்பீனியன்’ ( இந்தியரின் கருத்து ) என்ற ஏட்டில் வெளியிடவும் செய்தார்.
ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அயல்நிலமான தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு தமிழ்மொழிக்காகவும் தமிழருக்காகவும் காந்தியடிகள் எழுப்பிய குரல் இன்று எண்ணிப் பார்க்க வியப்பூட்டுவதாய் இருக்கிறது.
1904 ஆம் ஆண்டில் தரூபன் (Durban) நகருக்கு அருகிலுள்ள போனிக்கிசு பண்ணையில் அவர் ஏற்படுத்திய தொடக்கப்பள்ளிக்கு அவரே தலைமையாசிரியர். அங்குப் பணியாற்றிய மற்ற ஆசிரியர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். தென்னாப்பிரிக்காவில் அரசு மொழியாக ஆங்கில மொழியே இருந்து வந்த போதிலும், காந்தியடிகள், குழந்தைகளுக்கு அவரவர் தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்கப்பட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இயன்ற வழிகளிலெல்லாம் அதைச் செயற்படுத்தினார்.
தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழைக் கற்பிக்க அங்கு ஆசிரியர் கிடைக்காததால், காந்தியடிகள் தாமே தமிழாசிரியராகப் பொறுப்பேற்றுத் தாமறிந்த அளவில் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுத்தார். இதற்காகப் போப்பு இலக்கணப் புத்தகத்தைத் தருவித்துப் படித்தார். தமிழ்நாட்டிலிருந்து தமிழைச் சொந்தமாகக் கற்றுக் கொள்வதற்கு உதவக்கூடிய நூலை திரு. நடேசன் என்பவர் மூலமாக வருவித்து தமிழ் கற்றார். சென்னையிலிருந்து தமிழாசிரியர் ஒருவரை அனுப்பி வைக்க முடியுமா என்று தமக்குத் தெரிந்தவர்களுக்குக் கடிதம் எழுதியும் கேட்டார்.
தமிழர்கள் வாழ்ந்துவந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பிள்ளைகளுக்குத் தமிழ்மொழியைக் கற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தென்னாப்பிரிக்க அரசையும் வற்புறுத்தியிருக்கிறார்.
தகவல் :
முனைவர் கவிஞர் மின்னூர் சீனிவாசன்
தமிழ்த்துறைத் தலைவர் ( ஓய்வு )
அரசினர் கலைக் கல்லூரி
சென்னை
நன்றி :
உங்கள் குரல், மலேசியா
சனவரி 2006