அமைதி தரும் இன்பம்

இலக்கியம் கட்டுரைகள்

 

என்.எஸ்.எம். ஷாகுல் அமீது

 

அமைதி என்னும் மூலப்பண்பில் இருந்துதான் அனைத்து பண்புகளும் வெளிப்படுகின்றன. மரணித்து விட்டதாக நாம் கருதும் பூமியின் மீது ஒரு சில மழைத்துளி விழுந்ததுமே, புல்வெளிகள் புறப்பட்டுப் படருகின்றன. அமைதியான இதழில் புன்னகை பூக்கிறது ! அமைதி இழந்த மனதில் பூகம்பம் பிறக்கிறது. அமைதி தழுவினால் ஆனந்தமும், அமைதி அழிக்கப்பட்டால் பிரளயமும் உருவாகிறது.

மனித மனத்தின் சில பண்புகள் அமைதியின் சுயம்பாக வெளிப்பட்டு உலகை அன்புருவாக மாற்ற முயலுகிறது. மற்றவை அமைதியைக் கிழித்துக் கொண்டு வந்து தானும் ஆடி உலகையும் தவறான போக்கில் ஆட்டுவிக்கிறது. அறியாமையின் கோரப்பிடியில் ஒரு பக்கமும், அதிகார மமதையின் ஆதிக்க வெறியில் மறுபக்கமும் சிக்குண்டுள்ள உலகம் கொலைவெறி கொண்டு தலை விரித்தாடும் தீவிரவாதப் போக்கினால் அச்சமுற்று அமைதியின்றி தவிக்கிறது.

எத்தனை கோடி இன்பம், எத்தனை கோடி துன்பம் என்று வரையறை செய்ய முடியாமல் விரவிக் கிடக்கும் பரந்த உலகில், இடையிடையே அமைதி வெளிச்சம் தோன்றிக் கொண்டிருப்பதால் தான், உலகம் இன்றும் உயிர்ப்புடன் காட்சியளிக்கிறது.

இன்பம் அமைதியைத் தருகிறது என்றால், துன்பமோ அந்த அமைதியை இழக்கச் செய்கிறது. ஆனால் இன்பமோ, துன்பமோ எவரினும் அமைதிதான் இலக்கு என்று இலக்கணம் கண்டவர்களுக்கு என்றும் எப்போதும் அமைதியே தங்கும் இடமாகி விடுகிறது.

“நாளையே பட்டாபிஷேகத்திற்கு தயாராகி வா !” என்று முதல் நாள் தந்தை அழைத்தபோதும் அடுத்த நாளே, கைகேயின் சூழ்ச்சி வலைக்குள் சிக்குண்டு “இன்றே 14 ஆண்டுகள் வனவாசம் போ !” என்று அனுப்பிய போதும், “சித்திரத்தில் வைத்த செந்தாமரை முகத்தினாய்” அமைதி காத்த இராமபிரான் வாழ்ந்து காட்டிய பாதைதான் பாரத பூமியின் அத்தனை ரேகைக் கோடுகளும்.

(இராமனின் அமைதிக்கு கம்பன் கையாண்ட உவமை மிக நேர்த்தியானது. காலையில் மலரும் தாமரை மாலையில் வாடிவிடும். ஆனால் சித்திரத்தில் வரையப்பட்டுள்ள தாமரையோ எப்போதும் ஒரே நிலையில் மலர்ந்தபடி இருக்கும்)

இருப்பவன் தரமாட்டான், இல்லாதவன் விடமாட்டான் என்று மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில், இந்த அமைதியின் ரேகைகள் வறுமைக்கோடுகளாகவும், வன்முறைக்களமாகவும் மாறி மாறி வெளிச்சம் போட்டுக் காட்டி, பாரதத்தை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறது !

ஏழ்மையும், பிணியும் இறைவனால் மனிதனுக்கு வைக்கப்பட்ட சோதனை என்பதை நாம் உணரத் தலைப்பட்டாலே, அமைதி வழியில் வறுமை வரை பயணத்தை தொடர்வது மிகவும் எளிதாகி விடும். அமைதியின் முழு வடிவாய் அமைதியாய் விளங்கும் இறைவன், அவனது சோதனைகளையும் அமைதி வழியில் வெல்லச் சக்தி பெற்றதாகத்தானே தனது படைப்பினங்களையும் வடிவமைத்திருக்க வேண்டும்? ஒவ்வொருவருக்கும் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளும் இந்த தத்துவ விசாரமே உள்ளொளியைத் தூண்டி உண்மையான அமைதியை வெற்றிப் பாதையாக்கித் தந்து விடும்.

ஏழ்மைக்கு உண்மையான மருந்து பொறுமை தான். பசிப்பிணியில் உழலுபவன் கூட தனது வாழ்வின் உரிமைக்காக போராட நேரிடும்போது பிச்சை எடுத்தோ அல்லது திருடியோ தனது வயிற்றுப்பசியைத் தீர்த்துக் கொள்ளும்போது அவனது வயிறு வேண்டுமானால் உடன் அமைதி கொள்ளலாம். ஆனால் அதுவரை அவனது வயிற்றில் இருந்த நெருப்பு, இப்போது அவனது மனதை, மானத்தைப் பற்றிக்கொண்டு வாட்டத் தொடங்கி விடுவதால் மொத்தத்தில் அவன் அமைதியிழந்து விடுகிறான்.

“தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற பாரதியின் வரிகளை இருப்பதை பிறருடன் பகிர்ந்து உண்ணாதாரை எச்சரிக்கும் அசரீரியாக மட்டுமே பார்க்க முடியும். பிரளயத்தில் முடியும் இந்த மயான அமைதியில், அதனை அனுபவிக்கவும் எவரும் இருக்க மாட்டார் !

ஆனால் “அடுத்த வீட்டுக்காரன் பசியோடு இருக்க, நீ மட்டும் உண்ணாதே” என்ற முகமது நபிகள் (ஸல்) காட்டிய அன்பு வழியில் பகிர்ந்துண்ணும் உழைப்பு மட்டுமல்ல, உலகைப் பிணைக்கும் ஒற்றுமையெனும் கயிறும் அமைதியாக பின்னப்படுகிறது !

அமைதியும் கல்வியும்

மனம் சலனமில்லாமல் அமைதியுடன் இருக்கும்போது தான் நம்மால் நல்ல கல்வி பெற முடிகிறது. மெய்ஞானம் பெற்ற மேதைகளும், அவர்களின் மோனத் தவம் தான் அத்தகைய அருளொளியைப் பெற உதவியது என்பதை உலகுக்குக் காட்டியுள்ளனர். ஹிராக் குகையில் அமைதியாக தவமிருந்த போதுதான், முகமது நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் அருளப்படுவது துவங்கியது. புத்தனுக்கு ஞானம் தந்தது போதிமரமல்ல, அவனின் அமைதியான தவம் தான்.

கல்வியே அமைதியின் வடிவானது தான். உலகை அமைதிப்படுத்தவே கல்வி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே கற்பிப்போரின் இலக்கு. ஆனால் இன்று அணுகுண்டு தயாரிப்பவர்கள் கூட “உலக அமைதிக்காக” என்றுதான் பிடகடனம் செய்கிறார்கள். உலகமோ அந்த அணுகுண்டு இடம் மாறும் கையையே விழி மூடாமல் அமைதியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த அமைதி மயான அமைதி !

பீதி நிறைந்த இந்த அமைதி உண்மையில் பல ஊமைச் சத்தங்களை உள்ளடக்கியது.

ஆரோக்கியமானதல்ல இந்த அமைதி !

கர்த்தாவை (மனிதனை) விட்டு விட்டு கருவியை மட்டுமே சார்ந்ததாக இன்றைய கல்வி முறை அமைந்து விட்டதும் அமைதியிழந்த உலகை நோக்கிய நமது பயணத்திற்கு முக்கிய காரணமாகும். விஞ்ஞான வளர்ச்சி பற்றி வாய் கிழிய பேசிச் செல்லும் இன்றைய சமுதாய அமைப்பில்தான், வறுமையின் காரணமாக தனது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்ட ஒரு கூலித்தொழிலாளி, பல அறிவியல் செயல் வடிவங்களை அநாயசமாக செய்து காட்டி தமிழகத்தின் பிரபல பத்திரிகைகள் அனைத்திலும் இடம் பெற்று பல பாராட்டுதல்களை பெற்று விட்டபோதும்கூட அவரை நம்பி கடன் கொடுத்து அவரது முன்னேற்றத்திற்கு உதவ வங்கிகள் முன்வரவில்லை; அரசும் கருணை காட்ட முடியவில்லை ! நமது கல்வி முறை அவரை என்றோ கைகழுவி விட்டு விட்டது. ஆனால் அவரோ இன்றும் பல பள்ளிக்குழந்தைகளுக்கு தான் பெற்ற அறிவை செயல்முறை விளக்கமாக போதித்து வருகிறார். பாரதத்தை அலங்கரிக்கும் பல படிக்காத மேதைகளின் கதை இப்படித்தான் இருக்கிறது. கணித மேதை இராமானுஜம், மாற்றான் தோட்டத்தில் வைத்துத்தான் மலர்கிரீடம் சூட்டி மகிழும் பேறு பெற்றார் !

மனிதய நேயம் பற்றிய அறிவுக்கு எந்த மதிப்பெண்ணும் பள்ளியில் இல்லாததால், உலக வாழ்விலும் அதற்கு மதிப்பில்லை என்று நமது பிள்ளைகளுக்கு இளமையிலேயே விதைக்கப்பட்டு விடுகிறது. இன்றைய கல்வி கற்றுத்தரும் ஆதிக்கப் போட்டியில், அமைதிக்கு எந்த உத்தரவாதமும் இல்லை !

ஆனால் கல்வி என்பது அமைதி வழியில் அனைத்துக்கும் தீர்வு உள்ளதை போதிப்பதாக மாற வேண்டும். “நன்மையைக் கொண்டு தீமையை அழியுங்கள்” என்று இறை வேதத்தை நிலை நிறுத்துவதாக அமைய வேண்டும்.

சுய சார்பு பொருளாதார முறையை வளர்ப்பதாக இருக்க வேண்டும். இத்தகைய கல்வி முறைதான் அமைதியான வாழ்வுக்குப் பாதை அமைக்கும். இந்த அமைதியில்தான் நல்ல கல்வி செழித்து வளரும்.

இந்த வளர்ச்சியில்தான் உண்மையான இன்பம் எங்கும் நிலைத்து நிற்கும் !

 

நன்றி :

இனிய தமிழ் தென்றல்

ஜனவரி – மார்ச் 2005

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *