ஓ ! பாவலனே ! ப.மு. அன்வர்

இலக்கியம் கவிதைகள் (All)

 

காலத்தின் வேதனையைப் பாடு தற்கும்

கருவுயிர்த்த காரணத்தைப் பேசு தற்கும்

ஓலத்தின் எதிரொலியில் உலக ஞானம்

ஒலிக்கின்ற உண்மையினை உரைப்ப தற்கும்

ஞாலத்தின் முதல்வித்து முளைவிடுத்து

நடத்துகின்ற நாடகத்தை நவில்வ தற்கும்

மூலத்தின் கவிதையெனும் ஒளிவிளக்காய்

முகிழ்த்துள்ள பாவலனே வாராய் ! வாராய் !

 

சிந்தனையாம் தீக்குழம்பில் குளித்தெழுந்து

சிறகடிக்கும் கற்பனையில் உலகம் சுற்றி

முந்துலகின் முறைமைகளைக் கற்றறிந்து

முக்காலத் திரைவிலக்கி முழுமை கண்டு

சந்தமெனும் வீணையிலே உயிர்த்துடிப்பைச்

சலித்தெடுத்து வாழ்க்கையெனும் சோலை தன்னை

வந்தணைந்த குயிலேநீ வாராய் ! வாராய் !

வருகைக்கும் இருக்கைக்கும் விளக்கம் தாராய் !

 

உன்வரவு பொய்யுலகின் திரைவிலக்கி

உண்மையினைத் துலக்கிற்று துருப்பிடித்த

புன்மைகளைப் போக்கிற்று ! தெய்வீகத்தின்

புகழ்க்குரிய செழும்பொருளை விளக்கிக் காட்டி

இன்மையிலும் உண்மையிலும் விரவி நிற்கும்

இயற்கையெழில் நுட்பத்தை இனங்காட் டிற்று !

நன்மையெனும் சிறப்புரைக்கும் நாவைக் கொண்டோய் !

நறுக்கவிதைக் குயிலேநீ இன்னும் பாடு !

 

பனைமரத்தின் உருக்காட்டும் பனித்துளிக்குள்

பாதரச விந்தையினைக் கண்டறிந்து

தனைமறக்கும் ஓர்மையிலே தனித்திருந்து

தத்துவத்திற் கப்பாலாய், மனஞ்செல்லாத

சினையிருப்பைக் கண்டதிலே சொக்கி நின்று

தித்திக்கப் பாடுபவன் ! விடாதலைக்கும்

முனைமுறிந்த பழம்போக்கின் மூளைக் குள்ளே

முழும்புரட்சிச் சுடரேற்றும் ஞாயிறும்நீ !

 

வரலாற்றைப் பின்தொடரும் மனிதர் முன்னே

வரலாறே உனைத்தொடர வைத்தவன்நீ !

முரலாத ஊமைகளின் மனக்கொதிப்பை

முழங்குகின்ற வலம்புரிநீ ! முடக்கம் இல்லாக்

குரலாகச் சத்தியத்தின் கொந்தளிப்பாய்க்

கொடிபிடித்து வருகின்ற காலக்கோள்நீ !

புரளாத நாவுடைய பாட்டுக் கற்பின்

பூரிப்பே ! நீயின்னும் பாடு, பாடு !

 

நன்றி :

உங்கள் குரல், மலேசியா

சனவரி 2006

 

( தம்மைப் பாவலர் / கவிஞர் எனக் கருதும் ஒவ்வொருவரும், படித்துப் படித்து நெஞ்சில் பதித்துக் கொள்ளவேண்டிய கவிதை இது ! )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *