( ’தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் )
தேன் கலிமா சொல்கின்ற
திருவாயில் ஏன் மகனே
தீய சொல் விளைகின்றது?
சில நாளாய் பள்ளிக்குச்
செல்லாமல் சுற்றுகிறாய் உன்
எதிர்காலம் என்னாவது?
வான்மழையாம் கல்வி
மலை வாழையே கல்வி
மாண்புகள் அறிந்த துண்டா..?
வழிமரிச் செல்லுமுன்
பயணத்தில் ஏன் மகனே
வைகறை விடியலுண்டா..?
வீண்வாதம் வேண்டாம்
பள்ளிக்கு இன்றே நீ
விரைந்தே தான் சென்றிடுவாய் !
வெள்ளம் மீறிய பின்
அணைகட்டிப் பயனில்லை – உன்
அன்னை சொல் கேட்டிடுவாய் !
மாண்பான கல்வியின்
அருமை புரியாமல்
மறுக்காதே என் மகனே ! – என்
மகனுக்குப் படிப்பில்லை
என்ற பழிச் சொல்லை
வாங்காதே ! கேள் மகனே !
கல்வியினால் சிந்தனைசெய் !
காசினியில் உயர்வாயென
கண்ணிய குர்ஆன் கூறும் ! – உன்
காதிலே இதைவாங்கி
கருத்தாய் நடத்திடுவாய் !
காலம் உனைப்போற்றும் !
செல்வத்தில் அழியாத
செல்வமென்று சொன்னால் – அது
கல்வியெனும் செல்வமாகும் ! – இதைச்
செலவு செய்தாலும்
ஒருபோதும் குறையாது – இதன்
கீர்த்தி பலவாகும் !
இல்மை விடச் சிறப்பில்லை !
இணையேதும் இதற்கில்லை !
இன்றேனும் கேள்மகனே ! – உன்
எதிர்காலம் யார்கையில்?
யோசிப்பாய் என் மகனே
இபுலீசின் கையில் வேண்டாம் !
நல்லொழுக்கப் பாதைசெல் !
நல்அமலே நாளும் செய் !
நாயனுக்கு உவப்பாகுமே ! – இந்த
நானிலம் ஓடிவந்து
நாவாறப் பாராட்டும் ! – உன்
அன்னை சொல் கேள் மகனே !