நெஞ்சு பொருக்குதில்லையே!

இலக்கியம் கட்டுரைகள்

http://ksnanthusri.wordpress.com/2013/05/26/44/

நெஞ்சு பொருக்குதில்லையே!
By ksnanthusri on மே 26, 2013
ணெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!
என்ற பாரதியின் வரிகள் மிகச் சத்தியமானவை!
இன்றய பள்ளி, கல்லூரி பருவத்து மாணவர்கள், இளைஞர்களைப்பார்க்கும்போது இப்பாடல்தான் எனக்கு நினைவு வரும்.

முன்பெல்லாம், பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடைபெறும், அதில் பல நல்ல கருத்துகள் ஆசிரியர்களால் நிரைய வழங்கப்பெறும், ஆனால் இன்று அதற்கெல்லாம் யாருக்கும் நேரமில்லை.
இன்றய கல்வி முறை, சமுதாயச்சூழல், நண்பர்கள், சினிமா உள்ளிட்ட ஊடகங்கள், கம்பியூட்டர் உள்ளிட்ட தகவல் தொழில்ணுட்பம், நாகரிக வளர்ச்சி, பண்பாட்டு மாற்றம், கலாச்சார மாற்றம், அயல் நாட்டுப் பழக்கவழக்கங்களின் தாக்கம், கிடைக்கப்பெறும் கட்டற்ற சுதந்திரம், தனிமை போன்றவை அவர்களின் வாழ்வை வளப்படுத்துவதற்கு பதிலாக மிகவும் பிற்போக்கான பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்பதுதான் கசப்பான உண்மை.
தங்கள் அறிவுத்திறத்தால் இமாலய சாதனைகளைக்குட எளிதில் புரியும் இவர்களால் சின்னச்சின்ன தோல்விகளைக்கூட தாங்கிக்கொள்ளமுடிவதில்லை என்பதுதான் வேதனை.
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், பொதுத்தேர்வுகளில் தோல்வி கண்டவர்கள் தற்கொலை செய்துகொள்வதை அங்கொன்ரும், இங்கொன்றுமாகக் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் இன்று தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறாததால் தற்கொலை செய்துகொள்ளும் அவலத்தை பார்க்கிறோம்.
எங்கள் கல்லூரியில் ஆண்டொன்றிற்கு குரைந்தது இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்ற மிகவும் வேதனைக்குறிய செய்தியை பதிவு செய்கையில் மனது கனக்கிறது.
தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, பெற்றோர் கண்டிப்பு, ஏமாற்றம் போன்ற அற்ப காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்ளும் இவர்களுக்காக வருத்தப்படுவதா?
அல்லது அவர்களின்மீது பரிதாபப்படுவதா?
இல்லை இவர்களை இச்சூழலுக்குள் தள்ளிய சமுதாயத்தின்மீது கோபப்படுவதா?
இல்லை ஒரு பேராசிரியனாக இத்தகைய அவலங்களையெல்லாம் தடுக்க இயலா என் கைய்யாலாகாத்தனத்தை எண்ணி என்னை நானே வெருத்துக்கொள்வதா என புறியவில்லை.
நான் என் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியேரியபோது என் பேராசிரியர் என்னை அழைத்து, இனிமேல்தான் நீங்கள் வாழ்க்கைக்குள் பயணிக்கப்ோகிறீர்கள், அதில் எண்ணற்ற தடைகள் வரும், தடைகளை தகர்த்து முன்னேரவும், சிக்கல்களை எதிர்த்துப் போராடவும் பழகிக்கொள்ளவேண்டும், அதை விடுத்து எந்தச் சூழலிலும் தற்கொலை எண்ணம் மட்டும் கூடாது என்று அறிவுறை கூறினார்.
அதனை பசுமரத்தாணி போல என் மனத்தில் பதிய வைத்துக்கொண்டேன்.
நான் பேராசிரியரான பிறகு என் மாணவர்களுக்கு இதையே தவறாது அடிக்கடி சொல்லி வருகிறேன்.
இது பற்றிய கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை ஒன்றை அடிக்கடி நான் அவர்களிடம் சொல்வதுண்டு!
கூப்பிடு தூரத்தில் வாழ்க்கை – வைரமுத்து
தற்கொலை புரியப்போய்
மரணம் மறுதலிக்க
வாழ்க்கைக்குள் மீண்டும்
துப்பப்பட்டவனே
சொல்
பேய்களின் விருந்துமண்டபமாய்
மனசு உனக்கு மாறியதெப்படி?
மூளையில் எப்போது
முள்முளைத்தது உனக்கு?
*
மரணத்தின் கர்ப்பப்பையில்
கலைந்து போனவனே
நீ
செத்திருந்தால்
ஊர் அழுதிருக்கும்
சாகவில்லை
நீயே அழுகிறாய்
*
கைக்குட்டை இந்தா
கண்களைத் துடை
உயிரின் உன்னதம்
தெரியுமா உனக்கு?
மனிதராசியின்
மகத்துவம் தெரியுமா?
*
உயிர் என்பது
ஒரு துளி விந்தின்
பிரயாணம் இல்லையப்பா
அது
பிரபஞ்சத்தின் சுருக்கம்
உன்னை அழித்தால்
பிரபஞ்சத்தின்
பிரதியை அழிக்கிறாய்
பிரபஞ்சத்தை அழிக்க
உனக்கேதப்பா உரிமை?
வாழ்க்கை உன்னை
பூமிக்கு அனுப்பிய போது
கை நிறைய பூக்கள்
இப்போதென்ன…
பைந்நிறைய
சவப்பெட்டி ஆணிகள்…?

வாழ்க்கையோடு
உடன்பாடு
மனிதரோடுதான்
முரண்பாடா?
மனிதரைக் கழித்தாலும்
பூமி மிச்சப்படுமடா பாவி
*
பூமியை
கைவிடப் பார்ப்பவனே
பூமி
உன்னை கைவிடவில்லையப்பா
காற்று உன்னை மட்டும்
விட்டுவிட்டு வீசியதா?
தன் கிரணக் கீற்றுகளை
நிலா உன்மீது
நிறுத்திக் கொண்டதா?
பூக்கள் உன்னைக் கண்டு
இலைகளின் பின்னால்
தலைமறைவாயினவா?
தன் சிகரங்களில் வசிக்க
வாழ்க்கை உன்னை
வரவேற்கிறது.
நீ ஏன்
மரணத்தின் பள்ளத்தாக்கை
நகங்களால் தோண்டுகிறாய்?
*
உயிரின் விலையை
உணர்த்த வேண்டும் உனக்கு
எழுந்திரு
என் பின்னால் வா
அதோ பார்
உயிரில் பாதி
ஒழுகி விட்டாலும்
மிச்ச உயிரைக்
கோணிப்பையில் கட்டிவைத்துக்
கூனிக் கிடக்கிறானே கிழவன்- ஏன்?
அபாயம் அறிந்தால்
அங்குலப் புழு
மில்லி மீட்டர்களாய்ச்
சுருள்கிறதே – ஏன்?
பறவையாய் இருந்தும்
பறக்காத கோழி
பருந்து கண்டதும்
பறந்தடிக்கிறதே ஏன்?
மரணம் என்ற
நிஜத்திற்கு எதிராய்
மருத்துவமனையெல்லாம்
பொய்யாக இன்னும்
போராடுவது ஏன்?
வலையறுந்தும் நிலை குலைந்தும்
அந்த
ஓரிழைச் சிலந்தி
ஊசலாடுகிறதே ஏன்?
வாழ்க்கையின்
நிமிஷ நிட்டிப்புக்குத்தான்
*
தம்பீ
சாவைச்
சாவு தீர்மானிக்கும்
வாழ்வை நீ தீர்மானி
புரிந்து கொள்
சுடும் வரைக்கும்
நெருப்பு
சுற்றும் வரைக்கும்
பூமி
போராடும் வரைக்கும்
மனிதன்
நீ மனிதன்
– கவிப்பேரரசு வைரமுத்து..
புத்தகம்: வைரமுத்து கவிதைகள்
பக்க எண்: 486
ஆனால் இதனால் இதுவரை எந்தப்பயனுமில்லயே!
கடந்த பிப்ரவரி பதிநான்கில் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டான், அதற்கு அடுத்த நாள் ஒரு வகுப்பில் இந்த தற்கொலைக்கு எதிராக சுமார் ஒரு மணி நேரம் மாணவர்களிடம் உறையாடினேன்!
இருதியாக காரணம் எதுவாயினும் தற்கொலை எண்ணம் மட்டும் தவறென்று கூறி முடித்தேன், அந்த வகுப்பில் முதல் வரிசையிலமர்ந்து கேட்டுக்கொண்டிருந்துவிட்டு மிகவும் நன்றாகப்படிக்கும் மாணவி ஒருத்தி சமீபத்தில் தற்கொலை செய்துகொள்வாளென்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

 
இந்தச்சம்பவம்தான் என்னை இந்தப்பதிவை எழுதத் தூண்டியது!
நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, நுண்கலை மன்றம், லியோ, ரோட்ரக்ட் அமைப்புகள், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், மகளிர் நலம்& மேம்பாட்டுக்குழு போன்ற அமைப்புகளெல்லாம் எங்கள் கல்லூரியிலிருக்கின்றன ஆனால் இவற்றால் எந்தப் பயனும் இதுவரை இல்லை என்பதுதான் உண்மை.
கொடுமையான சாவை நோக்கி துணிவுடன் பயணிக்கும் இவர்கள் எளிமையான வாழ்க்கையை வாழ்வதற்கு அச்சப்படுவதுதான் ஏனென்று தெரியவில்லை.

 
தடுக்கி விழுவதில் தவறில்லை, எழுந்து நடந்தால்தான் வழி கிடைக்கும்!
இந்த அவலங்களை நினைத்து அழுவதில் பயனில்லை, சமூக அக்கரை உள்ள ஒவ்வொருவரும் துணிந்து எழுந்தால்தான் துயர் பறக்கும்!
முதலில் கல்வி முறையில் மாற்றம் வேண்டும்
அன்பைத்தருகிற கல்வி, அறிவை செழுமை செய்கிற கல்வி, பண்பாட்டை கற்றுத்தருகிற கல்வி, வாழ்க்கையை கற்றுத்தருகிற கல்வி, வாழ்வியல் விழுமியங்களைக் கற்றுத்தருகிற கல்வி, மனிதனை, உயிரை மதிக்கக் கற்றுத்தருகிற கல்வி நிச்சயம் வேண்டும்!
இந்த கல்வியை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிற ஆசிரியர் சமுதாயத்திற்கு முதலில் சமூக அக்கரை வேண்டும்!
வணிகமயமாகிவிட்ட கல்விச்சாலைகள் வழிபடும் கோயில்களாக உருமாறவேண்டும்!

 
பெற்றோர் தங்கள் பிள்ளைகளையும், பிள்ளைகள் தங்கள் பெற்றோரையும் நன்கு புறிந்துகொள்ளவேண்டும்!
ஊடகங்களும், தகவல் தொழில்ணுட்பமும் முற்போக்கு எண்ணங்களை இளய சமுதாயத்தின் மனதில் விதைக்கவேண்டும்!
இளய சமுதாயம் நல்லவை எவை? அல்லவை எவை? என்பதை பிரித்தறியும் பகுத்தறிவைப்பெறவேண்டும்!
உயிரை விலைபேசும் வணிகத்தை இவ்வுலகம் கைவிடவேண்டும்!
ஒரு கையைத்தட்டினால் ஓசை எழாது, வெரும் பேச்சும், எழுத்தும் தற்கொலை என்னும் கொடிய அறக்கனை விரட்டாது, உள்ளங்கள் கோடி ஒன்றிணைந்தால் இவ்வுலகம் என்றும் அழியாது!
இந்த மாற்றங்கள் நிகழாதவரை, ணெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!
என்ற பாரதியின் வரிகள்இந்த உலகத்தின் காதுகளில் ஓயாமல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்!
S

— முனைவர்- க. சரவணன் உதவிப்பேராசிரியர். தமிழ்த் துறை அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ] கரூர். 639005 தொலைபேசி: 04324255558 அலைபேசி: 9787059582 தனி மின்னஞ்சல்: tamizperasiriyar@gmail.com வலை:ksnanthusri.wordpress.com skype: ksnanthusri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *