கட்டுக்குள் விலைவாசி- அதிசயம் நடந்தது அலாவுதீன் ஆட்சியில்!

இலக்கியம் கட்டுரைகள்

-அருணன்

(செம்மலர் ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

“உயர்ந்தவன் யார்?
கிராமவாசி? நகரவாசி?
இல்லை, விலைவாசி!”
-கந்தர்வனின் கவிதை ஆட்சியாளர்கள் தயவால் காலங்காலத்திற்கு வாழும்
போலும். “முன்னெப்போதும் இல்லாத விலைவாசி உயர்வு” – எனும் வாக்கியத்தை
எப்போது சொன்னாலும் பொருந்துகிறது! இப்போது விலைவாசி – அதிலும்
உணவுப்பொருட்களின் விலைவாசி-கிடுகிடுவென உயர்ந்து கிடக்கிறது.
கட்டுப்படுத்த வழிவகை தெரியவில்லை என்று ஆட்சியாளர்கள்
கைவிரிக்கிறார்கள். இந்திய வரலாற்றில் ஒரு ஏடு என் முன்னால் படபடத்து
எழுது, எழுது என்கிறது.
ஜியாவுதீன் பரணி என்பார் முகமது பின் துக்ளக் அரசவையில் 17 ஆண்டுகள்
பணியாற்றியவர். இவர் மட்டுமல்ல, இவரது முன்னோர்களும் டில்லி சுல்தான்கள்
ஆட்சியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள். அவர்களிடமிருந்து
தெரிந்துகொண்டும், தனது நேரடி அனுபவத்திலிருந்தும் ஒரு வரலாற்று நூலை
எழுதினார். அதன் பெயர் “தாரீக்கி ஃபிரோஸ் ஷாகி”. அந்தப்பெருநூல் பற்றி
எழுதுவது என்றால் பக்கங்கள் போதாது. அலாவுதீன் கில்ஜி காலத்திலும்,
நூலின் பெயரைத் தாங்கிய ஃபிரோஸ்ஷா துக்ளக் காலத்திலும் எடுக்கப்பட்ட சில
பொருளாதார நடவடிக்கைகளை இங்குக் குறிப்பிடுவதே எனது நோக்கம். இது சந்தைப்
பொருளாதாரத்தை அதன் போக்கில் விட்டுவிடுவது என்கிற அராஜகச் சிந்தனையை
இந்த நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள்கூட அங்கீகரிக்கவில்லை என்பதைப்
புரியவைக்கும். பொருளியல் துறையில் அரசின் தலையீடு அவசியம் என்பதை 700
ஆண்டுகளுக்கு முந்தைய டில்லி ராஜாக்களே உணர்ந்திருந்தார்கள் என்பதை உணர
வைக்கும். இன்றைய டில்லி ராஜாக்களுக்கு இதிலொரு படிப்பினை இருக்கிறது.
அலாவுதீன் கில்ஜி காலத்தில் மங்கோலியர்கள் டில்லி வரை படையெடுத்து
வந்துவிட்டார்கள். அவர்களை இவன் விரட்டியடித்துவிட்டாலும் அந்த அபாயம்
இருந்து கொண்டேயிருந்தது. மீண்டும் அவர்கள் வந்தால் விரட்டியடிக்க பெரும்
படை தேவை என்பதை உணர்ந்திருந்தான். அதை எப்படி உருவாக்குவது என்று
யோசனையில் ஆழ்ந்தான். கஜானாவில் பணம் குறைவாகவே இருந்தது. குறைந்த
ஊதியத்தில் நிறைய படைவீரர்களைத் திரட்ட முடியுமா? இதற்காகத் தனது
ஆலோசகர்களை அழைத்து கருத்துக்களைக் கேட்டான். அவர்களும் உள்ள நிலைமையைப்
பட்டவர்த்தனமாகச் சொன்னார்கள்.

 
“குறைந்த ஊதியத்தில் ஒரு பெரிய நிரந்தரப் படையைப் பராமரிப்பது என்று
மேன்மை தாங்கியவரின் மனதில் ஓடும் எண்ணங்கள் சிறிதும் சாத்தியமானவை அல்ல.
குதிரைகள், படைக்கலன்களை வாங்கவும், தனது மனைவி குடும்பத்தைப்
பராமரிக்கவும் படைவீரனுக்கு இந்தக் குறைந்த ஊதியத்தால் முடியாது. மாறாக
அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலைக்கு கொண்டுவந்து விட்டால்
மேன்மைதாங்கியவரின் எண்ணத்தை நடைமுறைப்படுத்த முடியும். மங்கோலியர்களின்
பெரும் படை எனும் பயத்தைப்போக்க முடியும்” இப்படி அவர்கள் கூறியதும் தனது
அனுபவமிக்க மந்திரிமார்களைக் கலந்தாலோசித்தான் அலாவுதீன்.
அவர்களும் இதை ஏற்றுக்கொண்டதோடு மற்றொரு முக்கிய ஆலோச னையைத் தந்தார்கள்.

 
பரணி கூறுகிறார்-“தானியங்களின் விலையை அரசு விதிமுறைகள் மூலம்
கட்டுப்படுத்தாத வரை இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையாது
என்றார்கள் அவர்கள். தானியவிலைக் குறைவு என்பது சகலருக்கும் நன்மை
தருவது. எனவே சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அவை சில ஆண்டுகளுக்கு
விலையைக் குறைவாக வைத்திருந்தன”
பொருளாதார விஷயங்களைப் பொறுத்தவரை அதில் தேர்ந்தவர்களின் ஆலோசனையைக்
கேட்பது, அதைத் தனது மந்திரிமார்களிடம் கூறி அவர்களது கருத்தைக் கேட்பது
என்கிற ஒரு விரிந்த நடைமுறையை சுல்தான் அலாவுதீன் கொண்டிருந்தது
குறிக்கத்தக்கது. படைப்பெருக்கம் என்கிற ராணுவரீதியான நோக்கத்திலிருந்தே
இந்தப் பிரச்சனை அலசப்பட்டது என்றாலும், அது முடிவில் உணவு தானிய விலைக்
கட்டுப்பாட்டிற்கு இட்டுச்சென்றதை போக்க வேண்டும்.
முடிவில் இதற்காக ஏழு உத்தரவுகளைப் போட்டான் அலாவுதீன். முதல் உத்தரவானது
கோதுமை, பார்லி, அரிசி உள்ளிட்ட ஆறு தானியங்களுக்கான விலைகளைத்
தீர்மானித்தது. அந்த விலைப்பட்டியலைத் தந்துவிட்டு பரணி எழுதுகிறார் –
“இந்த விலை அளவுகள் அலாவுதீன் உயிரோடு இருந்தவரை அப்படியே இருந்தன. நல்ல
மழை பெய்தாலும் சரி, நன்றாகப் பெய்யாவிட்டாலும் சரி தானியவிலை ஒரு
டாங்குகூட உயரவில்லை. சந்தைகளில் நிலைத்த தானியவிலை என்பது அந்நாளில் ஓர்
அதிசயமாகப் பார்க்கப்பட்டது”
இந்த அதிசயம் எப்படிச் சாதிக்கப்பட்டது என்றால் அடுத்துப்போடப்பட்ட ஆறு
உத்தரவுகளாலும், இவை அனைத்தும் கறாராக நடைமுறைப்படுத்தப்பட்டதாலும்,
இரண்டாவது உத்தரவின்படி “சந்தைகளின் கட்டுப்பாட்டாளர்” எனும் ஓர் உயர்
அதிகாரி நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக நிறைய ஆட்கள்
தரப்பட்டார்கள், உரிய வசதிகள் தரப்பட்டன. புத்திசாலித்தனமான உளவாளிகளும்
சந்தைகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.
மூன்றாவது உத்தரவின்படி அரசனின் களஞ்சியங்களில் தானியங்கள்
சேமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. வரி செலுத்துவோரில் ஒரு பகுதியினர்
தானியமாகத் தரும்படி கூறப்பட்டார்கள். “சரியாக மழை பெய்யாவிட்டாலோ அல்லது
தானிய வண்டிகள் வந்து சேராவிட்டாலோ, இவற்றின் காரணமாகச் சந்தைகளில்
தானியப் பற்றாக்குறை ஏற்பட்டாலோ அரசாங்கக் களஞ்சியங்கள் திறக்கப்பட்டு
மக்களின் தேவைக்கேற்ப தானியங்கள் அரசு நிர்ணயித்த விலையில் விற்கப்பட்டன”
என்கிறார் பரணி.

 
இந்தக் காலத்தில் லாரிகளை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது
போல அந்தக்காலத்தில் வண்டிகளை எல்லாம் சந்தைக் கட்டுப்பாட்டாளர் வசம்
கொண்டு வந்தான் அலாவுதீன். இது நான்காவது உத்தரவு. பதுக்கலைத்
தடுக்கப்போடப்பட்ட உத்தரவு ஐந்தாவது. பதுக்கியவருக்கு மட்டுமல்ல, அதைக்
கண்டுபிடிக்காத அதிகாரிகளுக்கும் தண்டனை காத்திருந்தது.
விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட விலையில் தானியங்களை வியாபாரிகளுக்கு விற்றாக
வேண்டும் என்றது ஆறாவது உத்தரவு. இதிலே சுவையான விஷயம் அடுத்து வருவது-
“லாபத்தை ஈட்ட கிராமத்தாருக்கு ஒரு வாய்ப்புத் தரும் வகையில் தங்களது
விளைச்சலைத் தாங்களே சந்தைக்குக் கொண்டு சென்று, நிர்ணயிக்கப்பட்ட
விலைக்கு விற்க அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அதாவது “உழவர் சந்தை”
எனும் கருத்தோட்டம் அப்போதே நடைமுறையில் இருந்திருக்கிறது.
ஏழாவது உத்தரவும் முக்கியமானதே. “சந்தை விலை நிலவரம் பற்றியும், சந்தை
நடவடிக்கைகள் பற்றியும் மூன்று இலாக்காக்களிலிருந்து தினசரி சுல்தானுக்கு
அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன” என்கிறார் பரணி. அரசாணை போட்டுவிட்டு
பிறகு அதுபற்றி என்ன, ஏது என்றுகேட்காத ஆட்சியாளனாக அலாவுதீன் இல்லை
என்பது ஆச்சரியமான விஷயமே.
இவை எல்லாம் சேர்ந்துதான் தானிய விலைகளைக் கட்டுக்குள் வைத்திருந்தன.
பரணிக்கு புளகாங்கிதத்தைத் தடுக்க முடியவில்லை. “இது உண்மையில் இந்தக்
காலத்தின் அதிசயமே; எந்தவொரு அரசனும் இதைச் சாதித்ததில்லை” என்று
மீண்டும் கூறுகிறார்.
தானிய விலைகளை மட்டுமல்ல வேறு சிலவற்றின் விலைகளையும் கட்டுக்குள் வைக்க
உத்தரவுகள் போட்டான் அலாவுதீன். அது அந்தக் காலத்திய வாழ்வியலையும்
அடையாளம் காட்டுகிறது. குதிரைகள், அடிமைகள், கால்நடைகள் ஆகியவற்றிற்கு
சகாய விலையைக் கொண்டுவர நான்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதில்
நான்காவது உத்தரவு கூறியது – ‘ஒரு பணிப்பெண்ணின் விலை 5 முதல் 12
டங்காக்கள், ஒரு வைப்பாட்டியின் விலை 20, 30 அல்லது 40 டங்காக்கள் என்று
நிச்சயிக்கப்பட்டன. ஓர் ஆண் அடிமையின் விலை 100 அல்லது 200 டங்காக்கள்
அல்லது அதற்கும் குறைவு.” சுல்தான்கள் காலத்திலேயே நிலப்பிரபுத்துவ
அமைப்புமுறை வந்துவிட்டது என்றாலும், அடிமைச் சமுதாயத்தின் கூறுகளும்
தொடரவே செய்தன.
“சந்தைகளின் கடைகளில் விற்கப்படும தொப்பி முதல் செருப்பு வரையிலான,
சீப்பு முதல் ஊசி வரையிலான பொருட்களுக்கும் குறைந்த விலைகளைத்
தீர்மானிக்கப் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இவை மிகவும் சாதாரணப்
பொருட்கள் என்றாலும் அவற்றுக்கும் விலைகளை நிர்ணயிக்கவும்,
விற்பனையாளர்களுக்கான லாபத்தை முடிவு செய்யவும் சுல்தான் பெரும் கவனம்
செலுத்தினார்” என்கிறார் பரணி.
டில்லி சுல்தான்கள் என்றால் ஏதோ படை நடத்துவதிலும், இந்து ராஜாக்களை
வீழ்த்துவதிலும், கோவில்களை இடிப்பதிலும், மசூதிகளைக் கட்டுவதிலும்
காலத்தைப் போக்கியவர்கள் என்கிற சித்திரமே நாமக்கெல்லாம் தரப்பட்டு,
இப்போதும் அதுவே மனசில் தங்கியிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு வேறொரு
முகமும் உண்டு என்பது பரணி போன்ற அந்தக் காலத்திய வரலாற்றாளர்களின் மூல
நூல்களைப் படிக்கும் போதுதான் புரிபடுகிறது.
இதன்பொருள் சுல்தான்களின் முரட்டுத் தனத்தையோ, கொடூரத் தண்டனை முறையையோ
மூடி மறைப்பதல்ல. இந்த விலைக் கட்டுப்பாட்டைச் சாதிக்கக்கூட அத்தகைய
வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது உண்மையே. “குறைந்த எடைபோட்டு பொருளை
விற்றால் விற்றவருக்கு கசையடி கொடுக்கப்படும் அல்லது தொடையிலிருந்து சதை
வெட்டப்படும்” என்கிறார் பரணி. இதுவெல்லாம் நடந்தது. ஆனால்
வெகுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களைத் தரவேண்டும் என்பதில் அந்த
சுல்தான் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டான் என்பதையும் சேர்த்துச்
சொல்வதுதான் வரலாற்றக்கு நியாயம் செய்வதாகும்.
அலாவுதீன் காலத்தில், ‘சந்தைக்காரர்கள் நாணயமாக நடந்து கொண்டார்கள்’
என்றும், ‘அலாவுதீன் மரணமடைந்ததும் சந்தைக்காரர்கள் குதூகலமடைந்து
மேளங்கள் முழங்கினார்கள்’ என்றும் இரு காட்சிகளையும் சொல்லியிருக்கிறார்
பரணி. இதிலிருந்தே விலைவாசியைக் கட்டுப்படுத்த எவ்வளவு தீவிர முயற்சிகளை
மேற்கொண்டிருந்தான் அலாவுதீன் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
கில்ஜி வம்ச ஆட்சி முடிந்து துக்ளக் வம்ச ஆட்சி வந்தது. அந்த வம்சத்தைச்
சார்ந்தவன் ஃபிரோஸ் ஷா துக்ளக். தனது ஆட்சி பற்றி இவனே தன்வரலாறு
எழுதியிருக்கிறான். நூலின் பெயர் “ஃபுது ஹாதி ஃபிரோஷ் ஷாகி” இதிலே தனக்கு
முந்திய ஆட்சிகளில் முஸ்லிம் சட்ட விதிகளுக்குப் புறம்பாக விதவிதமான
வரிகள் வசூலிக்கப்பட்டதாகவும், தான்அவற்றை எல்லாம் ரத்து செய்ததாகவும்
கூறியுள்ளான். நீக்கப்பட்ட வரிகளை வசூலிக்கிற அதிகாரிகளுக்குத் தண்டனை
தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளான்.
“கஜானா வற்றினாலும் பரவாயில்ல
மக்களின் வயிறு நிரம்ப வேண்டும
மார்பு பொறுமையாக இருந்தாலும் பரவாயில்ல
இதயம் பொங்கி வழிய வேண்டும்”
– என்கிற கவிதையை அவன் மேற்கோள் காட்டியிருக்கிறான். பொருளாதார
விஷயங்களிலும் கவிதையைக் கையாளும் திறம்படைத்த ஒரு சுல்தான் இருந்தான்.
இவனது ஆட்சி பற்றி வரலாற்று நூல் எழுதிய இன்னொருவர் ஷம்ச சிராஜ் அபிஃப்.
இவர் எழுதிய நூலின் பெயரும் பரணியுடையது போல “தாரீக்கி ஃபிரோஸ் ஷாகி.”
ஆனால் பரணியின் நூலைக்காட்டிலும் இதில்தான் இந்த சுல்தானின் ஆட்சிபற்றி
நிறைய விபரங்கள் உள்ளன. பரணியின் நூலில் முகமது பின் துக்ளக் பற்றித்தான்
அதிகம் பேசப்பட்டுள்ளது.
விலைவாசி நிலைபற்றி அபிஃப்பும் தகவல் தருகிறார். “அலாவுதீனின் காலத்தில்
திறமையான நிர்வாகத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தாராளமாகக்
கிடைத்தன. ஆனால் ஃபிரோஸ் ஷாவின் காலத்தில் அவரது முயற்சி ஏதுமில்லாமலேயே
கடவுளின் கருணையால் அவை குறைந்த விலையில் கிடைத்தன” என்று சிறிதும்
தயக்கமின்றி எழுதி வைத்துள்ளார். இதிலிருந்தும் அலாவுதீன் கில்ஜியின்
பெருமை பிடிபடுகிறது.
எனினும், ஃபிரோஸ் ஷா எடுத்த சில பொருளாதார நடவடிக்கைகள் பற்றி அபிஃப்
கூறத்தான் செய்துள்ளார். அவை மிக நவீனமானவை. நமது தலைமுறைக்கு
ஆச்சரியத்தைத் தரக்கூடியவை. “நகரத்தில் யாரேனும் வேலையில்லாமலிருந்தால்
அவர்களைத் தன்னிடம் அனுப்புமாறு சுல்தான் உத்தரவிட்டிருந்தான். கொத்தவால்
தனது மாவட்ட அதிகாரிகளை அழைத்து இவர்கள் பற்றி விசாரிப்பான்.
அத்தகையவர்கள் சுல்தான் முன்பு கொண்டுவரப்பட்டபோது அவர்கள் வேலையில்
அமர்த்தப்பட்டார்கள்” என்கிறார் அபிஃப். சுல்தான் வேலைவாய்ப்பு நிலையம்
நடத்தியது போலத்தெரிகிறது! இப்படிப்பட்ட சுல்தான்களும்
இருந்திருக்கிறார்கள்.
எத்தகைய வேலைகளில் இவர்கள் அமர்த்தப்பட்டார்கள்? அபிஃப் தொடர்கிறார்-”
எழுதத் தெரிந்தவர்களுக்கு அரசாங்க அமைப்புகளிலும் தொழில்
தெரிந்தவர்களுக்கு கானி ஜஹானின் கீழும் வேலைதரப்பட்டது. ஒரு குறிப்பிட்ட
பிரபுவிடம் அடிமையாக வேலை பார்க்க எவரேனும் விரும்பினால் அதற்கான
பரிந்துரைக் கடிதத்தை சுல்தானே எழுதி அனுப்பினான். நிலமான்யம் பெற்றுள்ள
ஓர் அமீரிடம் ஒருவர் அடிமையாகப் போக விரும்பினால் அது பற்றிய உத்தரவு
அந்த அமீருக்கு அனுப்பப்பட்டது. ஆக, ஒரு சிலர்தான் வேலையில்லாமல்
இருந்தார்கள்”
சுல்தான்கள் காலத்தில் அடிமை முறையானது பெரிதும் நெகிழ்ச்சி உடையதாக
இருந்ததை நோக்க வேண்டும். மனுசாஸ்திரம் காட்டிய வருணாசிரமக் கட்டமைப்பில்
அடிமை முறையானது பிறப்பின் அடிப்படையில் இருந்தது. இப்போதோ அது தான்
விரும்பிய பிரபுவை ஓர் அடிமைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் நெகிழ்ச்சி
உடையதாக இருந்தது. “பரிந்துரைக் கடிதம்” அனுப்புகிற முறை அப்போதே
இருந்தது. பிரபு என்றால் அப்படிக்கடிதம், அமீர் என்றால் உத்தரவு.
அவருக்கு நிலமானியத்தை சுல்தான் தந்திருப்பதால் உத்தரவு. அடிமை முறையானது
பிறப்பின் அடிப்படையில் என்பதைவிட வறுமையின் காரணமாக நடைமுறையில்
இருந்தது இக்காலத்தில்.
இதன் அர்த்தம் அடிமைகள் எல்லாம் நல்ல வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதில்லை
அல்லது அடிமைவேலை கிடைத்ததும் வறுமை காணாமல் போனது என்பதுமில்லை.
அடிப்படையில் நிலப்பிரபுத்துவ சமுதாயமாக இருந்த சுல்தான்கள் காலத்தில்
வாழ்வு வாய்க்கும் கைக்குமாகவே இருந்தது. யஜமானர்களின் கோபத்தீயில்
அடிமைகளும் ஏழைகளும் கருகித் துடிக்கவே செய்கிறார்கள். விஷயம்
என்னவென்றால் ஃபிரோஸ் ஷா போன்றவர்களின் சில கருணை நடவடிக்கைகள் இருந்தன
என்பது வரலாற்று ஏடுகளில் பதிவாகியிருக்கிறது என்பதுதான்.
வேலையில்லாதாருக்கு வேலை மட்டுமல்ல ஏழைகளுக்காக இலவச மருத்துவமனைகளை
உருவாக்கினான் ஃபிரோஸ் ஷா. வரலாற்றாளர் அபிஃப் தரும் அந்தத் தகவல்
“பாதிக்கப்பட்ட ஏழைகள் அந்த மருத்துவமனைக்குச் சென்றார்கள், தங்களது
நோய்களைச் சொன்னார்கள். மருத்துவர்கள் தங்களது திறமையைப் பயன்படுத்தி
ஆரோக்கியத்தைத் தந்தார்கள். மருந்து, உணவு மற்றும் பானங்கள் அரசு செலவில்
வழங்கப்பட்டன” மக்களுக்கு மருத்துவ வசதி செய்து தரவேண்டிய கடமையை இப்போது
அரசுகள் கைகழுவி வருகின்றன. அதுவும் தனியார்மயமாகிப்போனது. “ரமணா”
படத்தில் வருவதுபோல அங்கே பிணத்திற்கும் வைத்தியம் பார்த்து பில்
போடுகிறார்கள். இந்த சுல்தான் காலத்திலோ அரசு செலவில் மருந்தும்
உணவும்தரப்பட்டது. சகல ஆட்சியாளர்களுக்கும் இந்தச் சரித்திரச் செய்தி
சமர்ப்பணம்.
இதனினும் ஆச்சரியமான செய்தி சுல்தான் ஃபிரோஸ் ஷா ஏழைப் பெண்களுக்குத்
திருமண உதவி வழங்கினான் என்பது. நவீன காலத்து நலத்திட்டம் போல உள்ளது.
“திருமண வயதுள்ள புதல்வியைக் கொண்டுள்ள எந்த மனிதரும் திவானி
கெய்ராத்துக்கு விண்ணப்பம் தரலாம். அந்த நிறுவன அதிகாரிகளிடம் தனது
நிலையையும், வறுமையையும் எடுத்துரைக்கலாம். அவர்கள் உரிய விசாரணைக்குப்
பிறகு முதல்தர விண்ணப்பதாரருக்கு 50 டங்கா நிதி உதவியும், இரண்டாம்
தரத்தவருக்கு 30 டங்காவும், மூன்றாம் தரத்தவருக்கு 25 டங்காவும் தருவார்”
என்கிறார் ஆபிஃப், “எந்த மனிதரும்” எனும் சொல்லாட்சி முக்கியமானது. மத
வேறுபாடின்றி, மதத்திற்குள்ளும் சாதி வேறுபாடின்றி இந்தத் திருமண நிதி
உதவி அமலாகியிருக்கிறது என்பது அர்த்தமாகிறது. தானம் பெறும் உரிமை
பிராமணர்களுக்கே உண்டு, அப்போதுதான் கொடுப்பவருக்கு புண்ணியம் உண்டு
என்கிற அந்தக் காலத்தில் தர்மசாஸ்திர விளக்கவுரையாளர்களிடமிருந்து
சுல்தான்களின் நடைமுறை பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதற்கு இதுவும் ஓர்
உதாரணம்.

 
புதிய நலத்திட்டங்கள் என்று இந்தக்காலத்து அரசுகள் கூறுகிற சில
திட்டங்கள் உண்மையில் மிகப்பழமையானவை என்பதற்கு வரலாற்று ஏடுகளில் ஆதாரம்
இருக்கிறது. முஸ்லிம் அரசர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் வரலாற்று உணர்வு
அதிகம். அதிலும் போற்றத்தக்க விஷயம் பரணி, அபிஃப் போன்ற வரலாற்றாளர்கள்
அரசியல் விவகாரங்களோடு இப்படிப் பொருளாதார நடவடிக்கைகளையும் கவனமாகப்
பதிவு செய்திருப்பது. இத்தகைய சரித்திர உணர்வாளர்கள் இல்லாமல்
போயிருந்தால் இந்தியாவின் பழங்கால வரலாறு போல இடைக்கால வரலாறும்
புராணமயமாகிப் போயிருக்கும்.
கடந்த கால வரலாற்றிலிருந்து தற்கால செயல்பாடுகளுக்கு படிப்பனைப் பெறலாம்
என்கிற நினைப்பு டில்லி சுல்தான்களுக்கு இருந்தது. இது நடைமுறையில்
வெளிப்பட்டது என்பதை பரணி சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்விலிருந்தே நம்மால்
அறிய முடிகிறது.
முகமது பின் துக்ளக் பற்றி மிக மோசமான கருத்துருவமே நம் மத்தியில்
உள்ளது. அவனுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. அதுபற்றி விவரிக்க இங்கே இடம்
போதாது. ஒரேயொரு விஷயத்தை மட்டுமே குறிப்பிடலாம். அவனது சாம்ராஜியத்தில்
அமீர்கள் எனப்பட்ட சிற்றரசர்கள் சிலர் அவ்வப்போது கலகம் செய்து
வந்தார்கள். துக்ளக் மிகவும் வெறுத்துப்போனான். வரலாற்றாளர் என்ற
முறையில் அதுபற்றி பரணியிடம் கலந்து பேசினான். பரணி எழுதியிருப்பதைப்
பாருங்கள்- “கலகக்காரர்களின் வெற்றியும், தியோகிர் கைகழுவிப் போனதும்
ராஜாவைப் பெரிதும் பாதித்தது. இப்படி வருந்திய நிலையில் ஒருநாள் இந்த
நூலின் ஆசிரியராகிய என்னை கூப்பிட்டுவிட்டான். பிறகு கூறினான்: ‘எனது
ராஜியத்திற்கு நோய் பீடித்துவிட்டது. எந்த வைத்தியத்தாலோயும் இதைச்
சரிசெய்ய முடியவில்லை. தலைவலியைச் சரிசெய்கிறார் வைத்தியர். காய்ச்சல்
வந்து விடுகிறது. அதற்கு வைத்தியம் பார்க்கும் போது வேறு பிரச்சனை வந்து
விடுகிறது. அதுபோல எனது ராஜியத்திலும் ஒழுங்கீனங்கள் வெடித்துக்
கிளம்புகின்றன. ஓரிடத்தில் ஒடுக்கினால் இன்னொரு இடத்தில் தோன்றுகிறது.
ஒரு பகுதியில் சரி செய்தால் இன்னொரு பகுதியில் பிரச்சனை எழுகிறது.
இத்தகைய ஒழுங்கீனங்கள் பற்றி முந்தைய ராஜாக்கள் என்ன
சொல்லியிருக்கிறார்கள்? நான் பதில் சொன்னேன்”
பரணி சொன்ன ஆலோசனையை துக்ளக் கேட்டானா இல்லையா என்பதைவி இப்படி
கேட்டதும், அது பதிவாகியிருப்பதும் அவர்களது சரித்திர உணர்வுக்கு ஒரு
தக்க சாட்சியம். சுல்தான்கள் காலத்திலேயே இப்படி என்றால் நமது
காலத்திற்கு சரித்திர உணர்வு எவ்வளவு அவசியம் என்பதைச்
சொல்லத்தேவையில்லை. நவீன காலத்தின் குழந்தைகளாகிய நமக்கு அவர்களைக்
காட்டிலும் நெடிய வரலாறு உண்டு. அதில் எத்தனையோ படிப்பினைகள்
படிந்திருக்கின்றன. குடிமக்களைவிட ஆட்சியாளர்கள் அதைக் கற்பார்களேயானால்
தேசத்திற்கு எவ்வளவோ நல்லது செய்ய முடியும்.
அலாவுதீன் கில்ஜி விலைவாசியைக் கட்டுப்படுத்த காட்டிய அக்கறையை, ஃபிரோஸ்
ஷா துவக்கிய மக்கள் நலத்திட்டங்களை தற்காலத்து ஆட்சியாளர்கள் கவனத்தில்
கொண்டால் இத்துறைகளில் அவர்களைக் காட்டிலும் எவ்வளவோ செய்ய வேண்டும்
என்கிற உந்துதல் வரும். அப்படி வந்தால் வரலாற்றாளர்கள் பரணி, அபிஃப்
போன்றோரின் நோக்கம் மெய்யாலும் நிறைவேறியதாக அர்த்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *