-க. குணசேகரன்
சமூகம் என்பது பல முரண்களைக் கொண்டுள்ள பல்வேறு வர்க்கங்களை உள்ளடக்கிய அமைப்பு. இதற்குள் ஒருமித்த சமத்துவ நிலைமையைக் காண்பதென்பது இயலாதது. முரண்களைக் களைந்து, வர்க்க உணர்வுகளை அகற்றி அனைவரும் சமமானவர்கள் தான் என்று அவர்களை அறியச் செய்து ஒரு சமூகமாக உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் இதை சாதித்தவரை புரட்சியாளர் என்று சொல்லலாம் வேறு எப்படி கூற முடியும்.
உலகளவில் வரலாற்றில் பதியப்பட்ட பல்வேறு சமூகங்களைப் பற்றிய விவரங்களில் பல முரண்களை, தீய பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்த, முரட்டுத்தனமிக்க குலப் பெருமைகளில் மூழ்கித் திளைத்த அரபு மக்களை அடியோடு புரட்டிப் போட்டு இஸ்லாம் என்ற ஒரு கட்டமைப்புக்குள் – நெறிக்குள் அம்மக்களை ஈர்த்து, வழி நடத்தி உலகுக்கே ஒளி பொருந்திய ஒரு சமூகத்தை அடையாளப்படுத்தியவர் பெருமகனார் நபி (ஸல்) அவர்கள்.
எனவேதான், சமூகவியலாளர்கள் அனைவருக்கும் நாடு, மொழி, சமயங்களை கடந்து அவர்களை உன்னதமான சமூகப் போராளியாக பார்க்கின்றனர்.
இஸ்லாமிய நெறிகளுக்குள் கட்டமைந்துள்ள ஒவ்வொன்றையும் அதாவது முஸ்லிம் என்ற அடையாளத்துக்கு அடிப்படை விதிகள் எதனையும் நாம் தனித்தனியே பிரித்து பார்த்திட இயலாதவாறு ஒரு பலமான சங்கிலித் தொடர்புகள் முஸ்லிம்களுக்கு உண்டு. வணக்கம், வழிபாடு, கடமை நெறிதவறாமை என அனைத்தும் ஐந்து கடமைகளாக வலுவாகக் கட்டமைத்து அவற்றை சமூகம் அதாவது இஸ்லாமியச் சமூகம் என வலுவாக்கியுள்ளார்கள்.
இன்றைக்கு எழுத்தில் இவைகளை நாம் வருணிக்கிறோம். ஆனால், சற்று கண் அயர்ந்து ஏழாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் அரபு மண் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கும் போதுதான். நபிகளாரின் கடுமையான, அளப்பரிய உழைப்பை நாம் காண இயலும். உலக வரலாற்றில் இத்தகைய பெருமகனார் இனி தோன்றவே இயலாது. அதனால்தான் மானுடம் மீட்க வந்த இறுதித் தூதர் என அவர்கள் அறியப்படுகிறார்கள்.
நபிபெருமானாரின் மேன்மைகளை மேலெழுந்த வாரியாகக் காண்பதில் புலனாகாது. மாறாக நுண்மான் அறிவோடு தான் இஸ்லாமிய வரலாற்றை அணுக வேண்டும். அவ்வாறு அணுகும் போதுதான் ஒளி பொருந்திய உண்மைகள் நமக்குப் புலனாகும். இஸ்லாம் என்ற உன்னதத்தை அவர் தனிமனிதராக நின்று நிலை பெற்று சாதித்தது என்பது சாமானியமல்ல. ஏனெனில்
பலவர்க்கங்களாக பிளவு பட்ட அரபு சமூகத்தில் பொருளாதாரம் சமூக வகைப்பட்ட உயர்வு தாழ்வுநிலை, அறிவு தொடர்பான நிலைகள் என உள்ளவற்றில் நபிகளாரும் ஏதேனும் ஒரு வர்க்கத்திற்குள் தான் இருந்துள்ளார்கள். ஆனால் அந்த வர்க்கங்களுக்குள் சிக்காமல் தனித்து நின்று அனைத்தையும் சீர் தூக்கிப் பார்த்து எல்லாவற்றையும் உள்வாங்கி இஸ்லாத்தை நிறுவியதென்பது எளிதானதல்ல.
எந்த மனிதருக்கும் உடல் ரீதியான பரம்பரை இயல்பு நிலை, சமூக சூழ்நிலை இதனை (குடும்பச் சூழல், கல்வி அதற்கான வாய்ப்பு என வரையறுக்கலாம்) அவனது சொந்த முயற்சி என்ற மூன்றும்.
ஒரு மனிதரின் அளவுகள் எனவே தான் சமமற்றவனாகவே உலக மனிதரை நாம் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக அரபு நிலம் என்பத திணைகளில் பாலை. பொதுவாக – பாலைத் திணைப்பண்புகள் வேட்டை தொடர்பானது. வேட்டை மனோபாவம் அதிகம் இதனால் மனமும் விலங்கியல்புடனேயே இருக்கும். ஆக. இதற்கேற்றவாறு ஆடை புனைந்த அரை விலங்காகத்தான் அன்றைய அரபு சமூகம் இருந்துள்ளது. இவர்களில் ஒருவர் கல்வி அறிவென்ற எவ்வித அடிப்படையும் இல்லாமல் ஒரு சமூகக் கட்டமைப்பை புதிதாக உருவாக்கி ஜனநாயகம் பொருந்திய ஒரு அரசை நிர்மாணித்தது அற்புதம் தான். ஏனெனில், ஜனநாயகத்திற்கு விளக்கம் கூறிய பிளாட்டோவும் அரிஸ்டாலும், சாக்ரடீசும் நபிகளார் அறியாதவர்கள்.
இதுபோன்ற நிலையில் ஒரு முன்மாதிரி அரசை அதுவரை உலகம் கண்டிராத ஒரு மார்க்கம் சார்ந்த அரசை உருவாக்கிய செயல் ஜனநாயகம் என்பதன் அழகிய முன்மாதிரியாக விளங்குவது பன்மடங்கு ஆச்சரியம் தான்.
அதனால் தன் அரசியலை சமூக அறிவியலை அதன் உள்ளார்ந்த பண்புகளுடன் நேசிப்பவர்கள். அறிவார்ந்தோர் நபிகளாரை தங்கள் உள்ளம் கவர்ந்த அழகிய முன்மாதிரியாகக் கருதுகின்றனர்.
சரி இதுபோன்ற அரசை அவர்கள் நிர்மாணிக்க கையாண்ட வழிமுறைகள் மற்ற அனைத்திலும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றன. இஸ்லாமிய வரலாற்றஒ தொடர்ந்து நுட்பமான புலனோடு பார்க்கும்போது அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருப்பது. நபிகளார் அரசை அமைப்பதற்கு முன்பு மேற்கொண்ட கடுமையான, எதிர்ப்புகளைக் கண்டு துவளாத பிரச்சார உத்திதான்.
தான் கொண்ட கொள்கையின் மாறாத நிலைப்பண்பு, உறுதிநிலை. அதனை எவ்வறேனும் இந்த மண்ணில் உறுதிபட செயல்படுத்துவேன் என்ற அவர்களின் தன்னம்பிக்கைகளை வரலாறெங்கும் காணலாம்.
நபித்துவம் அடைந்த பின்னர் தான் கண்ட “மெய்” களை உலகுக்கு அறிவிக்கத் தொடங்கும்போது ஒருவர், ஒரு சிலர், ஒரு குடும்பம், பின்னர் சிறு கூட்டம் எனப் பல்கி அவர்களின் கொள்கைகளை ஏற்று பின்பற்றுகின்றனர். நபிகளாரும் அவர்களின் கூட்டத்தாரும் அவர்களின் பண்பு, பழகும் பாங்குகள் புரையேறிப்போன அந்த முரண்பாடுமிக்க சமூகத்திற்கு எதிராகத் தோன்றிட எதிர்ப்பை வலுவாக, வன்முறை வழிகளில் கூட்டுகின்றனர். அவர்களின் தோழர்கள் பலவாறு தாக்கப்படுகின்றனர். எனினும் அவர்களின் தோழர்கள் எவரும் பின்வாங்கவில்லை – அஞ்சவில்லை.
இஸ்லாம் என்கிற வழிமுறைகள் அவர்களால் அரபு மண்ணில் விதைக்கப்பட்டதும் அது அங்கு ஏற்கப்படுவதற்கான சூழல் பன்னெடுங்காலமாக நிலவியது என்பது கவனிக்கத்தக்கது.
ஒரு வழக்கமான முறைமைக்கு மாற்றமாக முற்றிலும் பழையதை புரட்டிப் போடும் ஒன்றை நிலை நிறுத்த முயலும் போது எழும் எதிர்ப்பு என்பது சொல்லில் வடிக்க இயலாது. ஆம். நபிகளாரும் இப்படித்தான் எதிர்கொண்டார்கள் எதிர்ப்புகளை அகராதியில் கொள்கையின் உறுதி என்ற வார்த்தைக்கு முழு விளக்கமாக விளங்குவதை காலப்போக்கில் அவர்கள் பின்னால் அணிவகுத்த மக்கள் எண்ணிக்கையைக் காணும்போது உணரலாம்.
ஏழாம் நூற்றாண்டில் குறிப்பாக அரபு மண்ணில் உள்ள மக்கள் தொகையினரில் அதிலும் அன்றிருந்த மக்கா, மதினா முதலான பகுதிவாழ் மக்கள் திரளில் அவர்கள் கணிசமான மக்களிடம் இஸ்லாம் மார்க்கத்தை வலுவாக பரவவிட்டார்கள். என்பதை படிப்படியாக பின்னால் திரண்ட மக்களால் நாம் தெளிவாக உணரலாம். சிலர், பலராகி, இஸ்லாமிய நாட்காட்டி குறிப்பிடும் ஹிஜ்ரத் தொடக்க காலத்தில். ஆயிரமாக பெருகினர். மதினாவில் எட்டாண்டு கால கடுமையான உழைப்பால் மார்க்க பிரச்சாரத்தால் 10,000 பேர் வரை திரண்டனர்.
23 ஆண்டுகாலம் நிறைவாகி தன் இறுதிப் பேருரை நிகழ்த்தும் போது ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் பேர் கூடி நின்று கேட்டதாக இஸ்லாமிய வரலாறு கூறுகிறது. அன்றைய மக்கள் எண்ணிக்கை சூழலில் இது மா பெரும் நிகழ்வு என்றால் மிகையில்லை.
நேற்று இன்று நாளை அதனையும் கடந்து எக்காலமாயினும் ஏற்றதொரு வழிமுறைகளை, மார்க்கத்தை அவர்கள் அடையாளம் காட்டியதை பின்னாளில் பல சாம்ராஜ்யங்கள் ஏற்றன.
ஆக, இதுபோன்ற பல உன்னத நிகழ்வுகளுக்கு இஸ்லாமிய வரலாற்றின் மையமாக விளங்குவதே “அன்சாரிகள்” என்று அன்பொழுக அரபு நிலத்தில் அழைக்கப்பட்ட “தொண்டர்படை” யினர்தான் என்றால் மிகையில்லை.
நபிகளார் தன் மார்க்கத்தை நிலைநிறுத்த உறுதிமிக்க, செயலாக்கம் மிக்க “தோழர்களை” தொண்டர்களைத் தேர்வு செய்வதிலும் அவர்களோடு அவர்கள் செய்த ஒப்பந்தங்களும் பெறப்பட்ட வாக்குறுதிகளுமே உலகில் இஸ்லாம் ஆழமாக வேறூன்ற காரணமானவை என்பது கவனத்திற்குரியது. அத்துடன் ஒரு இயக்கம் எப்படி கட்டப்பட வேண்டும் என்பதற்கும் அந்த சம்பவம் எடுத்துக்காட்டாக உள்ளது.
மதினாவைச் சேர்ந்த உறுதிமிக்க உள்ளம் கொண்ட 75 பேர் மக்காவில் நபிகளாரை சந்திக்க ஆவல் கொண்டனர். ஹஜ் முடிந்த மூன்றாம் நாள் மலைக்கணவாய் அருகே சமமான பகுதியில் ஒருவர் தலை மற்றவருக்கு மறைக்காவண்ணம் 73 ஆட்கள் 2 பெண்கள் உள்ளிட்ட அக்குழு நள்ளிரவில் அவர்களை சந்திக்கிறது.
நபிகளாருக்கு முன்பு அவரின் சிற்றப்பா அப்பாஸ் (ரலி) பேசுகிறார்கள். இஸ்லாத்தை ஏற்று மார்க்கத்தை முழுமையாகப் பின்பற்றும்போது ஏற்படும் இடர்பாடுகளைப் பற்றி அவர்களுக்கு கூறிய பின்னர். ஒரு வாக்குறுதியைக் கேட்கிறார்கள். உங்கள் குழந்தைகள் மனைவியரைப் பாதுகாப்பது போன்று எத்துன்பம் வந்தாலும் எந்த சூழலிலும் நபிகளாரைக் கைவிட மாட்டோம் என்று உறுதி கூற வேண்டும். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் இப்போதே விலகுவது நல்லது என்கிறார்கள்.
ஏற்கனவே நபிகளாரைப் பற்றியும், மார்க்கத்தைப் பற்றியும் அறிந்திருந்த அவர்கள் சிறிது அமைதி காக்கின்றனர். பின்னர் அங்கிருந்த 75 பேரில் ஒருவரான ஜயீத் பின் வர்து (ரலி) நபிகளார் கரம் பற்றி என்றும் உறுதியுடன் உங்களோடு இருப்போம் என்கிறார். இப்னு தைவான் என்கிற இன்னொருவர் எழுந்து நாங்கள் “யுத்தத்தின் குழந்தைகள்” “அல்கா வாசிகள்” உங்களைப் பிரியமாட்டோம் என்கிறார்கள். அமைதியாக ஒவ்வொருவரும் நபிகளாரின் கரம் பற்றி தங்கள் வாக்குறுதியை “நுஸ்ரத்” தை தருகிறார்கள். கூட்டத்திலிருந்து ஒரு கேள்வி எழுகிறது “நீங்கள் பின்னர் குரைஷி குலத்தாருடன் சேருவீர்களா? எங்களை கைவிடுவீர்களா? என்கின்றனர்.
நபிகளார் மார்க்கத்தை நிலை நிறுத்தும் களத்தில் என்னுடைய குரைஷியக் குலத்தார் என்றாலும் பின்வாங்க மாட்டேன். இரத்தத்திற்கு இரத்தம் – கண்ணுக்கு கண் என்ற பதிலடி தான் என்னுடையது. உங்களில் நானும் ஒருவன் என்பது இந்த ஒப்பந்தத்தால் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்கிறார்.
இந்த ஒப்பந்தம் தான் இஸ்லாத்தை ஆழமாக அரபு மண்ணில் வேரூன்றச் செய்த அகுபா ஒப்பந்தம் என்பது. அதுவும் இதுபோன்ற ஒரு ரமலான் மாதத்தில் தான் நிகழ்ந்தது என்பதால். ரமலானை நுஸ்ரத் என்கிற இஸ்லாத்தை மனதார ஏற்று வாக்குறுதி மாதம் என்றும் இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.
நபிகளார் இந்த 75 பேரிலிருந்து 12 பேர்களை குழுத்தலைவர்களாக நியமித்தார்கள்.
நபிகளாரின் அடுத்தடுத்த பிரச்சாரங்களில் போர்களில் இந்த 75 பேர் உழைப்பும், உள்ள உறுதிமிக்க பணிகளும் மகத்தானது.
அன்றிருந்த அரபு நிலத்தில் தன் கொள்கைகளை நிலைபெறச் செய்திட தேர்ந்த அரசியல் வியூகம் அமைத்து. தன்னைச் சார்ந்தவர்கள் தவிர்த்து நம்பகத்தன்மை கொண்ட குழுக்களை உருவாக்கி அவர்களில் பலரை பல நாடுகளுக்கு தூதுவர்களாக, படை தளபதிகளாக நியமித்தார்கள்.
இதுபோன்ற துல்லிய நடவடிக்கைகளால் எந்த மக்காவில் தனக்கு ஹஜ் செய்ய எதிர்ப்பு கிளம்பியதோ அதே மக்கா நகர் எவ்வித எதிர்ப்பும் இன்றி ஒரு துளி இரத்தமும் சிந்தப்படாமல் முழுமையாக அவர்களிடம் வந்ததற்குக் காரணமே அவரை எதிர்த்தவர்கள். நபிகளாரின் திட்டமிட்ட, சாதுர்யமான, அணுகுமுறைகளால் கவரப்பட்டனர். அதனால் மக்கா அவர்கள் வசமானது.
இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் ஏராளமான தகவல்கள் அரசியல், சமூகம், பொருளியல், மூடநம்பிக்கை தகர்ப்பு, போர், வெற்றிகள் என பல்கி கிடக்கின்றன.
இவற்றில் நம்மைக் கவர்ந்தது நபிபெருமானாரின் திட்டமிட்ட உழைப்பும், அழகான அரசியல் அறிவியலான நம்பதகுந்த தொண்டர்களை உருவாக்கும் நேர்த்தியும், விசுவாசமிக்க தோழர்களை உருவாக்கி நல்ல தலைவராக, ஆட்சியாளர்களாக, உலகின் முதல் அரசியல் சாசனம் அளித்தவராக, இஸ்லாமியர் அல்லாதவர்களை மதிப்பதில் புதிய வழி ஏற்படுத்தியவராக, கல்வி கற்பதை அறிவு பெறுவதை வலியுறுத்தும் பேராசானாக எல்லாவற்றையும் விட சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடில்லாத மாசற்றவராக அழகிய முன்மாதிரியாக நபிகளாரைக் காண்கிறோம்.
அதனால்தான் உலகில் விஞ்ச முடியாத சமூக சமத்துவ புரட்சியாளராக அவர்கள் மட்டுமே போற்றப்படுகிறார்கள்..
நன்றி :
மணிச்சுடர் ரமளான் சிறப்பு மலர்
ஹிஜ்ரி 1431 – 2010