இரவின் வெற்றிடச் சாலையில்
ஒருவருமில்லை
காற்றும் தன் இறக்கைகளை சுருக்கி
துயிலுற சென்றது போலும்
வியர்வையில் அலங்கரித்து
அழகியல் படிக்கிறது உடல்
நிசப்த இரவில்
சில்வண்டு இசைமீட்டி எரிச்சலூட்டுகிறது
கொசு கொஞ்சி ரீங்கரித்து
முத்தமிட்டு வலியூட்டுகிறது
மின்சாரமின்மையின் நெருடல்கள்
இரவில் தான் நாட்டியம் புரிகிறது
டடக் டடக் டடக் என
சூழலும் மின்விசிறியும்
உயிர்பொருள் இன்றி
தீடீரென இறந்துபோவதும்
துக்கத்தை தொண்டைக்குள் நிறுத்தி
அழமுடியாமல் மனம்
காற்றிற்கு அரற்றுவதும்
வாடிக்கையானது நித்தமும்
உறக்கம் உறங்க மறுத்து
உழன்று சுழல்கிறது ஆழகடல் சுழலைபோல
இமைகள் தழுவுவதும்
இமைகள் இணைய மறந்து
ஊடல் கொண்டு தவிப்பதுமாக
கழிகிறது மின்சாரமில்லாத இரவுகள்