( சிராஜுல் மில்லத் ஆ.கா. அப்துல் ஸமது )
ஒப்பரிய இஸ்லாத்தின் தாரக மந்திரமான செப்பரிய திருக்கலிமாவை உலகின் விடுதலைக்கீதம் என்று சொல்லலாம். ‘லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹி’ (வணக்கத்திற்குரியவன் வல்லவனாம் அல்லாஹ்வித் தவிர பிறிதொருவன் இலன் – முஹம்மது அந்த அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்.) இது தான் இஸ்லாத்தின் கொள்கைச் சுருக்கம். இரண்டே சொற்றொடர்களில் விழுமிய இஸ்லாத்தின் செழுமிய கொள்கைகள் குறிக்கப்பட்டு விட்டன. இவ்விரு சொற்றொடர்களின் விளக்கமாகத்தான் இஸ்லாமிய தத்துவமும் சரி – வரலாறும் சரி அமைந்திருக்கின்றன.
இஸ்லாமியப் பெருநெறியை பின்பற்றும் ஒவ்வொருவரும் இந்தத் திருக்கலிமாவை வாயார மொழிந்து – உளமார நம்பி – மெய்யார பின்பற்றி ஒழுக வேண்டும் என்பது விதி. இஸ்லாமியருடைய வாழ்விலே என்றும் பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளவையாக இவ்விரு வரிகளும் விளங்குகின்றன.
குழந்தை பிறந்தவுடனே தேனும், பாலும் அதன் நாவிலே தொட்டு வைத்து அதற்குப் பெயரிடும்போது அதன் செவிகளிலே ஓதப்படும் உயர் போதமும் இது தான். மனிதன் இவ்வுலகிலே தன் வாழ்வை முடித்து விட்டு மண்ணறைக்குச் செல்லும்போது அவன் செவிகளிலே ஒலிக்கப்படும் உயர் நாதமும் இதுதான்.
இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் இடைப்பட்ட காலத்திலே அவன் பின்பற்றி ஒழுக வேண்டிய பெருநெறியைத்தான் திருக்கலிமா எடுத்துரைக்கிறது.
மனிதனின் தோற்றத்தைப் பற்றிய இஸ்லாமியக் கருத்து மகோன்னதமானது. மண்ணையும், விண்ணையும் படைத்த மாபெரியோரின் பிரதிநிதி மனிதன் – எல்லாப் படைப்புகளையும் விட எழில்மிக்க கோலந்தாங்கியவன் – விண்ணும், மண்ணும் – அவனுக்கு வினை செய்யப் படைக்கப்பட்டுள்ளன – அமரர்களும் அடிபணியத்தக்க அந்தஸ்து பெற்றவன் அவன்.
வல்லவன் ஒருவனாம் அல்லாஹ்வை வணங்கு என்று வலியுறுத்தப்படும் அதே நேரத்தில் மனிதனுடைய மகோன்னத நிலை சுட்டிக் காட்டப்படுகிறது. அல்லாஹ்வையே வணங்கு எனும்போது அவனைத்தவிர வேறெவனையும் வணங்காதே என்பது வலியுறுத்தப்படுகிறது. இந்த விதத்தில் வணங்குமாறு ஏவும் வசனமே மனிதனுக்கு விவேகத்தையூட்டி விடுதலை தாகத்தையும் ஊட்டும் வசனமாகவும் விளங்குகிறது.
ஆண்டவன் ஒருவனுக்குத் தவிர வேறெவனுக்கும் அடிபணியாத சுதந்திர வாழ்வு – அந்த ஆண்டவனுடைய பிரதிநிதியாக – அவன் படைப்புகள் அனைத்தையும் பரிபாலிக்கும் பொறுப்புமிக்க வாழ்வு – அவன் அனுப்பிய திருநபியார் போதித்த பெருநெறியை பின்பற்றி ஒழுகும் திருவாழ்வு – மறையவன் மனிதனுக்கு அளிக்கும் வாழ்வு – விதித்திருக்கும் வாழ்வு – இதுதான்.
தரணியையே திருத்தியமைத்த சொற்றொடர் திருக்கலிமா. இப்புவியிலே ஐந்தில் ஒரு பகுதியினர் இன்று தலைவனுக்கன்றி யாருக்கும் தலைவணங்கா நிலை படைத்தோராய் வாழ்கின்றனர் என்றால் அது திருக்கலிமாவின் பெருஞ்சேவையே !
மனிதனாகப் பிறந்தும் மனிதனுக்கு இயற்கையாகவே உரிய ஓரிருமையுமின்றி தாழ்த்தப்பட்டோராக – வீழ்த்தப்பட்டோராக வாழக்கூடிய பெருங்குடி மக்களுக்கு விடுதலை அளிக்கும் தாரக மந்திரம் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பது ஒன்றே.
பிற கோஷங்கள் பொருளாதார ஏற்றம் தரலாம் – கல்வி நலனை விளைவிக்கலாம். ஆனால், நிலையான விடுதலை உணர்வை – பயனை – விளைவிப்பது திருக்கலிமா ஒன்று தான் !
கன்னங்கருத்த இருட்டின் கறையாக – மண்ணின் புழுவாக ஆழ்த்தி வைக்கப்பட்டிருக்கும் எவரும், எவருடைய உதவியுமின்றி தாமாகவே ‘லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹி’ (வணக்கத்திற்குரியவன் வல்லவனாம் அல்லாஹ்வைத் தவிர பிறிதொருவன் இலன் – முஹம்மது அந்த அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்.) என்று சொன்ன உடனே – மண்ணில் வாழும் மாபெரும் சுதந்திர சமத்துவ – சகோதரத்துவ சமுதாயத்திலே பெருமைக்குரிய ஒரு அங்கத்தவராகும் வெற்றி உண்டாகி விடுகிறது !
நன்றி :
மணிச்சுடர் நாளிதழ்
7 / 8 ஜனவரி 2008