’இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.ஏ., (பிறைதாசன்) அவர்கள், கடந்த நாற்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதி, 19-01-1968 ‘மறுமலர்ச்சி’ வார இதழில் வெளிவந்த கருத்துச் செறிந்த கவிதை.
தருபவர் : எழுத்தரசு ஏ.எம்.ஹனீப்
நல்லமனம் நல்லுள்ளம் நாவீறு நன்மை செய்யும்
வல்லன்மை வாய்மைநெறி வாழ்வு சுகம் எல்லாமும்
எல்லோரும் ஏற்று இனிதாக வாழ்ந்திடவே
வல்லவனாம் அல்லாஹ்வை வாழ்த்தித் தொடங்குகிறேன்.
ஆயிரத்து நானூறு
ஆண்டுகட்கு முன்னொரு நாள்
தூய ரமளான் மாதம்
தொடர்கையிலே ஹிராவென்னும்
மலைக்குகையில், உலக மையம்
மக்காவாழ் மக்கள் புகழ்
கலையுணர்வு முஹம்மதென்பார்
கடுந்தவத்தில் ஆழ்ந்திருந்தார்
இதயத்தைக் குளிர்விக்கும்
இளந்தென்றல் மிதந்து வரும்
பதமான பின்னிரவில்
பாருலகே தூங்குகையில்,
திடுமென்றோர் பேரதிர்ச்சி !
திக்கெல்லாம் ஒளிக்கூட்டம் !
உடுக்கணங்கள் விழிக்க, மதி
உயர்வானுக்கு ஓடியது !
கருமேகம் கலைய, வானம்
களிப்புக் கடல் போல
திருவருளாய் விளங்கிற்று !
தெய்வீகம் தோன்றியது !
ஏகாந்த ஒளிக்காட்டில்
இருந்துவரும் ஜிப்ரயீலாம்
மாகாந்த வானவர்கோன்
முஹம்மதிடம் முன்னின்று
அரும் நிலவைத் திருக்கதிரோன்
ஆலிங்கனம் செய்ததுபோல்
அருள் இணைத்து அணைத்தார் ஓர்
அல்லாஹ்வின் திருப்பெயரால் …!
வெதுவெதுப்பு உடம்போடு
வெளவெளத்து நிற்க, ஞானப்
புதுக் கொதிப்பு உதிப்பதனால்
புலனொடுங்க, வெற்றிடமாம்
இதயமென்னும் ஏட்டில் மறை
இலங்க வைத்து மறைந்து விட்டார் !
புதுமனிதர், நபி முஹம்மதர் – உலகில்
பொங்கியதே அறப்புரட்சி !
இரண்டு ஐந்து எட்டு பத்தாய்
இருபத்து மூன்றாண்டு
திருவசனம் இறையருளத்
திகழ்கிறது குர் ஆனாய் !
இதுமறை அனைத்தையும்
ஏந்திய ஒருமறை !
இறைமறை, குறையறு
நிறைமறை, திருமறை !
இதில் எது இல்லை சொல்லு?
இதில் இலாப்புதிது எது?
பதில் எது? மெளனமா?
பார், உலகே, நீ சாட்சி !
இது ஞானக்கோவை ! – உலகுக்கு
என்றென்றும் இதுதானே தேவை ! – வேறு
அது இது என்றாரா, அடக்கு அவர் நாவை
இதுதானே வேதம் – அதில்
என்ன சந்தேகம் ? – மற்றெதுவும்
இருப்பதாய்ச் சொல்லுவது ஒவ்வாத வாதம்
இது சத்திய போதம் – இறையின்
ஏகத்துவ நாதம் ! – மறுப்போர்
இருப்பரேல் இன்றைக்கே எடுத்துவை உன் வாதம்
வலவனா, வம்பனா, வாய்ச்சொலில் வீரனா,
புலவனா, பன்மொழி புரிந்தபேர் அறிஞனா,
பூமியா, வானமா, பிரபஞ்சம் முழுதுமா
வரட்டுமே, வாதப்போர்
தரட்டுமே, இமயத்தைப்
புரட்டிடும் பலவான்கள்
திரளட்டும், பார்க்கிறேன் !
இதயத்தில் இருக்கிறான் அல்லாஹ் !
இடத்திலே நபிவழி !
வலத்திலே மறை மொழி !
உதிக்கின்றான் சன்மார்க்க சூரியன் !
ஒழிகிறது பொய்ஞான வீரியம் !
மது, மாது, சூது, வஞ்சம்
மனம் நிறையப் பொய் களவு
அதிமிதிகள், ஈனமானம்
அருள் அழிக்கும் பொருட்காதல்
சின்னபுத்தி சினம் கொடுமை,
சீர் அறியாச் சேர்க்கை, வாக்கைச்
சொன்னபடி செயலாற்றாமை,
சோதனைகள் சூழ்ந்த வாழ்க்கை
பீடுநடை போடும் நாட்டுப்
பெருந்தலைமைத் தலைக்கனங்கள்
வாடுகின்ற ஏழ்மைத்தேசம்
வம்பு, தும்பு, வாய்மை மாய்த்தல்,
அமைதியின்மை, அரக்க குணம்
அணுகுண்டுப் பேயாட்டச்
சுமை தாங்கிச் சோர்ந்து நிற்கும்
சொர்க்கத்துச் சொந்தக்காரா !
மலைமறுத்த மாமறையை
மனமுவந்து ஏற்றவனே !
கலை பலவும் கற்றறிந்த
கடவுளுடைக் கைவனப்பே !
எண்ணியதைப் பேசி, தினம்
இதமடையும் மானிடனே !
உன்னைத்தான் கேட்கிறேன் – அல்குர்ஆன் போல்
உண்டா ஒரு வேதம்? கேட்ட
துண்டா ஒரு நாதம்?
மாசமடைந்த மாநிலத்தில்
மனஇருளைப் போக்க வந்த
தேசுபெறும் அறிவொளியே !
தேனார்ந்த புதுப்பொலிவே !
களிக்காற்றே ! ஒளி ஊற்றே !
ககனம் புவனமெல்லாம்
அளித்து அருள்பொழிந்து வரும்
அல்லாஹ்வின் அறத் தூதே !
நெடுவானம் படர்பூமி
நிலஞ்சார்ந்த விரிகடலும்
அடையவொணாக் கோளங்கள்
அண்டபகிரண்டங்கள் –
ஆளுமிறை தந்திருக்கும்
அருட்பிழம்பின் சொற்கீற்றே – உனைப்
போலும் ஒன்று உண்டென்றால்
போக வேண்டும் ‘கீழ்ப்பாக்கம் !
தேனமுதத்தென்றலெங்கே
தேள்கொடுக்கு வாடையெங்கே !
வான் இமய உச்சியெங்கே !
வாழ்ந்த இளங்குமரியெங்கே !
கலைவளர் பூங்கா எங்கே !
கடும் விலங்குக் காடெங்கே !
இல்(லை) குரான் போல் தனி வேதம் !
இது உண்மை, இறை நீதம் !
ஒப்பிடுதல் முடியாது
ஒவ்வாது, கூடாது !
தப்பு, பிழை, தகராறு
முற்றிவிடில் சொற்போரு !
திருக்குர்ஆன் என்றும்பேர் அழகு – அதைத்
தினந்தோறும் நாவினால் பழகு !
திருக்குர்ஆன் அதிசயக் களஞ்சியம் – அது
தெய்வீக வாழ்க்கையின் இலட்சியம் !
அல்குர்ஆன் எனக்கென்றும் போதும் ! – அதை
அனுதினமும் வாய் நெஞ்சம் ஓதும்
பல்பிணியும், மன நோயும், தீதும் – பொய்யும்
பரிதிமுன் பனிபோல மாயும் !
அல்குர்ஆன் உலகத்தின் உடைமை ! – அதை
அறியாதோர்க்கு எடுத்து ஓதல் கடமை !
எல்லாமும் அதனுள்ளே அடக்கம் ! – உலகம்
ஏற்றால் நன்னெறியிலே நடக்கும் !
நன்றி :
மணிச்சுடர்
ரமளான் சிறப்பு மலர்
ஹிஜ்ரி 1431 – 2010