பிறந்த ஒரு நாளுக்குள் இறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் ஓராண்டுக்கு 3,09,000 ஆக உள்ளது என்கின்றது அன்னையர் தினத்தையொட்டி வெளியான ஓர் ஆய்வு அறிக்கை. உலக அளவில் பார்க்கும்போது, பிறந்த 24 மணி நேரத்தில் இறக்கும் குழந்தைகளில் 29% இந்தியாவில்தான் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஒரு தாய்க்கு, கருவுற்ற மூன்றாவது மாதம் முதலாகவே முறையான ஆலோசனை அளித்து, வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கருவளர்ச்சிக்குத் தேவையான சத்துணவு வழங்கும் திட்டம் எல்லா மாநிலங்களிலும் பல வகையாக, பல பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், இவை நல்லமுறையில் செயல்படுத்தப்படவில்லை என்பதைத்தான் இந்த மரணங்கள் உணர்த்துகின்றன.
இந்தியாவில் பச்சிளம் குழந்தைகள் (பிறந்த 7 நாள்களுக்குள்) மரணமடைவது மத்தியப் பிரதேசத்தில் அதிகமாக இருக்கிறது. ஆயிரம் குழந்தைகளில் 32 பச்சிளம் குழந்தைகள் இறக்கின்றன. அடுத்த நிலையில் உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் அதிகம்.
தமிழ்நாட்டில் இத்தகைய மோசமான சூழ்நிலை இல்லை என்பதற்காக நாம் மகிழ்ச்சி அடையலாம். தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தைகள் மரணம் ஆயிரத்துக்கு 11. ஆனாலும் நம்மைவிட கேரள மாநிலம் சிறப்பான இடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் ஆயிரத்தில் 5 பச்சிளம் குழந்தைகள் மட்டுமே இறக்கின்றன.
அதிக மக்கள்தொகை கொண்ட இந்திய நாட்டில் இத்தகைய மரண எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்று சமாதானமாகச் சொல்லப்பட்டாலும்கூட, இந்தியாவில் கருவுற்ற தாய்மார்களுக்குச் சரியான சத்துணவு, ஆலோசனை, சிகிச்சை, முறையான பேறுகால மருத்துவம் ஆகியன அளிக்கப்படுவதில் ஏற்படும் குறைபாடுகள்தான் இதற்கான முழுமுதல் காரணம்.
இத்தகைய மரணங்கள் வீட்டுக்குள் பிரசவம் நடைபெறுவதால்தான் அதிக எண்ணிக்கையில் நிகழ்கின்றன என்றும், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் நடைபெறும்போது, குழந்தைக்கும் தாய்க்கும் டாக்டர்கள் உடனடியாகக் கவனம் செலுத்துவதால் இத்தகைய மரணங்கள் பெருமளவு குறையும் என்றும் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனால், மகப்பேறு மருத்துவமனைகள் நகராட்சி அளவில் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன. தாய்மார்களை மருத்துவமனைக்கு அழைத்துவரும் பணியை கிராம சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டார்கள். இந்தப் பணியில் தொய்வு இருக்கிறது என்பதைத்தான் இத்தகைய மரணங்கள் உணர்த்துகின்றன.
2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, மருத்துவமனையில் பிரசவம் நடைபெறுவது ஒடிசாவில் 42%, பிகாரில் 23%, அசாமில் 36%, உத்தரப்பிரதேசம் 18%, மத்தியப்பிரதேசம் 37%, ஜார்க்கண்ட் 7%, சத்தீஸ்கர் 30% என்பதாக இருந்தபோது, தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் பிரசவம் நடப்பது 79% ஆக இருந்தது. இருப்பினும் கேரளம் நம்மைவிட முந்திக்கொண்டது. அங்கே 99% பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்துமாவு வழங்கும் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். அரசு மருத்துவமனையில் ஆலோசனை பெறும், பிள்ளை பெறும் தாய்மார்களுக்கு தமிழக அரசு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், ரூ.12,000 வழங்குகிறது. பிரசவத்துக்கு முன்பாக ரூ.4,000மும் பிரசவத்துக்குப் பிறகு இரு கட்டங்களில் தலா ரூ.4,000மும் வழங்கப்படுகிறது.
ஆனால், தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் பச்சிளம் குழந்தைத் திருட்டு சம்பவங்களைப் பார்க்கும்போது, மருத்துவமனைப் பிரசவ எண்ணிக்கை குறைந்து போகுமோ என்கின்ற அச்சம் ஏற்படுகிறது.
கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள் தற்போது அரசு மருத்துவமனையைத் தேடிவரக் காரணம், அரசு வழங்கும் நிதியுதவி மற்றும் வளைகாப்புப் பலன்கள், பெண்குழந்தை பிறந்தால் கிடைக்கும் அரசு நிதியுதவி ஆகியவற்றை இழக்கக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால், அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருடுபோகும் என்றாலோ, எலிகள் கடிக்கும் என்றாலோ அவர்கள் அரசு மருத்துவமனையைத் தவிர்க்கவே முயலுவார்கள்.
ஆண் குழந்தை பிறந்தால் ரூ.1,000 பெண் குழந்தை பிறந்தால் ரூ.500 லஞ்சம் கேட்பதும், தராவிட்டால் குழந்தையை மாற்றிவிடுவோம் என்று மிரட்டுவதும் பல அரசு மருத்துவமனைகளில் இருப்பதாகப் புகார்கள் உள்ளன. ஒரு சில ஊழியர்களின் தவறுகள் பரவலாக ஏழை எளியவர்கள் மத்தியில் அரசு மருத்துவமனை என்றாலே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அவர்களுக்குத் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வசதி இல்லை. ஆகவே மீண்டும் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் நிலை ஏற்படுமோ என்ற சூழல் உள்ளது. அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு, முறையாக நிர்வாகம் செய்யப்பட்டால்தான் இந்த பயம் அகலும்.
தமிழ்நாட்டில் மருத்துவமனைப் பிரசவங்கள், கேரளத்தைப்போல 99% ஆக உயர வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளில் நிலவும் குழந்தைத் திருட்டு, லஞ்சம், எலி, நாய்கள் தொல்லை இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும். தாய்மை உணர்வோடு பிரசவங்கள் அங்கே நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
உலக அளவில் மூன்றில் இரண்டு சிசு மரணம் பத்து நாடுகளில் நடைபெறுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியாவும், சீனாவும்கூட இந்தப் பட்டியலில் இருப்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. பிரசவத்தில் குழந்தைகள் மரணமடைவதைத் தடுப்பது, தாய் சேய் நலத்தைப் பாதுகாப்பது போன்ற பிரச்னைகளைக்கூட முழுமையாகவும் முறையாகவும் செய்ய முடியாவிட்டால், பொருளாதார வல்லரசாக மாறுவதால் என்ன பயன் இருக்க முடியும்?