முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள், பராமரிப்பின்றி பழுதடைந்து நடுரோட்டில் நிற்பதால், குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கிளை டெப்போவில் 46 பஸ்கள் மதுரை, ராமேஸ்வரம், தஞ்சாவூர், வேளாங்கன்னி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உட்பட பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள், போதிய பராமரிப்பின்றி உள்ளன. மழை காலங்களில் குடையுடன் பயணிக்க வேண்டி உள்ளது. கோடை காலங்களில் டயர்கள் பஞ்சராகி நடுரோட்டில் நிற்கின்றன. சில பஸ்களில் இன்ஜின் பழுதாகி, குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் நடுரோட்டில் பயணிகள் தவிப்பது வாடிக்கையாகிவிட்டது.
முதுகுளத்தூரில் இருந்து சிக்கல் பகுதிக்கு, நேற்று சென்ற அரசு பஸ்சின், டயர் பஞ்சரானது. இதனால் பயணிகள் பலர், நடுரோட்டில் தவித்தனர். நீண்டநேரம் கழித்து வந்த, அடுத்த பஸ்சில் பயணத்தை தொடர்ந்தனர்.முதுகுளத்தூர் கார்த்திகேயன் கூறுகையில், “”தனியார் பஸ்கள் இயக்கப்படாத வழித்தடங்களில், அரசு பஸ்களை நம்பி பயணம் செய்தால், டயர் பஞ்சர், இன்ஜின் கோளாறு என, பாதியில் நின்று பரிதவிக்க வேண்டி உள்ளது. செல்ல வேண்டிய இடங்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை,” என்றார்.போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “”தொழில்நுட்ப பிரிவில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. பஸ்கள் பராமரிப்பு தினமும் நடக்கிறது. பஸ்கள் பழுதடைவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.