இது விற்பனைக்கு அல்ல !

இலக்கியம் சிறுகதைகள்

Sulaiman1 

( காயல் யூ. அஹமதுசுலைமான் )

 

அது ஒரு வெயில் கொளுத்தும் மதிய வேளை மணி 1.30 க்கும் 2க்கும் இடையில் இருக்கும். ஆங்காங்கே காணும் இடமெல்லாம் கானல் இடம்பெயர்ந்து கொண்டிருந்தது. பெரிய போக்குவரத்து நெரிசல் என்றுகூட சொல்ல முடியாது. ஆனால் நான்கு முனை சிக்னல் கொண்ட சாலைகள். ஒரு முனையில் இருந்து வாகனங்கள் நேர் ரோட்டில் சீறிக்கொண்டும் மறுமுனையில் உள்ள வாகனங்கள் எல்லாம் ‘யு’ டேர்ன் போட்டுக் கொண்டுமிருந்தன.

பாதசாரிகளோ பச்சை மனித சிக்னலுக்காகக் காத்திருந்தனர். மெயின் சிக்னலில் மாற்றத்திற்குத் தயாரான மஞ்சள் விளக்கு தன்னை வெளிப்படுத்தியது. வந்து கொண்டிருந்த வாகனங்களுக்குச் சிவப்பு போடப்பட்டது. நின்ற வாகனங்கள் நகர்ந்தன. நிற்கவேண்டிய வாகனங்களில் ஒன்று நிற்காமல் தொடர்ந்து வந்தது. அவ்வளவுதான் ! மற்ற அனைத்தும் இமை மூடி திறப்பதற்குள் நடந்துவிட்டது ! எங்கும் கூக்குரல், இரத்தம் ஆறாய் ஓடியது. அதைப் பார்த்த பாதசாரிகளும் மற்ற வாகன ஓட்டிகளும் உறைந்து நின்றனர்…

சாலை விதிகளை மதிக்காமல் வந்த கனரக வாகனம் சிறிய சேதத்தோடு நின்றது. சிறிய வாகனமோ உருக்குலைந்து கிடந்தது. ஓட்டுநரின் உயிர் ஓட்டப்பட்டு இருந்தது. மற்ற அனைவரும் ஒரே குடும்பத்தினர். தாயும் தந்தையும் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் தன் மகளை மடியில் போட்டுக் கதறிக்கொண்டிருந்தனர். அதிக அளவில் இரத்தம் இழந்த நிலையில் இருந்த மகளின் நிலை இப்பொழுதோ, இன்னும் சில மணி நேரத்திலோ என்றிருந்தது.

ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் அங்கு அலறிக் கொண்டு வந்தன. பாராட்ட வேண்டிய மின்னல் வேக சேவை. சில விநாடிகளில் பாதிக்கப்பட்டோர்களுக்கு மருத்துவக் குழு தங்கள் பணிகளை ஆரம்பித்து பெற்றோர்களுக்கென்னமோ முதலுதவிக்குச் சற்று கூடுதல் அளவுதான் சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால் மகளின் நிலையோ இறுதிக்கட்டத்திலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது. ஆம்புலன்ஸில் இருந்து இறங்கிய மருத்துவர் இங்கு ‘பி’ நெகட்டிவ் இரத்தம் உள்ளவர்கள் இருக்கிறீர்களா என்று குரலை உயர்த்திக் கூவினார்.

பெற்றோர்கள் தங்களின் ஒரே ஒரு மகளின் உயிரைக் காப்பாற்றக் கூடியிருந்த கூட்டத்தினரிடம் இரத்த பிச்சைக் கேட்டுக்கொண்டு தன் மகளுக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கும்படி இறைவனையும் வேண்டிக்கொண்டிருந்தனர்.

அங்கும் இரத்தம் கொடுக்க ஒருவன் முன் வந்தான். இரத்தத்தை அந்தப் பெண்ணிற்கு ஏற்றிக்கொண்டே வண்டி மருத்துவமனையை நோக்கி விரைந்தது. அங்கு தேவையான அனைத்துச் சிகிச்சைகளும் கொடுக்கப்பட்டது. பெற்றோர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் தன் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். போகும் வழியிலேயே இரத்தம் கொடுக்க முன்வந்த இளைஞன் பற்றி அவர்களிடம் கூறினார்.

மருத்துவமனையை அடைந்ததும் தங்கள் மகளைப் பார்க்க முற்பட்டனர். ஆனால் அங்கு எவரையும் அனுமதிக்கவில்லை. தன் மகளுக்கு இரத்தம் கொடுத்த இளைஞன் எங்கே என்று கேட்டனர். அதற்கு மருத்துவர் “அவர் இரத்தம் கொடுத்துவிட்டுச் சென்று விட்டார். ஆனால் அவர் செல்வதற்கு முன் மருத்துவர்களிடம் இந்தப் பெண் பிழைத்து விடுவாரா? என்று கேட்டார். அதற்கு மருத்துவர் நீங்கள் சரியான நேரத்தில் இரத்தம் கொடுக்காமல் இருந்திருந்தால் அப்பெண் எப்பொழுதோ இறந்திருப்பாள். ஆனால் இப்பொழுதும் எங்களால் ஒன்றும் கூற முடியாது. இன்னும் 5 மணி நேரம் கழித்துத்தான் எதுவும் கூற முடியும்” என்றோம்” என்று கூறினார்.

மருத்துவமனையைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் கூட்டம் கூடியிருந்தது. அவர்கள் அனைவரும் தங்கள் முதலாளியின் மகளுக்கு நேர்ந்த விபத்தைக் கேள்விப்பட்டுக் கூடிய கூட்டம். அந்தக் கூட்டத்தினரின் பேச்சை வைத்துப் பார்க்கும்போது தான் அது தெரிய வந்தது. அந்தப் பெண்ணின் தந்தை மிகப்பெரிய தொழில் அதிபர் அவருக்குச் சொந்தமாக நூற்றுக்கணக்கில் நிறுவனங்கள் உள்ளன. மருத்துவமனையைச் சுற்றிலும் ஒரே சோக இருள் சூழ்ந்திருந்தது.

எவ்வளவோ கெஞ்சியும் பெற்றோர்கள் கூட பெண்ணைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை தீவிரசிகிச்சைப் பிரிவு டாக்டர் மட்டும் வெளியில் வருவதும் உள்ளே செல்வதுமாக இருந்தார். அவரிடம் நிலைமையைக் கேட்டுத் தெரிய முயற்சி செய்தனர்.

இரவு சுமார் ஏழு மணியளவில் இரத்தம் கொடுத்த வாலிபன் மருத்துவமனைக்கு வந்தான். தற்செயலாக வெளியே வந்த டாக்டர் அவன் கையைப்பிடித்தவாறு தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் அழைத்துச் சென்றார். அந்தச் சமயம் அந்தப் பெண் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும், மேலும் உடல்நிலை தேறி வருவதாகவும், டாக்டர்கள் கூறினர். எல்லா டாக்டர்களுக்கும் நன்றி கூறிவிட்டு அந்த வாலிபன் புறப்பட்டான்.

டாக்டரும் அவனைப் பின் தொடர்ந்து வெளியில் வந்தார். பெண்ணின் தந்தையோ டாக்டரிடம் “இவரை மட்டும் உள்ளே அழைத்துச் சென்று வந்துள்ளீர்கள். பெற்றோர்களாகிய எங்களை ஏன் பார்க்க அனுமதிக்கவில்லை” என்று சற்றுக் கோபத்துடன் கேட்டனர்.

அதற்கு டாக்டர் ‘இந்த வாலிபன் தான் உங்கள் பெண்ணிற்கு இரத்தம் இல்லை உயிர் கொடுத்தவர்; என்றார். இதைக் கேட்டதும் அவருக்கு நன்றி கூறிய பெற்றோர் தங்கள் கண்கள் கலங்கக் குலுங்கி அழுதனர். சுற்றியிருந்தவர்களின் கண்களிலும் கண்ணீர் முத்துக்கள் உதிர ஆரம்பித்தன.

பெற்றோர் அவனிடம் “இரத்தம் கொடுத்துவிட்டு உடன் எங்கு சென்றீர்கள்? நாங்கள் இரத்தம் கொடுத்தவர் யார்? என்று தேடிக் கொண்டிருந்தோம்” என்றனர். அந்த வாலிபனோ “நான் ஒரு தினக்கூலி வேலை செய்தால்தான் என் வீட்டில் மாலை அடுப்பு எரியும்” என்றான்.

உடனே தொழிலதிபர் வாலிபனைப் பார்த்து “நீ என் பெண்ணிற்கு இரத்தம் கொடுத்து உயிரைக் காப்பாற்றியதற்கு உபகாரமாக எதை வேண்டுமானாலும் கேள்; அதைக் கொடுக்க நான் கடமைப்பட்டுள்ளேன்” என்றார். வாலிபனிடமிருந்து பதில் ஒன்றும் வரவில்லை. “எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கேள்” என்று அடுக்கடுக்காக சன்மானங்களை அடுக்கிக்கொண்டே இருந்தார்.

ஆனால் பதில் வரவில்லை. உடனே தன் அருகில் இருந்த மானேஜரிடம் தொழிலதிபர் ஏதோ கூறினார். சில நிமிடங்கள் தான் இருக்கும்; ஒரு பெரிய தட்டு நிறைய சுமந்து வருபவரின் முகம் மறையும் அளவிற்கு ரூபாய் நோட்டுக்கட்டுகளுடன் வந்து நின்றார். அதனை வாலிபனிடம் கொடுக்கத் தொழிலதிபர் முற்படும்போது வாலிபன் சற்று பொறுக்குமாறு செய்கை மூலம் கூறிவிட்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்த டாக்டரின் பாக்கெட்டில் வைத்திருந்த ப்ரீஸ்கிரிப்ஷன் பேடிலிருந்து ஒரு தாளை வாங்கி அருகிலிருந்த மேஜைக்கு சென்று இரத்தம் கொடுத்து முடித்ததும் நரம்பிற்கு மேல் போடப்பட்ட பிளாஸ்டரை அகற்றினான். இரத்தம் சற்றுக் கசிந்தது. அதனைக்கொண்டு தன் விரலால் ப்ரீஸ்கிரிப்ஷன் தாளில் ஏதோ எழுதினான். பின் அதை டாக்டரிடம் மடித்துக் கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டுப்புறப்பட்டான். அனைவரும் அதிர்ச்சியில் நின்றனர்.

ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று அறியாத டாக்டர் மெல்ல சுதாரித்துக் கொண்டு பேப்பரை விரித்தார். அவரால் ஒன்றும் பேச முடியவில்லை. அவரை அறியாமலேயே கண்ணீர் கரை புரண்டது. தொழிலதிபர் டாக்டர் கையில் இருந்து தாளை வாங்கிப் பார்த்ததும் அவருக்கும் அதிர்ச்சியே காத்திருந்தது. அதில் வேறு ஒன்றும் இல்லை.’

“இது விற்பனைக்கு அல்ல” என்று மட்டும்தான் எழுதப்பட்டு இருந்தது.

 

நன்றி :

இனிய திசைகள்

பிப்ரவரி 2005

 

Sulaiman2

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *