வாழ்வு மேம்பட ……………

இலக்கியம் இஸ்லாமியக் கட்டுரைகள்

 

( நீடூர் ஏ.எம். சயீத் )

 

உலகின் மனிதர்கள் யாவரும் சகோதரர்கள் அவர்கள் அனைவரும் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான். பல்வேறு பிரிவினர்களாக சமுதாயத்தினர் வாழ்ந்தாலும் வாழ்க்கையின் நோக்கத்தை அறியாமல் செயல்படுகிற போது தவறுகள் நிகழ்கின்றன.

அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் கொள்கைகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள். பொருள் சேர்க்கும் துடிப்பில் உள்ளவர்கள் உழைக்க சோம்பல் படுகிறார்கள். மனசாட்சி இல்லாதவர்கள் இன்பத்தைத்தேடி அலைகிறார்கள். கல்விகற்றல் வணிகச் சரக்காகி விட்டதால் ஒழுக்கநெறிகள் உதாசினப்படுத்தப்படுகின்றன. அறிவியல் வளர்ச்சியில் மனிதம் காணாமல் போகிறது. தியாகமில்லாமல் தொழுகை மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள். இன்றைய சமுதாயத்தின் நிலை இப்படியிருந்தால் முன்னேற்றம் எப்படி ஏற்படும்.

நோபிள் பரிசு பெற்ற வங்கக்கவிஞன் தாகூர் கூறினார். “மனிதன் பாதங்களால் நடக்கும்போது பயணம் உயிரால் நடக்கும் போது வாழ்வு கூட்டமாக நடந்தால் சமூகம்”

செயல்படாத நம்பிக்கையினாலோ, நம்பிக்கைக்கு இணங்காத செயலாளோ சமுதாயத்தில் செழிப்பைக் காண முடியாது. தனக்கு நேரும் துன்பங்களை சகித்துக் கொண்டு தியாக உணர்வோடு செயல்படுகிற மனிதன் தீமைகளைக் காணமுடியாமல் ஓடுகின்ற       கோழையை விட சிறந்தவன்.

அல்லாமா டாக்டர் இக்பால் பொன்மொழிகளில் ஒன்று நம் கவனத்திற்குரியது. இஸ்லாத்தில் எண்ணற்ற மேதைகள் தோன்றுகிறார்கள். ஆனால் நமது சமுதாயம் அவர்களை உரிய அளவில் உணரவும் மதிப்பளிக்கவும் தவறிவிடுகிறது. இது தான் இன்றைய முஸ்லிம்களின் வீழ்ச்சிக்குக்காரணம்.

அறிஞர்கள் பலர் சொந்த நாட்டில் சிறப்பாக செயல்பட வாய்ப்பு கிடைக்காமல் போகின்ற காரணத்தால் தான். அயல்நாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களாகவும், அறிவியல் விற்பன்னர்களாகவும் பல்வேறு துறைகளில் பேராசிரியப் பெருந்தகைகளாகவும் அங்கீகாரம் பெற்று பெருமை சேர்க்கிறார்கள்.

“மனித குலம் முழுவதும் ஓர் ஆட்டுக்கிடைக்கு ஒப்பாகும். அதிலுள்ள ஒவ்வொருவரும் மற்றவருக்குப் பாதுகாப்பானவராவார். எனவே அனைத்து மக்களுடைய நலன்களைப் பற்றி ஒவ்வொருவரும் விசாரணை செய்யப்படுவர்” என்பது நபிமொழி.

உடம்பில் எந்த உறுப்பாவது பாதிக்கப்பட்டால் உடனே மற்ற உறுப்பு அதற்கு உதவமுன் வருகிறது. உதாரணமாக கண்ணில் தூசி விழுந்து விட்டால் கை உடனே கண்ணிற்குச் செல்கிறது. தொழுகும்போது கைகட்டி நிற்கிறோம். அப்போது காலின் கீழ்ப்பகுதியில் எறும்பு ஏறினால் மற்றொரு காலால் அதை தட்டுகிறோம். இதுபோல சமுதாயத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் மற்றொருவர் அவருக்கு உதவ முன் வருவதில் தாமதம் இருக்கக்கூடாது. சக உதரர் தான் சகோதரர் என்பது மட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் சகோதரர்கள் என இஸ்லாம் கூறுகிறது.

ஆபத்து, பிரச்சனை, சவால், சோதனை போன்ற பல இடர்பாடுகள் சமுதாயத்தினருக்கு வரத்தான் செய்யும் அவைகளை எதிர்கொண்டு விவேகமுடன் செயல்பட்டு வெற்றியடைய வேண்டும். நம்பிக்கையோடு வாழ்க்கைப்பாதையில் நடக்க வேண்டும். சொந்த வாழ்க்கை என்றாலும் சமூகம் என்றாலும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. சிரமங்கள் வரும்போது பொறுமையாக இருக்க வேண்டும். பதறிவிடக்கூடாது. துன்பத்திற்குப்பிறகு இன்பத்தை எதிர்பார்க்க வேண்டும்.

“நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பமுண்டு. மெய்யாகவே துன்பத்துடன் இன்பமுண்டு” என்று இறைவன் தன் திருமறையில் இருமுறை வலியுறுத்திக் கூறுகிறான். அதனால் தான் பேரறிஞர் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். “மனிதா ! நீ தொல்லைகளால் சிரமப்படும்போது ‘அலம் நஷ்ரஹ்’ அத்தியாயத்தை சிந்தித்து உண்ர்வாயாக ! அதனுள் இன்பங்களுக்கு நடுவே ஒரு துன்பம் நுழைந்திருப்பதை நீ புரிந்து கொண்டால் மகிழ்ச்சியடைவாய்.

அய்ப்பசித்திங்களில் அடைமழை வரும்போது வீதிகளில் வெள்ளம் பெருகி ஆறுகளாக ஓடலாம். கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயல் உருவாகலாம். பல இழப்புக்களும் ஏற்படலாம், என்றாலும் கவலைப்படாதிருந்தால் வசந்த காலம் வராமல் போய்விடுமா ! கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலும் சுழன்றடிக்கும் காற்றும் நிரந்தரமானதல்ல. குளிர்காலம் நமக்காகக் காத்திருந்து அனைத்து மகிழ்விக்கும். இளம்பிறை தன் ஏழ்மையை எண்ணி வருந்துவதில்லை. ஏனென்றால் முழு நிலவு அதனுள்ளே புதைந்திருப்பது அதற்குத் தெரியும். சகடக்கால் போல் இன்பமும், துன்பமும் வந்து கொண்டு தான் இருக்கும். சுழன்று வரும் வானத்திலுள்ள நட்சத்திர சக்கரம் போல் மகிழ்வும் துயரமும் மாறி மாறித்தான் வரும்.

இனிப்புப் பண்டம் சுவையாக இருக்க வேண்டுமானால் காரமும், கசப்பும் சுவைக்க வேண்டும்.

இறைதூதர்களும், இறைநேசச் செல்வர்களும் மாபெரும் மனிதர்களும், மெய்யறிவுப் பெரியோர்களும், துன்பத்தை பொறுமையுடன் சகித்து பேரின்பநிலை அடைந்திருக்கிறார்கள். தன் அடியானுக்கு துன்பத்தைக் கொடுத்து துயரமடையச் செய்ய வேண்டும் என்பது இறைவனின் விருப்பமில்லை. மனித சமுதாயத்தின் நன்மைக்காகவே சோதனைகளைத் தருகிறான்.

சமுதாய சீர்கேடுகளுக்கு முக்கியமான ஒரு காரணம் ஆத்மீகப் பயிற்சி இல்லாமை தான். மனிதன் தன் சுயவிருப்பங்களுக்கு அடிமைப்படாமல் உண்ணல், பருகல், உடுத்தல், உலகத்தொடர்பு, குடியிருத்தல், பழக்கவழக்கங்கள் ஆகிய அனைத்து செயல்களிலும் இறைமறையையும், நபிவழியையும் பின்பற்றி நடக்க வேண்டும்.

சமுதாயக்கவிஞர் தா. காசிம் சமுதாயத்தில் சிறந்தவர் யார்? என்று தம் கவிதை மூலம் அடையாளம் காட்டுகிறார்.

“பிறர் செய்யும் தவறுகளை

மன்னிக் கின்றோன்

பேராளன் அன்பதனைக்

கவர்வோ னாவான் !

பிறர் செய்யும் தவறுகளை

மறந்து நிற்போன்

பெருமை மிகும் மனிதரிலே

சிறந்தோனாவான்.”

 

சமூகப் பொறுப்பு உள்ளவன் இறைவன் பங்கிட்டுக் கொடுத்ததை நினைத்து மனநிறைவோடு வாழ்வான். பொய்யுரைக்க மாட்டான். பக்கத்து வீட்டுக்காரரிடம் நல்லமுறையில் தொடர்பு வைத்துக் கொள்வான். இறைவன் தடை செய்திருக்கின்ற காரியங்களை விட்டு ஒதுங்கி நின்று வாழ்க்கை நடத்துவான். இறைவன் கட்டளையிட்டிருக்கிற கடமைகளை மனத்தூய்மையோடு செயலாற்றுவான். இறைவழிபாடு உள்ள அறிஞர்களிடம் ஆலோசனை பெறுவான். செல்வம் நிலைத்து நிற்க இறைவனைப் புகழ்ந்து கொண்டே இருப்பான். முன்னேற்றம் தடைபடாதிருக்க இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டே இருப்பான்.

இமாம் ஜாபர் சாதிக் (ரலி) அவர்களின் அருள்மொழிகள் சிலவற்றை நம் கவனத்தில் கொள்வோம். “இறைவனின் தீர்ப்பை மனநிறைவோடு ஏற்றுக்கொள்ளும் மனம் படைத்தவர்களுக்கு மூன்று சிறப்புக்கள் கிடைக்கின்றன. இறைநம்பிக்கை, மனவலிமை, நேர்மை உலக இன்பத்துக்காக அறவழியை மறக்கும் மனநிலை விரும்பத்தகாதது. இறைவனைப் பற்றிய எண்ணத்தையே இது அனுமதிக்காது. இந்த உள்ளத்தை சிதைந்து போன வீட்டிற்கு ஒப்பிடலாம். ஒரு மனிதனுக்கு இந்த நிலை ஏற்படும்போது வரவேற்கத்தகாத மூன்று குணங்கள் அவனிடம் தோன்றுகின்றன. தற்பெருமை, முகஸ்துதி, பேராசை.”

இன்றைய சமுகத்தில் இளைஞர்கள் பற்றிய கவலை அதிகமாக இருக்கிறது. இளமை இன்று எங்கோ சிக்கிக் கொண்டிருக்கிறது. சொற்பொழிவுகளில், எழுத்துக்களில், உரையாடலில் பெரியோர்களைப் பின்பற்றுகிறோம். பின்பற்ற வேண்டும் என்று கூறும் இளைஞர்களிடம் அறிவின் ஆற்றல் தெரிந்தாலும் ஞானத்தின் ஒளியைக்காணோம். சொல்லும், செயலும், மனத்தூய்மையும் மாறுபட்டிருக்கிறது.

இளமை, ஓய்வு, செல்வம் ஆகிய மூன்றும் ஒருவரிடம் ஒன்று சேர்ந்து விட்டால் தீமையின் மூலக்கூறுகள் அவனிடம் திரண்டு விட்டன. என்று பெரியோர்கள் பகர்வார்கள். ஆனால் உண்மையில் மேற்குறிப்பிட்ட மூன்று பேறுகளின் மூலம் மனிதன் மறுமைக்கான நன்மைகளை சேர்க்க முடியும். இறைவனை மகிழ்விக்க முடியும்.

சோம்பேறித்தனமாக இருப்பவர்கள் சமூக விரோதிகள். உழைப்பின் உயர்வை அறிந்து செயலாற்ற வேண்டும். அதற்காக திரைகடலோடித்தான் திரவியம் தேட வேண்டும் என்பது கட்டாயமல்ல.

கஞ்சி குடித்தாலும் கணவனோடு வாழ வேண்டும் என்றே இல்லத்தரசிகள் விரும்புகிறார்கள். அதனால்தான் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் பாடினார். “பட்டுப்புடவை வேண்டாம் பாதாதி கேசம் வேண்டாம். முத்தமிழ் கற்ற என் அத்தானே வேண்டும்.

சில மாதங்கள் பிரிவையே தாங்கிக் கொள்ள முடியாத பெண்கள் இருக்கும் போது குடும்பத்திற்காக தியாகம் செய்கிறோம் என்று வருடக்கணக்கில் மனைவியைப் பிரிந்து வெளிநாட்டில் வாழ்வது விவேகமான செயலாக இருக்க முடியாது. “மணமுடித்து மனைவி மக்களுடன் வாழும் ஒருவனின் இரண்டு ரக்அத் தொழுகை, மனைவி மக்கள் இல்லாதவனின் 70 ரக்அத் தொழுகையைவிட மேலானதாகும்.” என்பது நபிமொழி. சமுதாயத்தின் ஆணிவேராகவும், மூச்சாகவும் இருப்பவர்கள் பெண்கள். அவர்களின் மனநிறைவான ஒழுக்கநெறி ஓங்கிய சிறப்பான வாழ்க்கை தான் சமுதாயத்தின் பெருமையை உயர்த்தும்.

நடிகைகள் கூட கற்புக்கு விளக்கம் கூறும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெண்களின் பண்புகள் பாழ்பட்டால் சமுதாயத்தின் நிலை சீர்கெட்டதாகி விடும். கணவனும் மனைவியும் இறைநம்பிக்கையும், இறையச்சமுமின்றி வாழ முற்படுவோர்களேயானால், பண்பாட்டுச் சிதைவுகளைப் பற்றி கவலைப்படாதிருந்தால், சமூகத்தையே நாசப்படுகுழியில் வீழ்த்தி விடுவார்கள்.

பிரிவாற்றாமையைப் பற்றி வள்ளுவப் பெருந்தகை ஒரு மணப்பெண்ணின் ஆதங்கத்தை திருக்குறளில் தெளிவாக விளக்குகிறார்.

“சொல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை”

“பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால் எனக்குச் சொல். பிரிந்து சென்று விரைந்து வருதலைப்பற்றியானால் அது வரையில் உயிர் வாழ வல்லவர்க்குச் சொல்” என்பது அதன் பொருள்.

அன்பின் ஆழத்தைத் தெரிந்தவர்களுக்கு இதன் சூத்திரம் தெரியும். அழகுக்காகவும், பணத்துக்காகவும் ஆசைகளின் வடிகாலுக்காகவும் வாழ்த்துகளுக்காகவும் இல்லறக் கோட்டையில் நுழைபவர்களுக்கு நல்லறம் சொல்லும் இந்த சிந்தனைச் சிதறலுக்கு பதவுரை, பொழிப்புரை தெரிய நியாயமில்லை.

ஊடல் இல்லாமல் கூடல் இனிக்காது என்பார்கள் கருத்து மோதல்களும், பிரிவுகளும் நிரந்தமாக இருக்கவிடக்கூடாது. எத்தனை தான் அலைகள் கரையைவிட்டு வெளியே துள்ளி வந்தாலும் மணலைத் தாக்கிவிட்டு மறுபடியும் கடலுக்குள் செல்வதைப்போல கணவருக்கும் மனைவிக்குமிடையே அன்பும், பாசமும், தியாகமும் இருக்க வேண்டும்.

அறிவுஜீவியாக இருந்து மட்டும் பலனில்லை. பலன் காணாத மேதை என்று பட்டம் பெற்றுவிடக்கூடாது. மெத்தப்படித்தவர்கள் பெரும்பாலோர் நேர்வழியில் நடக்காமல் அல்லல் உறும் அவல நிலையை இந்த உலகம் கண்டுகொண்டு தான் இருக்கிறது.

கணையாழி இதழில் அறிஞர் குழந்தைசாமி கூறுகிறார். “மனிதன் உடல் அளவிலேயே வாழ்கிறான். தன்னுள்ளே உறையும் ஆன்மாவை உணரும்படி சத்திய விளக்கை தன்னுள்ளே திருப்பி தன்னிடம் இருக்கும் கசடுகளைப் பார்ப்பதில்லை. இதனால் மற்றவர்களின் குற்றங்குறைகளை அவதூறுகளாக நிரப்பி நூற்றுக்கணக்கான பக்கங்களை பத்திரிகை என்ற பெயரில் வெளியிடுகிறார்கள்.

புழுக்களைப் போன்று தோன்றி அழிபவர்களையோ, தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்பவர்களையோ இந்தச் சமூகம் மதிப்பதில்லை. தாங்களும் உயர்ந்து மற்றவர்களையும் வாழ வைக்கும் மாமனிதர்களையே இந்தச் சமூகம் சிறப்புடன் போற்றும்.

தனிமனிதனின் தரத்தை உயர்த்த வேண்டும். சமுதாயத்தில் பொறுப்புள்ள மனிதர்களாக நம் பிள்ளைகளை மாற்ற வேண்டும். நம் சமுதாயத்தினரது அறிவின் எல்லை விரிவு பெறச் செய்ய வேண்டும். நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், தற்போது அவர்கள் நடத்துகிற தொழிலை திறம்படச் செய்யவும் திறமைகளை வளர்க்கவும் பாடுபட வேண்டும். நம் பெண்கள் குடும்ப நிர்வாகத்தை நன்கு செயலாற்றவும் குழந்தைகளை அறிவாற்றல் மிக்கவர்களாக வளர்க்கவும் ஆவன செய்ய வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *