தேடித் தேடிக் கொணர்ந்து சிறுகச் சிறுகச் சேகரித்த தேனியின் உழைப்பைப் போலவே தனது லட்சியத்தை வெல்லப் போராடும் மனிதர்களின் உழைப்பும் கவனத்தில் கொள்ளத்தக்கது. ஒரு வெற்றி என்பது பலரின் தோல்வி எனும் நடுநிலையிலா தராசையறுத்து தனது வெற்றியை பிறருக்கும் புரிய அல்லது பிறரும் மகிழத்தக்க அமைத்துக் கொள்வதென்பது ஒரு கலை. தான் வளரும்போதே தன்னோடுள்ளவர்களையும் வளர்க்க நினைப்பவர்களுக்கே அந்தக் கலை கைகூடுகிறது.
ஓட்டப்பந்தயத்திற்கென ஓடும் தெருவில் உடன் நிகராக ஓடுபவன் வீழ்ந்துவிடுகையில் சிரிக்கமுடியாத மன நிலையைக் கொண்டவருக்கு அந்தக் கலையும் புரியும். ஒரு சக மனிதரை எதிரியாகப் பார்க்காததொரு உணர்வு மட்டுமே மனிதத்தையும் வளர்க்கப் பதைக்கும். வெற்றி ஒரு போதை, புகழுக்கான பாடு பொருள். ஆனால் நிலைத்தல் என்பது வாழ்தல். நாட்களை வருடங்களைக் கடந்து வாழ்தலே நிலைத்தல் ஆகும். நிலைப்பதற்கு வெற்றி வெறுமனே போதுமானதல்ல, உடனிருப்போரின் உணர்வை மதித்தலும் நிலைப்பின் பாடுபொருளாகும்.
சிந்தித்துப் பாருங்கள். வெற்றி நிலைப்புத் தன்மைக் கொண்டதல்ல; அது இடம் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால் மனிதம் நிலைக்கும். மனிதமுடையோரின் புகழ் வான்கடந்து நிற்கும். காலத்தைக் கடந்தும் பேசப்படும். மனிதம் நிலைப்பின் பாடுபொருள்.
எனவே வெற்றியை எண்ணுங்கள். தனது வெற்றியை மட்டுமே எண்ணாதீர்கள். தேன் என்பது இனிப்பு மட்டுமல்ல, அது இன்னொரு உயிரின் உழைப்பும். எனவே உழைப்பைக் களவாடி இன்பம் கொள்வதைக் காட்டிலும் இனிப்பை வேறெங்கேனும் தேடுங்கள். கடைசியில் அது மனிதம் புரியுமிடத்தில் கிடைப்பதை உணர்வீர்கள்.
வெற்றி புகழைத் தரும், புகழ் சுயநலப் போதையை ஏற்படுத்தும். தேன் கூட போதை கொண்டது. சுயநல போதையை அதிகமாகக் கொண்டது தேன். எனவே தேன் வேண்டாம். வெற்றி வேண்டாம். வெறுமனே புகழ் மீதான ஆசை மட்டும் வேண்டாம். மனிதர் மீதான ஈரம் அந்த வெற்றியைக் காட்டிலும் அடர்த்தியானது. புகழை திரியாக்கி பிறருக்கு வெளிச்சம் தரும் விளக்காய் தன்னை மாற்றிக்கொள்ள முடிபவர்களுக்கு புகழ் எனும் தேனைவிடவும், அதைச் சுற்றியிருக்கும் தேனீக்களின் பசி இன்றியமையாத ஒன்றென்பது புரியும்..
வித்யாசாகர்