மகத்தானவனின் உதவியை யாசியுங்கள் !

இலக்கியம் இஸ்லாமியக் கட்டுரைகள்

அழைப்பியல்

மகத்தானவனின் உதவியை யாசியுங்கள் !

( இக்வான் அமீர் )

 

நபிகளார் கொண்டுவந்த சமூகப் புரட்சியின் போது வெறும் ஓராயிரம் பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் அந்த ஆயிரம் பேரோ இறைவனுக்காகவும், இறைவனின் திருத்தூதருக்காகவும் எதையும், யாரையும், எப்போதும் இழக்கத் தயாராக இருந்தனர். இந்த இறைநம்பிக்கையின் சிகரங்களில் தான் வெற்றி கிடைத்தது. இறைவன் அந்த நல்லடியார்களை ஆட்கொண்டான். அருள் மாரி பொழிந்தான். மாபெரும் வெற்றி தந்தான். பூமியெங்கும் இஸ்லாம் என்னும் சமாதானம் தழைக்கச் செய்தான் .

ஆனால், இன்றோ லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பல்வேறு தியாகங்கள் புரிந்தாலும் வெற்றி தான் கிடைத்தபாடில்லை. முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்தானா? உண்மையில், நமது உழைப்புகள் எல்லாமே தவறான திசையில் செலுத்தப்படும் அம்புகளாகிவிட்டன. இலக்கின்றி எய்த அம்புகள் குறியை வீழ்த்துமா என்ன? நேரிய வழியில் நமது பாதங்கள் நடை பயின்றிருக்குமேயானால் இறைவன் வெற்றிக் கனியை நமக்கும் தந்திருப்பான்.

இறைவன் கூறுகின்றான் : “(நபியே !) நாம் உமக்கு பகிரங்கமான வெற்றியை அளித்து விட்டிருக்கிறோம். உம்முடைய முந்திய, பிந்திய குறைகளை இறைவன் மன்னிப்பதற்காகவும், அவன் தனது அருட்கொடையை உம்மீது நிறைவு செய்து, உமக்கு நேர்வழியைக் காட்டுவதற்காகவும் இன்னும் மகத்தான உதவியை அவன் உமக்கு வழங்குவதற்காகவும் தான் !” (48 : 1-3 )

ஹுதைப்பியா உடன்படிக்கைக்குப் பிறகு வெற்றியின் இந்த நற்செய்தி அறிவிக்கப்பட்டது. அப்போது, மக்கள் வியப்படைந்து வாய்ப்பிளந்து நின்றார்கள். நிராகரிப்பாளர்கள் விதித்த நிபந்தனைகள் அனைத்தையும் அன்பு நபி தட்டாமல் ஒப்புக் கொண்டார்கள். குறைஷிகளுக்கு சாதகமான முஸ்லிம்களுக்கு முழுக்க முழுக்க பாதகமான ஒப்பந்தம் அது; வெளிப்பார்வைக்கு ! இப்படிப்பட்ட ஒப்பந்தத்தை எப்படி வெற்றி என்று ஏற்றுக்கொள்வது? ஆனால், சிறிது காலத்துக்குள்ளேயே நபிகளாரின் தொலைநோக்கு பார்வைக்கு … பொறுமைக்கு … வெற்றி கிடைத்தது. தோல்வி என்று நினைத்திருந்தவை வெற்றிக் கனிகளாக மாறின.

நபிகளாரின் தலைமையில் முஸ்லிம்கள் கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக இஸ்லாத்தின் வெற்றிக்காகவும், உயர்வுக்காகவும் போராடிக் கொண்டிருந்தார்கள். இறைவனின் திருக்கலிமாவை உயர்த்திட முனைப்புடன் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் முஸ்லிம்களிடம் காணப்பட்ட சின்னஞ்சிறு குறைகள் எவரும் அறியவில்லை. அந்த உன்னதமானவர்கள் செய்த குறைகளை துல்லியமாக கண்டுபிடிப்பது மனித அறிவினால் இயலாத ஒன்று. ஆனால், இறைவனின் அளவுக்கோல் பரிபூரணமானது. அதன் அடிப்படையிலான காரணத்தால் இணைவைப்பாளர்களான குறைஷியரை வெற்றிக் கொள்வதில் காலத்தாமதம் ஆனது. ‘இந்தக் குறைகளுடன் முயற்சி செய்வது … அரபிகளை வெல்ல இன்னும்காலம் கடத்தும். ஆனால், இந்தக் குறைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் இறைவன் தன் அருளால் அவற்றை நிவர்த்தி செய்தான். ஹுதைபிய்யா வழியே வெற்றியின் வாயிலைத் திறந்து விட்ட அந்த மகத்தான தருணத்தைச் சுட்டிக் காட்டுகின்றான்.

நமது ஒப்பற்ற முன்னோர்கள் செய்த தியாகங்களுடன் இறைவனின் பேரருள் பொழிந்ததால் வெற்றியும் கிடைத்தது.

விதைப்பவை தான் முளைக்கும். முள்ளை விதைத்து விட்டு நெல்லை அறுவடைச் செய்ய முடியாது. நாம் நேர்மையான முறையில் வாய்மையோடு இறைவனின் திருமார்க்கத்தை பின்பற்றி நடப்பது மிக மிக இன்றியமையாதது. அதே வாய்மையோடு நபிகளாரையும் அன்னாரின் அருமைத் தோழர் – தோழியரையும் பின்பற்றி நடக்க வேண்டும்.

அதேபோல, நாமும் தியாகங்களைச் செய்ய முன்வர வேண்டும். அப்படி அல்லாமல் மலையளவிலான நம் முயற்சிகள் இருந்தாலும் அவை பலனளிக்காது. அதனால் விதைப்பவைத்தான் முளைக்கும் நினைவிருக்கட்டும் ! இஸ்லாத்துக்காக, இஸ்லாமிய வழிமுறைகளில் முயல வேண்டும் எச்சரிக்கை ! இஸ்லாமிய அமைப்புக்காக இஸ்லாம் அல்லாத வழிமுறைகளைப் பின்பற்ற கூடாது. போலியான இம்மை சுவனத்தில் வாழ்ந்து கொண்டு உண்மையான மறுமை சுவனத்தை எதிர்பார்க்க முடியாது.

வாய்மையோடு இறைவனுக்கு துணைப் புரிந்தால் அவனும் நமக்கு துணைப் புரிவான்.

“இறைநம்பிக்கை கொண்டோரே ! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால் … அவன் உங்களுக்கு உதவி புரிவான். மேலும், உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவான்” (47:7) என்கிறான் இறைவன்.

மனிதன் இறைவனுக்குச் செய்யும் உதவி என்ன? இறைவனின் வாக்கை மேலோங்கச் செய்வது. சத்தியத்தை உயர்த்துவதற்கான பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வது. இறைவனின் வழிமுறைகளில் நமது பலா பலன்களை எதிர்பார்ப்பது. இத்தகையவர்களுக்குத்தான் இறைவனும் உதவிபுரிவான்.

ஒரு சன்னியாசி தனது குடிலுக்கு முன்பாக ஒரு மாமரத்தை வளர்க்க விரும்பினார்.

“நான் விதையை விதைத்தால் அது மரமாக வளர்ந்து காய்த்து பலன் தருவதற்கு குறைந்தது ஏழெட்டு ஆண்டுகளாகவது ஆகும் !” – என்றவர் உடனே இப்படி செய்தார்.

ஒரு முழு மரத்தை எங்கிருந்தோ பிடுங்கி வந்து … ஏராளமான உழைப்பு, ஆள்வளம் என்று தொல்லைப்பட்டு … கடைசியில் மரத்தை குடிலின் எதிரே நடவும் செய்தார்.

“ஆஹா ! பல ஆண்டு பணியை நான் ஒரே நாளில் முடித்து விட்டேன்!”  – என்று பெருமிதப்பட்டார்.

ஆனால், அடுத்த ஓரிடு நாட்களிலேயே அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

மரத்தின் இலைகள் சுருங்கி … இன்னும் சில நாட்களில் அவை உதிர்ந்து மொட்டை மரமாகி சில வாரங்களுக்குள்ளேயே அது காய்ந்து கருகி, பலமாக வீசிய காற்றில் சாய்ந்துவிட்டது. குடிலுக்கு எதிரே சருகுகளும், விறகுமாய் தடயமானது மரம்.

இந்த உலக நியதி என்பது இறைவனின் பங்கு மற்றும் மனிதனின் பங்கு என்ற அடிப்படையிலான கலவையாகும். எந்திரத்தின் பற்சக்கரங்களைப் போன்றது இது. ஒரு பற்சக்கரம் மற்றொன்றுடன் உராயும்போது தான் இயக்கம் பிறக்கிறது. எந்திரம் ஓடுகிறது.

மனிதனின் வெற்றி முழுமையாக அவனுக்கான பங்கை நிறைவேற்றுவதில் தான் இருக்கிறது. மாறாக, வேகமாக செயல்பட நினைத்தால் … இறைவனின் பற்சக்கரமோ மனிதனைவிட மிக மிக வலிமையானது.

விதையை பூமிக்குள் புதைத்து தேவையான உஷ்ணம், காற்று, வெப்பம், நீர் என்று அடுக்கடுக்கான தேவைகளை அதற்கு ஏற்ப இறைவன் அளித்து முளைவிடச் செய்யும் உயிர்ப்புக்கான நியதிகள் அவை.

இன்னொரு சம்பவத்தையும் கேளுங்கள்.

அழகான தோட்டம். ஒரு புதரில் வண்ணத்துப்பூச்சி ‘கூட்டுப்புழு’ வடிவில் தொங்கிக் கொண்டிருந்தது.

இதை அந்த வழியே சென்ற ஒருவர் கண்டார்.

வெளியே வருவதற்காகக் கூட்டுப்புழு வளைந்து – நெளிந்து கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தது.

கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாக மாறுவதற்காக கொஞ்சம் கூட்டை துளைத்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்.

பல மணி நேரம் அதை அவர் கவனித்துக் கொண்டிருந்தார்.

அந்த மனிதருக்கு பரிதாபம் ஏற்பட்டது. “பாவம் நாம் இதற்கு உதவி செய்தால் என்ன?” – என்று அவர் தனக்குள் பேசிக் கொண்டார்.

கூட்டுப்புழுவின் கூட்டை லேசாகப் பிய்க்க ஆரம்பித்தார்.

கொஞ்சம் சிரமத்துடன் வண்ணத்துப்பூச்சியையும் காயமில்லாமல் வெளியில் எடுத்து விட்டார்.

ஆனால், அந்த வண்ணத்துப்பூச்சி முழுமையாக வளர்ந்திருக்கவில்லை. இறக்கைகளும் வளர்ச்சியில்லாமல் மிகச் சின்னதாக இருந்தன.

கொஞ்சம் நேரத்தில் இறக்கைகள் வளர்ந்துவிடும் என்று அந்த மனிதர் நினைத்தார்.

அந்த மனிதர் நினைத்தது போல நடக்கவில்லை. அவர் அந்த உயிரினத்திடம் பரிதாபப்பட்டது உண்மைதான். ஆனால், இயற்கைக்கு விரோதமாக அல்லவா அவர் செய்தது !

கடைசியில் அந்த வண்ணத்துப்பூச்சி ஊனமானது தான் மிச்சம்.

கூட்டிலிருந்து வெளிவருவதற்கான தொடர் முயற்சியும், அதற்கான போராட்டமும் வண்ணத்துப்பூச்சியின் உடல் வளர்ச்சிக்குத் தூண்டுதல்… அது பறப்பதற்கான விடுதலை … என்பது அந்த மனிதருக்குத் தெரியவில்லை.

நமது வாழ்க்கை அமைப்பும் அப்படிதான் ! நமது சாதனைகளுக்கு, முயற்சியும், தொடர்ச்சியான போராட்டமும் அவசியம்.

உண்மையில் இஸ்மாமிய புரட்சிக்கு அடிப்படை தடம் மாறாத இறைவனின் வழிமுறைகள், இறைத்தூதரின் வழிமுறைகள்.

ஆதி பிதா ஆதம் நபிக்கு பிறகு வந்த மனித இனம் ஆரம்பத்தில் பூமியில் ஒரே இறைவனை தான் வணங்கிக் கொண்டிருந்தது. ‘உம்மத்தே வாஹிதா’ எனப்படு ஒரே சமுதாயம் அது.

”(தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே கொள்கைவழி நடக்கும் சமுதாயத்தவராகவே இருந்தனர்” (2:213) – என்கிறது இதை திருக்குர்ஆன்.

இந்த ஒருமை நிலை நீண்ட காலம் நிலைக்கவில்லை. கருத்து வேறுபாடுகள், பிணக்குகள் பிளவுகளுக்குக் காரணமாகிவிட்டன. மக்கள் நேர்வழியிலிருந்து வழி பிறழ்ந்துவிட்டனர். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கல்-மண், மரம், செடி-கொடிகள் எல்லாம் கடவுள்களாகிவிட்டன.

“அந்தோ! இந்த மக்களின் நிலை பரிதாபத்துக்குரியது. அவர்களிடம் எந்த இறைத்தூதர் வந்தபோதும், அத்தூதரை அவர்கள் ஏளனம் செய்து கொண்டுதான் இருந்தார்கள்” (திருக்குர்ஆன் – 36:30)

இணைவைப்புகளைத் தொடர்ந்து இறைவன் இறைத்தூதர்களை அனுப்பிக் கொண்டுதான் இருந்தான். ஒரு லட்சத்துக்கும் அதிகமான இறைத்தூதர்கள் அவர்கள் ! ஒவ்வொரு மனித சமுதாயத்துக்கும் அனுப்பப்பட்டார்கள். ’அனுப்பப்படவில்லை … செய்தி சேரவில்லை’       -என்ற குற்றச்சாட்டு எழுந்திடக்கூடாது என்று இறைவனின் கருணையிலான ஏற்பாடு அது.

“அவர்களின் இறைத்தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளை கொண்டுவந்த போது தங்களிடம் என்ன ஞானம் இருந்ததோ அதிலேயே அவர்கள் மகிழ்ந்து போயிருந்தார்கள். பின்னர் அவர்கள் எதைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதன் சுழற்சியிலேயே அவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள்” (40:83)

உண்மையிலேயே இந்த மக்களின் ஞானம் என்பது இறைவனின் போதனைகளில் கலப்படம் செய்து திரித்ததாகும். இறைவனின் நேரிய பாதையிலிருந்து தடம் புரண்டு சென்றதாகும்.

இறைத்தூதர்கள் மக்களை ஒரே இறைவனான அல்லாஹ்வின் பக்கம் அழைத்தபோது அந்த ஒரே ஒரு குரல் தனித்துதான் ஒலித்தது. இணைவைப்பு அந்தளவுக்கு வலிமையாக … வீச்சுடன் இருந்தது. இதற்காக இறைத்தூதர்கள் எண்ணற்ற தியாகங்களை செய்ய வேண்டியிருந்தது.

இறைத்தூதர் ஈஸா நபியை எடுத்துக் கொண்டால் …

அன்னார் இறைவனின் திருச்செய்தியை மக்களிடையே எடுத்துரைத்த போது அவருக்கு வானத்துக்குக் கீழே பாதுகாப்பாக ஒதுங்க ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. ஒதுங்க குடிசை இல்லை. மரத்தடிகள் தான் அவரின் வாசஸ்தலங்களயின. அதே நேரத்தில், இணைவைப்பில் மூழ்கியிருந்த யூத இனத்து தலைமைக் குருவோ மாட மாளிகையில், ஆடம்பர சுகங்களில் திளைத்துக் கொண்டிருந்தார். இன்னொரு கோணத்தில் இந்த பஞ்ச- பராரி, வீடில்லாத, பலவீனமான இறைத்தூதர்கள் தான் மற்றொரு பிரிவு மக்களுக்கு ‘ஹுரோக்களாக திகழ்ந்தனர். அவர்களின் வாயிலிருந்து உதிர்ந்த ஒவ்வொரு வார்த்தையையும் அந்த மக்கள் இருகரமேந்தி தாங்கிக் கொண்டனர். தங்கள் மனம் என்னும் சிம்மாசனத்தில் அமர்த்திக் கொண்டனர். அவர்களுக்காக எல்லாவற்றையும் துறக்க சித்தமாயினர்.

வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான சிக்னல் விளக்குகள் போல இறைத்தூதர்கள் மனித வாழ்க்கைப் பயணத்தில் சுவனத்துக்கு அழைத்துச் செல்லும் விளக்குகள் போல செயல்பட்டார்கள்.

“மேலும், இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் ‘உம்மதே வஸத்தன் – சமநிலை சமுதாயமா’ க்கினோம். நீங்கள் மக்களுக்கு சான்று வழங்குபவராகவும், இறைத்தூதர் உங்களுக்கு சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக ( 2: 143 )

சமநிலை சமுதாயம் நீதி, நேர்மை, நடுநிலை ஆகியவற்றை நிலையாகக் கடைப்பிடிக்கும் சமுதாயமாகும். அனைவரிடமும் ஒரே விதமான – நேர்மையான நடத்தையை மேற்கொள்ளும். எவரிடமும் அசத்தியமான தவறான போக்கை மேற்கொள்ளாது. இத்தகைய பண்புகள் கொண்ட மிக உயர்ந்த – உலக சமுதாயங்களுக்குத் தலைமை அந்தஸ்து வகிக்கக்கூடிய இலட்சிய சமுதாயமாகும்.

இறைவனின் மார்க்கம் எனப்படும் இஸ்லாமிய ஒளிச்சுடர் உலகம் முழுக்க பரவ வேண்டும். அதற்கான முனைப்புகளில் ஒவ்வொருவரும் இறங்க வேண்டும். எல்லா இறைத்தூதர்களும் கனத்த இந்தப் பொறுப்பை சிரத்தையுடன் நிறைவேற்றினார்கள். மக்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்கும் பணிகளில் முழுமையான கவனம் செலுத்தினார்கள். சத்தியத்துக்கான தொடர்புகளில் அவர்கள் எந்த குறுக்கீடுகளையும் அனுமதிக்கவில்லை. இறைத்தூதர்களை ஏற்போர் சுவனம் செல்வார்கள். மறுப்போர் நரகம் செல்வார்கள் என்ற தெளிவான அறிவுரை இது.

“மறுமை நாளில் தங்கள் பாவங்களை முழுமையாகச் சுமப்பதுடன் அறியாமையினால்… யார் யாரை இவர்கள் வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய பாவங்களையும் சுமப்பார்கள்” (16 : 25) – என்று எச்சரிக்கிறது திருக்குர்ஆன்.

நபிகளாரின் திருப்பணி நன்மைகளை விதைப்பதோடு மட்டுமல்ல … நல்லவற்றை போதிப்பதோடு தீயவற்றை தடுக்கும் பணிகளையும் முழு வீச்சுடன் செய்தார்கள்.

“இவர்கள், அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களால் ஊதி அணைத்து விட விரும்புகிறார்கள். ஆனால், அல்லாஹ்வின் முடிவு என்னவென்றால் தன் ஒளியை முழுமையாகப் பரப்பியே தீருவது என்பதாகும். இறைநிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே ! அவன் தான் தனது தூதரை நேர்வழியிடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். ஏனைய மார்க்கங்களை விட அதனை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக இணைவைப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே !” ( திருக்குர்ஆன் – 6 : 8,9)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *