சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து –
நெய்வேலி அனல் மின் நிலையம் உருவாக
காரணமானவர் காயிதெ மில்லத் !
தமிழ்நாட்டில் எத்தனையோ மகத்தான தலைவர்கள் உருவானார்கள். ஆனால், அவர்களில் கண்ணியமிகு காயிதெ மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களைப் போல் தீர்க்கதரிசனத்துடன் அரசியல் அரங்கில் வலம் வந்தவர்கள் ஒருசிலர் தான்.
ஒரு தலைவன் என்பவனின் அடையாளம் காலங்களைக் கடந்த பின்னும் சிந்தனையில் உருவான ஒரு கருத்தின் செயல்களால் அதன் பயன்களால் தன் கருத்தை நிலை பெற்றிருக்கச் செய்வதுதான்.
தன் கருத்தால் தமிழ்நாட்டின் மூலை, முடுக்கு, குக்கிராமம், தொழிற்சாலை, அலுவலகம் என எல்லா இடத்திலும் ஒளியாய் ஒளிர்ந்து நிற்பவர் கண்ணியமிக்கத் தலைவர் ஒருவர்தான்.
மின்சாரம் இன்றைக்கு அரசுகளின் வளர்ச்சிக்கு உதவும் பெரியதொரு விஷயம். ஒன்றுபட்ட மாகாணமாக இருந்தபோதே அனைவருக்குமாக மின்சாரத் தேவைக்காக தொழிற்துறை வளர்ச்சிக்காக சுரங்கத் தொழில் வளர்ச்சிக்காக ஓங்கிக் குரலெழுப்பியவர் ஒரே ஒருவர் தான். இதைச் சொல்வதற்கு காரணம் உண்டு. இன்றைக்கு மாநிலத்தை ஆளும் தி.மு.க. என்ற கட்சியே உருவாகாத காலத்தில் 1948 ல் மாகாண சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.
கட்சியின் தலைவர் என்ற பொறுப்பில் காயிதெ மில்லத் அவர்கள் விளங்கியபோது 1948 மார்ச் மாதம் 22 ம் தேதி சென்னை மாகாண சட்டமன்றத்தில் அன்றைய தொழில் அமைச்சராக கோபால் ரெட்டி அவர்கள் இருந்தபோது கவன ஈர்ப்புத் தீர்மானமான எதிர்க்கட்சித் தலைவரான காயிதெமில்லத் அவர்கள் மாகாணத்தை தொழில்மயப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. தென்னாற்காடு நெய்வேலியில் நிலக்கரி இருப்பதாக நான் கூறிய பின்னரும் அரசு அது தொடர்பாக என்ன ஆய்வு செய்தது.
நெய்வேலியில் ஐம்பது டன் லிக்னைட் பூமிக்கடியில் உள்ளது. இதை எடுத்த மாகாண தொழில் வளத்திற்கு பயன்படுத்த அரசு என்ன முயற்சி மேற்கொண்டது? பீஹாரிலுள்ள தான்பாத்தில் சுரங்கம் தொடர்பாக கற்பிப்பிக்கிறார்கள். அங்கு செல்லும் நம் மாணவர்களுக்கு அரசு தர உத்தேசித்துள்ள கல்வி உதவித்தொகை போதுமானதல்ல.
எனப் பல்வேறு விஷயங்களையும் கூறி பேசுகிறார். அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் அரசியல் நிர்ணய அவைக்கு தேர்வாகி சென்று விடுகிறார்.
அந்த ஆண்டு ஒரு சோதனை மிக்க ஆண்டு மட்டுமல்ல. ஒரு சுமையான ஆண்டும் கூட என்றும் சொல்லலாம்.
1948 காந்தியார் படுகொலை – ஜனவரி
முஸ்லிம் நேஷனல் கார்டு என்கிற தொண்டர் படை கலைப்பு –பிப்ரவரி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடக்கம் – மார்ச்
அரசியல் நிர்ணய சபையில் பணி – ஆகஸ்ட்
ஜின்னா சாஹிப் மறைவு – செப்டம்பர்
ஆயினும் மீண்டும் 1949 ம் ஆண்டு தனக்கு கிடைத்த சென்னை மாகாண சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தும் வாய்ப்பில் 4.3.1949 மீண்டும் நெய்வேலிக்கு நிலக்கரி தொடர்பாக வினவுகிறார்.
இவரின் வற்புறுத்தலால் நில ஆய்வு அதிகாரிகள் வேண்டா வெறுப்பாக ஆய்வு செய்து குறைந்த மதிப்பீட்டில் நிலக்கரி இருப்பதாக தகவல் தருகின்றனர்.
அதே மாதம் 22 ம் தேதி சபையில் மீண்டும் நெய்வேலி தொடர்பாக வினாவை எழுப்பி ஏற்கனவே ஆய்வு செய்த அதிகாரிகள் கூறுவது தவறு. அங்கு அதிக அளவில் லிக்னைட் கனிமவளம் இருப்பதாக வேறு இருவரின் அறிக்கையை அவையில் வைத்து வாதாடுகிறார். அரசு நினைப்பதை விட அங்கு அதிக அளவு நிலக்கரி படிவம் உள்ளது என்கிறார்.
தொழில் அமைச்சரான கோபால் ரெட்டி காயிதெ மில்லத் அவர்களை புத்திசாலித்தனமாக மடக்குவதாக நினைத்து கனம் உறுப்பினர்க்கு அங்கு அதிகளவு நிலக்கரி படிவம் உள்ளது எப்படி தெரியும் எனக் கேட்கிறார்.
சற்றும் அசராமல் “எனக்கு இந்தத் துறையில் நீண்ட அனுபவம் உண்டு. அந்த இலாக்காவுடன் தொடர்புண்டு. எனவே, என் கருத்தில் தவறுள்ளது என அரசு நிருபிக்க முன் வருமா? அரசு கூறும் உத்தேச அளவை விட அங்கு புதைந்துள்ள கனிமவளம் அதிகம்” என்கிறார்.
மீண்டும் 23 ம் தேதி அதே மாதத்தில் அதே ஆண்டில் நெய்வேலி குறித்தும் அதை வெட்டி எடுத்து தொழிற்துறை வளர்ச்சிக்காக அரசை வற்புறுத்தி, வலியுறுத்தி பேசுகிறார்.
புதிதாக விடுதலை பெற்ற அரசும் மாகாண அரசுகளும் தொழில் வளர்ச்சி விஷயத்தில் மெத்தனமாக இருப்பதை அவ்வப்போது சுட்டிக் காட்டும் நிலையில் 1950 அதே மார்ச் மாதம் 23 ம் நாள் அரசின் நிதி நிலை அறிக்கை மீது கருத்துக் கூறும்போது மீண்டும் நெய்வேலி குறித்து பேசுகிறார்.
அவர் ஒவ்வொரு தொழில்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போதும் தொடர்ந்து 1948 முதல் 49,50,51 ஆண்டுகளில் நெய்வேலி தொடர்பாக பேசும்போதெல்லாம் கேலியாகப் பார்ப்பதும் தேவையற்ற ஒன்றை அவர் பேசுவதாகவும் பலரும் கருதினார்கள். இதை அவரே 28.3.1950 ஆண்டில் கூறியுள்ளார்.
நாட்டின் மாகாணங்களில் முதல் ஐந்தாண்டு திட்டம் அமுலான போது அந்தத் திட்டத்திலும் நெய்வேலி தொடர்பாக அரசு கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
23.10.1951 ம் ஆண்டு முதல் ஐந்தாண்டு திட்டத்தில் தான் கூறும் நெய்வேலித் திட்டம் இல்லாததை சுட்டிக் காட்டிப் பேசுகிறார்.
1952 ம் ராஜ்ய சபைக்கு தேர்வு பெற்று சென்று விடுகிறார். எனினும், தமிழகத்திற்கு அன்றைய சென்னை மாகாணத்திற்கு ஒளிவிளக்கேற்றப் போகும் தன் நெய்வேலி திட்டம் தொடர்பாக மட்டும் அவர் கடைசி வரை வலியுறுத்தப் பின்வாங்கவில்லை.
1952 மே மாதம் 20 ம் நாள் ராஜ்ய சபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசும்போது மறக்காமல் நெய்வேலி நிலக்கரி படிவங்கள் அரசின் ஆய்வை விட நிச்சயம் அதிகமாகக் கிடைக்கும். மாகாண தொழிற்துறை வளர்ச்சிக்காக அரசு உடனடியாக இத்திட்டம் தொடங்க வேண்டும் என வற்புறுத்துகிறார்.
ஒரு வழியாக ஆய்வுகள் நடக்கின்றன. அங்கு காயிதெ மில்லத் அவர்கள் கூறுவது போல் அதிகளவு படிவம் உண்டு என்ற உண்மைகள் வெளியானதும் ஏற்கனவே ஆய்வு செய்த பலமூத்த அதிகாரிகள் தலையைத் தொங்க விட்டனர். அந்தத் திட்டம் தொடங்க தடையாய் இருந்தவர்கள் வெட்கப்படும் அளவுக்கு ஆய்வு முடிவுகள் கண்ணியத் தலைவருக்கு சாதகமாக வந்தன. அரசு திட்டத்தை தொடங்க முடிவு செய்தது.
1956 ல் சுரங்கம் தோண்டும் வேலை தொடங்கியது. 1948,49,50,51,52,53,54,55,56,57 முதலான ஆண்டில் தன்னுடைய மகத்தான போராட்ட குணமிக்க வாதத்தினால் அந்தத் திட்டம் வெற்றிகரமாகத் துவங்கிட வைத்த ஒரே தலைவர் கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்கள்.
இவரைத் தவிர இத்திட்டத்தின் மீது வேறெவரும் அக்கறை கொள்ளவில்லை. அந்தத்துறையுடன் நீண்ட தொடர்பு கொண்டு முழுமையான தகவல்களை சேகரித்தவாறு அரசுக்கு உந்துதலாக இருந்து நெய்வேலி கனிமவள திட்டம் நிறைவேற முழு முதற் காரணமாணவர் இவர் ஒருவர் தான். இன்றும் இங்கு கனிமம் வெட்டப்படுகிறது. மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு பெறப்படும் மின்சார வாரியம் முழுவதும் விநியோகமாகிறது. தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா, புதுவை ஆகிய மாநிலங்களும் நெய்வேலி மின்சாரத்தை நுகர்கின்றன.
1962 ம் ஆண்டு முழுமையாகத்தன் அனல் மின் உற்பத்தியைத் தொடங்கியது. இங்கு மாநில அரசு ஒவ்வொரு டன் கரிக்கும் ராயல்டி எனும் மதிப்புத் தொகை மத்திய அரசிடம் பெறுகிறது. இதற்குக் காரணம் காயிதெ மில்லட், அங்கு மின்சாரம் உற்பத்தி செய்யக் காரணம் காயிதெ மில்லத், தென்னாற்காட்டிலே நெய்வேலி டவுன்ஷிப் என்ற மாபெரும் தொழில் மையம் உருவாகக் காரணம் காயிதெ மில்லத், மக்கள் தொழில் காரணமாக ஒரு நகர்மன்றத்தில் வாசிக்கக் காரணமானவர் காயிதெ மில்லத்.
அவர் காலத்தில் அவர் குறிப்பிட்டது போல ஆய்வில் தெரியவந்த போது இருப்பை விடவும் கூடுதலாக இன்னும் நிலக்கரி அதிலும் தரமாக கிடைத்து வருகிறது. இத்தனை அற்புதனமான திட்டத்தை வாதாடி, போராடி கொண்டு வந்த அந்த மாமனிதரின் பெயரை உச்சரிக்கவும், நினைவு படுத்தவும் கூட அங்கு எந்த அடையாளமும் இல்லை. தமிழர்கள் நன்றி உடையவர்கள் தான் என்பதை காலம் கடந்தாவது உணர்த்திட காயிதெ மில்லத் நெய்வேலி லிமிடெட் கார்ப்பரேஷன் என பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு உரிய முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
அமெரிக்காவில் ஒளிவிளக்கை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்காக சில வினாடி விளக்கை அனைத்து நினைவு கூர்கிறார்கள். ஆனால், அந்த விளக்கு தமிழகத்தில் தென்னகத்தில் எரியவைக்க பாடுபட்ட சமூக அறிவியல் மேதை காயிதெ மில்லத் அவர்களுக்காக நாம் விளக்கை அணைக்க வேண்டாம். குறைந்தபட்சம் அவர் பெயரையாவது சூட்டுவது நன்றியுள்ள செயலாகும். ஏனெனில் அவர் தான் தமிழகத்தின் நிஜமான ஒளிவிளக்கு.
-அறிந்தார்க்கினியன்
நன்றி :
பிறைமேடை
ஜுன் 1-15, 2010