மூதறிஞர் கு, அருணாசலக் கவுண்டர்
கோயில்பட்டியிலிருந்து சங்கரன் கோயில் பாதையிலே பன்னிரண்டாவது மைல் கல்லில் கரிசல் காடும் கரம்பும் சூழ்ந்த புன்செய் பிரதேசத்திலே கழுகுமலையைக் காணலாம். மலை என்பது வெறும் பெயரளவிலே தான். சுமார் 300 அடி மொட்டைப்பாறையே அது. அதன் உச்சியிலே தெரிவது பிள்ளையார் கோயிலும் தீபத்தம்பமுமே. மலை மீதேறி அங்கே செல்வதற்குச் சரியான பாதை இல்லை. சற்று சிரமத்துடன் தான் செல்லவேண்டும். வழியிலே ஒரு குகை தென்படுகிறது.
இது போன்ற மலைச்சரிவுகளிலே பாறைகளில் படுக்கைகள் போலவும் ஆசனங்கள் போலவும் செதுக்கப்பட்ட குகைகளிலே தான் தமிழ்நாட்டின் மிகப் பழமையான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கின்றன. கி.மு. 3–ஆம் நூற்றான்டைச் சேர்ந்த இக்குகைகள் யாவும் சமண சமயத்தை வளர்த்த முனிவர்கள் தங்கியிருந்த இடங்களே.
இம்முனிவர்கள் வசித்திருந்த மற்றொரு மலைச்சரிவிலே கிஜ்ஜக்கூடம் ஒன்று. கிஜ்ஜக்கூடம், அதாவது திரீதரகூடம் என்பதற்குக் கழுகுமலை என்பது பெயர். இம்மலைப்பாறைகளில் செதுக்கப்பட்ட படுக்கைகள் காணப்படுகின்றன. ஆனால் பிராமி லிபிக் கல்வெட்டு இல்லை.
பெளத்தர்க்குச் சற்று முன்னோ பின்னோ இங்கே சமண முனிவர்களும் குடியேறி தொடர்ந்து வசித்திருக்கின்றனர். இங்கே காணப்படும் நூற்றுக்கு மேற்பட்ட சமண சிற்பங்களும் கல்வெட்டுக்களும் புலப்படுத்தும் தெளிவான செய்திகளால் இம்மலை சமணரது பல்கலைக் கழகமாக அகில இந்தியாவிலும் முன்னர் பிரசித்தி வாய்ந்திருந்ததை நாம் அறிகிறோம்.
சமண தீர்த்தங்கரர்கள்
மலைமீது சமணச் சிற்பங்களைக் காண்பதற்கு முன் அடிவாரத்திலே அமைந்துள்ள கழுகாசல மூர்த்தியின் கோயிலுக்குச் செல்கிறோம். எட்டயபுரத்து அரச மரபினர் கட்டி வைத்த விசாலமான மண்டபங்களைக் கடந்து செல்கிறோம். வழிபாடு செய்துவிட்டு நாமும் வெளியேறி மலையை வலம் வருகிறோம். அல்லிக்கேணியைக் கடந்து உருண்டமலை, திரண்டமலை ஒய்யாரக் கழுகுமலையைப் பார்த்த வண்ணம் அதன் வட பாரிசத்திலே அகண்டதாய்ப் பரந்து கிடக்கும் பாறை மீதேறிச் செல்கிறோம். கவனமாய்ப் பாதத்தை ஊன்றித்தான் நடக்கிறோம். பாதத்தை ஊன்றி வைக்கும் போதெல்லாம் பாதம் படும் சிற்சில இடங்களில் பாறையின்றும் சங்கீதத்துக்குரிய நாதங்கள் சப்த ராகங்கள் அல்லவா ஒலிக்கின்றன. விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு இதை விட்டு விட்டு சற்று வடக்கு நோக்கி மேல் ஏறுகிறோம். தென்புறம் மலைச்சரிவின் நெடுகிலும் அறுபது அடி உயரத்தில் ஒன்றன்கீழ் ஒன்றாக மூன்று வரிசைகளில் ஒரே சீராய்த் தோன்றும் இச்சிற்பங்களைப் பாருங்கள். மழித்த தலையுடன் இளமை முறுக்கோடு இரு கரங்களும் மருங்கிலே தொங்க முக்குடையின் கீழ் ஞான ஜோதியில் தம்மை மறந்து அவ்வொளியை மெளனமாகவே பரப்பும் வகையில் தோன்றும் இச்சிற்பங்கள் சிற்பக் கலைக்கே பெருமை தரும் செல்வம் அல்லவா? இவை யாவும் தீர்த்தங்கரர் உருவங்களே. அன்பும் அருளும் கொண்டு அமைதியின் வடிவாய்த் தோன்றும் இவர்கள் யார்? சமண சமயத்தை வளர்த்தச் சான்றோர் இவர்கள். இவர்களைத் தீர்த்தங்கரர்கள் என்பர். இச்சொல்லுக்குப் பிறவிப் பெருங்கடலினின்று நம்மைக் கரை சேர்ப்பவர் என்பது பொருள். இவர்கள் திகம்பரர்களே. அதாவது அம்மணமாகத் தோன்றுகின்றனர். மெய்ஞானியராய் வினைகளை வென்ற இவர்களுக்குக் கெளபீனமும் மிகைதான். பூரண வளர்ச்சி எய்திய இம்மானிடர்களையே கடவுளாகக் கொண்டு ஜைனமதம் வழிபடுகிறது. கண்காணாக் கடவுளை அது ஒப்புக் கொள்வதில்லை.
அம்பிகை
இதோ இந்த வரிசையின் இடது பால் மாடத்திலே பெண் உருவம் ஒன்று அசோக மரத்தின் கீழ் நின்ற கோலத்தில் தோன்றுகிறது அல்லவா? மகுடம் தரித்துக் காதுகளில் தோடு அணிந்து வலது கரத்தை மருங்கிலே நிற்கும் சிறுமியின் சிரசிலே வைத்து இடது கரத்திலே எதையோ ஏந்தி திரிபங்க நிலையிலே ஒய்யாரமாய் நிற்கும் இவள் தான் அம்பிகை. இவளை நேமிநாதரது யட்சி–சாசன தேவதை, அதாவது சேவகி என்பர். இவளது வாகனமாகிய சிங்கம் கம்பீரமாய் தலை நிமிர்ந்து நம்மையே பார்க்கிறது. இதன் வால் மேல்நோக்கிச் சுருண்டிருக்கிறது. இதன் அருகே அச்சம் இன்றிச் சிறுவர் இருவர் நிற்கின்றனர். இந்த அம்பிகை துர்க்கையுடன் ஒன்றி மறைந்தாள்.
மஹாவீரர்
அதோ வலது பால் சற்றுப் பெரியதாய்த் தோன்றும் அந்த கோஷ்டத்தைப் பாருங்கள். அதன் பிரபாவளியிலே பொறிக்கப்பட்டுள்ள அஷ்டமங்கலங்கள் அலங்காரச் சித்திரங்களின் சிற்றுளி நுணுக்க வேலைப்பாடுகளைச் சொல்லாமல் விவரிக்க முடியாது. இம்மாடத்திலே முக்குடைக்கீழ் வீற்றிருக்கும் வர்த்தமான மஹாவீரர் சிற்பம் செய்நேர்த்தி வாய்ந்தது. காற்று வீசாத இடத்திலே ஆடாமல் அசையாமல் புகைத்தலுமின்றி நேராக நின்று எரிந்து கொண்டிருக்கும் விளக்குச் சுடர் போல் அல்லவா அவர் தோன்றுகிறார். தியானமே உறைந்து இறுகிச் சிலையானதோ என்று எண்ணுகிறோம். கீழே தீர்த்தங்கரர் இருவர் அமர்ந்திருக்கின்றனர். முடி தரித்த மன்னன் ஒருவன் மண்டியிட்டு வணங்குவதைக் காண்கிறோம். இவன் பாண்டியன் பராந்தக நெடுஞ்செழியன் ஆகலாம்.
பத்மாவதி
கீழே தனிக்கோஷ்டத்திலே யட்சி ஒருத்தி பத்மாசனத்திலே அமர்ந்திருக்கிறாள். அவள் சிரசின் மீது பாம்பின் படம் கவிழ்ந்திருக்கிறது. நான்கு கரம் வாய்ந்த இவள் வலது மேல்கையில் பாம்பு, கீழ்க்கையில் கனி, இடது மேல்கையில் அங்குசம் போன்ற ஒன்று தாங்கிக் கீழ்க்கையை மடியில் வைத்திருக்கின்றாள். இருமருங்கும் பணிப்பெண்கள் சாமரம் வீசி நிற்கின்றனர். இந்த யட்சி பார்சுவநாதரின் சேவகி பத்மாவதியாகலாம். சமணமதத் தெய்வங்களிடையே யட்சிக்குத் தனியிடம் இல்லை. தனி அந்தஸ்து இல்லை. தீர்த்தங்கரரின் சாசன தேவதையாய் சேவகியாகத் தான் தோன்றுவாள்/
யட்சி வழிபாடு
கழுகுமலைச் சிற்பங்களுக்குத் தீர்த்தங்கரரை விட ஒருபடி அதிகமாகவே முக்கியத்துவம் வழங்கப் பட்டிருப்பதைக் கருதும்போது யட்சி வழிபாடு தமிழகச் சமணத்தின் சிறப்பியல்பு என்பது புலனாகிறது. “அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிற்கு” பால் பாயசம் படைத்து மாதரி வழிபடுவதைச் சிலப்பதிகாரத்திலே காண்கிறோம். இதிலே இயக்கி என்பதும் நாம் இசக்கி என்பதும் யட்சியைத் தான் யட்சியைப் படாரியர் எனலாம். படாரி தான், பிடாரியானாள். இசக்கியும் , பிடாரியும் கிராமதேவதைகளாகவே பத்மாவதியுடன் ஒன்றினார்கள்.
பிங்கலந்தை நிகண்டு துர்க்கையின் பெயராகப் பகவதி பண்ணத்தி என்பன பயில்கின்றன. திவாகர நிகண்டிலும் பகவதியின் எதிராகப் “பண்ணம் பண்ணத்தி” பயில்கிறது. பண்ணத்தி என்பதற்குப் பாம்பின் படத்தைத் தரிப்பவள், நாகதேவதை பத்மாவதி என்பது பொருளாகிறது. சமணரது பத்மாவதி பகவதி வழிபாட்டிலே கலந்து மறைந்தாள். என்று கருதலாம். மலைச்சரிவிலே 60 அடி உயரத்திற்கு மேல் அலை அலையாய்த் தோன்றும் இந்த ஆன்றோர்களைக் கீழ் நிற்கும் நாம் அண்ணாந்து பார்க்கும்போது அவர்கள் முன் நாம் எம்மாத்திரம்? நாம் சிறுமையை அல்லவா உணருகிறோம். சர்வக்ஞர் அதாவது வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவர் அவர்கள். இந்த மகான்களது வடிவத்தை உருவாக்கிய சிற்பி தன்னையே ஒரு சித்த புருஷனாக மாற்றிக் கொண்டு தனது தியானத்திலே கண்ட தெய்வீக உருவங்களைக் கல்லிலே வடித்திருக்கிறான்.
இந்த உருவங்களிலே உடற்கூறோ அவயப்பொருத்தமோ இல்லைதான். ஆனால் அந்தச் சிலைகளின் மூலம் சாந்த ரசத்தை அல்லவா அவன் அள்ளிப் பொழிந்திருக்கிறான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 300 வருட கால இடைவெளியிலே முன்னும் பின்னுமாய் இவை சமைந்தனவேணும் வேறுபாடு எதுவுமின்றி ஒரே அச்சில் வார்த்தார்போலத் தோன்றும் இவற்றின் ஒருமையும் ஒருங்கிணைப்பும் வியப்புக்குரியன.
கல்வெட்டுக்கள் தரும் செய்தி
ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் வட்டெழுத்தில் வாசகம் உள்ளது ஒரு வாசகத்தால் கழுகுமலைக்குத் திருமலை என்ற பெயரும் அந்தக் கிராமம் நெச்சுர நாட்டுத் திருநெச்சுரம் என்று வழங்கப் பட்டதும் புலனாகிறது. சமண சமயச் சித்தாந்தங்களை நாள் தோறும் விளக்கிக் கூறுவதற்காக “பதின்மர் வயிராக்கியர்க்கு” ஆகாரத்தானமாக நிலபுலங்கள் விட்ட செய்தி மற்றொரு கல்வெட்டால் புலனாகிறது. ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் அதைச் செதுக்குவித்தவர் பெயரும் முகவரியும் பொறிக்கப்பட்டுள்ளன. இதோ இந்தச் சிற்பத்தைச் செய்தது யார் தெரியுமா? திருநறுங்கொண்டை பலதேவ குறவடிகள் மாணாக்கர் கனகவிசயை. திருநறுங்கொண்டை தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ளது. இதோ இந்தச் சிற்பத் தொகுதிகள் யாவும் திருசாரணத்துக் குறத்திகள் செய்வித்த திருமேனிகளாம்.
இங்கே காணப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களும் சிற்பங்களும் கி.பி. 8,9, 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவை புலப்படுத்தும் செய்திகள் யாவை? மிகப் பெரிய பல்கலைக் கழகம் ஒன்று பிரபலமான பேராசிரியர்களைக் கொண்டு முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் தொடரந்து கழுகுமலையில் இயங்கி வந்திருக்கிறது. தொலைதூரத்திலிருந்து வந்து, அங்கே கல்வி பயின்று வெளியேறிய ஆசிரியர்கள் பலர், முனிவர்கள் பலர், வணிகர்களும் உழவர்களும் பற்பலர். ஆண்களே அன்றிப் பெண்களும் அங்கு மாணவிகளாகவும் ஆசிரியர்களாகவும் இருந்திருக்கின்றனர். இவர்கள் அனைவருமே போட்டிபோட்டுக் கொண்டு கழுகுமலையைச் சிற்பங்களால் அலங்கரித்திருக்கின்றனர்.
சமணத் துறவிகளிடையே ஆண் பெண் பாலார் சேர்ந்து கல்வி பயில்வது என்ற கூட்டுக் கல்வி முறை இருந்ததா? இருந்தது என்று சொல்வதற்கில்லை. மடாலயங்களில் ஆண், பெண் துறவிகளுக்குத் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. எனினும் கல்வி பயிற்சியிலே ஓரளவு தேர்ச்சி எய்தியபின் நிபுணத்துவம், தனிப்பெரும் புலமை கருதி ஆண்களான குரவர்கள் ஆசாரியப் பெண்களைச் சீடராகக் கொள்வதிலோ, பெண்களான குரத்திகள் ஆண்களைச் சீடர்களாகக் கொள்வதிலோ தவறில்லை என்று கருதப் பட்டதைத் தான் கழுகுமலைக் கல்வெட்டுக்கள் புலப்படுத்துகின்றன.
“பைந்தொடி மகளிராவார் பாவத்தால் பெரிய நீரார், பேடி, அலி, குருடு இவர்களைப் போன்றது தான் பெண் பிறவியும். துறவு பூண்டு, மனத்தையடக்கி, உடலை வருத்தித் துன்பம் பொறுக்கும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் வீடுபேறு அடைதல் இல்லை” என்பர் திகம்பர சமணர். தமிழகத்திலே திகமபர சமணம் தான் நிலவியது எனினும் கழுகுமலைக் குரத்திகளைக் கருதும்போது வைராக்கியத்துடன் முயன்றால் பெண்களும் விடுபேறு எய்துதல் கூடும் என்ற கொள்கையை மேற்கொண்டது தமிழகத் திகம்பர சமணத்தின் சிறப்பியல்பு ஆகிறது.
உதவிய நூல்
1. திரு A.P.C. வீரபாகு அவர்களின் மணிவிழா மலர்.