( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )
’கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடுமை இளமையில் வறுமை’ என்றார் ஒளவை. ராமையாவிற்குப் பிறப்பிலிருந்தே வறுமை பிடித்துக் கொண்டிருந்தது. தாய், தந்தை, உடன் பிறந்தோர் ஐவர் எனக் குடும்பம் பெரிதாக இருந்தது. அண்ணன்மார் நால்வரும் படிக்கவில்லை. படிக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் சிறுவன் ராமையாவுக்கு மட்டும் எப்படியாவது படிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வத்தலக்குண்டில் இருந்த ஜில்லா போர்டு நடிநிலைப்பள்ளியில் மூன்றாம் பாரம் ( அதாவது எட்டாம் வகுப்பு ) படித்து முடித்தார். உபகாரச் சம்பளத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டு வாரச்சாப்பாட்டுக்கும் இடம் பிடித்துக் கொண்டு மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் நான்காம் பாரத்தில் ராமையா சேர்ந்தார். இத்தனை அரிய முயற்சிகளுக்கு இடையில் கல்வியைத் தொடர்ந்த சிறுவன் ராமையாவால் நான்காவது பாரத்தின் தேர்வை எழுத இயலவில்லை. அந்தநேரத்தில் பன்னிரண்டாம் வயதில் தன் தாயை இழக்க நேரிட்டது. தாயை இழந்த நிலையில் கல்வியைத் தொடர முடியாத நிலையில் ராமையா 1921 ல் சென்னைக்கு வந்தார்.
காந்திய நெறியில் பற்றுறுதியும் தேச விடுதலையில் செயல் உறுதியும் கொண்டிருந்த தேசிய எழுத்தாளராகத் திகழ்ந்தார். 1933 ஜனவரியில் ‘ஆனந்த விகடன்’ நடத்திய சிறுகதைப் போட்டியில் சங்கு சுப்பிரமணியன் வற்புறுத்தி எழுதுமாறு தூண்டியதன் பேரில் கலந்து கொண்ட ராமையா ‘மலரும் மணமும்’ என்ற சிறுகதை எழுதிப் பரிசும் பெற்றார். பி.எஸ். ராமையா 1956 முதல் 1970 வரை பல நாடகங்கள் எழுதிக் கொடுத்தார்.
இலக்கிய வடிவங்களில் சிறுகதை, நாவல் ஆகியவற்றை விட அதிக அழகுக்கு இடம் கொடுக்கும் வடிவம் நாடக வடிவம் என உணர்ந்தார். அலிப்பூர் சிறையில் சந்தித்த தேசபக்தர் டி.வி. சுப்பிரமணியத்தின் தங்கை சரஸ்வதியைத் திருமணம் செய்து கொண்டார். புதுமைப்பித்தனும் அவருடைய மனைவி கமலாவும் முன்னின்று இத்திருமணத்தை நடத்தி வைத்தனர்.
‘காந்தி’ ‘ஐயபாரதி’ ‘மணிக்கொடி’ போன்ற இதழ்களில் சிறுகதைகளை எழுதி வந்தார். ‘பூலோக ரம்பை’ ‘மதன காமராஜன்’ ‘மணிமேகலை’ ‘பக்தநாரதர்’ ‘குபேரகுசேலா’ ‘பரஞ்ஜோதி’ ‘அர்த்தநாரி’ ‘தன அமராவதி’ ‘விசித்திர வனிதா’ போன்ற திரைப்படங்களுக்கு வசனம், திரைக்கதை எழுதினார். நாவல் எழுதுவதிலும் சிறந்து விளங்கிய ராமையாவின் சிறந்த படைப்புகளாக ‘பிரேம ஹாரம்’ ‘தினை விதைத்தவன்’ ‘நந்தா விளக்கு’ ‘சந்தைப் பேட்டை’ போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
1905 மார்ச் 24 அன்று பிறந்த பி.எஸ். ராமையாவுக்கு 1965 ல் மணிவிழாக்கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு பி.எஸ்.ராமையா மணிவிழா மலர் என்ற மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. மணிவிழாவிற்குக் காமராசர் தலைமை ஏற்றார்.
மணிவிழாவிற்குப் பிறகு பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்திருந்த பி.எஸ். ராமையா தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டுச் சென்னையில் 18.05.1983 ல் காலமானார். வத்தலக்குண்டு மஞ்சள் ஆற்றில் – யானைக் கல்லின் மேலேயிருந்து குதித்துக்குதித்து விளையாடித் தொடங்கிய வாழ்க்கை ஆட்டம் அல்லது ஓட்டம் எழுபத்து எட்டாம் வயதில் நிறைவு பெற்றது. மணிவிழாவுக்குப் பின்னரும் மரணத்திற்கு முன்னரும் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்ச்சிகள் பி.எஸ். ராமையா எழுதி முடித்த ‘மணிக்கொடிக் காலம்’ வெளியிடப்பட்டதும் அந்த நூலுக்கு 1982 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்ததும் ஆகும்.
நன்றி :
ஜனசக்தி
30 அக்டோபர் 2009